வரன் 22

 




அதிகாலை அழகாய் புலர, மெல்ல கண்விழித்தாள் மேகவர்ஷினி. அழுது கொண்டே படுத்திருந்ததால் கண்களிரண்டும் எரிய, தலை விண்ணென்று தெறித்தது. இதற்கெல்லாம் காரணமானவன் அந்த மிளகா தான் என்று காலையிலே அவனை கடிந்தாள். தன் போனை சுவிட்ச் ஆன் செய்தவள் போன் ஆன்னானதும் எடுத்துப் பார்க்க, வெறும் " குட் நைட்" என்று தாங்கிய குறுஞ்செய்தி மட்டுமே தான் அவனிடமிருந்து வந்திருந்தது.


அதைக்கண்டு இன்னும் ஆத்திரம்  கூடியது அவளுக்கு.  'ஓ சாருக்கு மறுபடியும் அடிச்சிக் கூப்பிட தெரியாதோ ! குட் நைட்டாம்  குட்  நைட் யார் அழுதா உங்க குட்  நைட்க்கு? போயா மிளகா !' எனக் கடுகடுத்தவள், போனை சுவிட்சாப் செய்ததை மறந்து போனாள்.


நேற்று "தூக்கம் வருது "என்று சொல்லி அழைப்பை வைத்தவளுக்கு தெரியவில்லை போனை முழுதாய் அணைத்து வைத்து விட்டோம் என்று.அந்த மக்கு டீச்சர் போனை சுவிட்சாப்  செய்த விடயம் அவன் வாயால் கேட்டால் தான் விளங்கும் போலிருக்கிறது.


பழிப் போட ,ஓர் அடிமைக் கிடைத்தப் பின் சொல்லவா வேண்டும் அவன் நின்றாலும் உட்கார்ந்தாலும் படுத்தாலும் குற்றம் என்று எளிதில் பழியைப் போட்டு விட்டு தன் தவறுக்கு சேர்த்து தண்டனைகளைக் கொடுத்து விடுவது தான  உலக ப(வ)ழக்கம்.


வேகமாகப் போனிலுள்ள அவனது புகைப்படத்தில் அவன் முகம் பார்த்தவள், அவன்  புன்னகையில் லேசா மயங்கித்தான் போனாள். " மாயக்காரன் டா சிரிச்சே மயக்கிடுற !  பேசியும் கூட,  ஆனால் நானெல்லாம் உன் கிட்ட மயங்க மாட்டேனாக்காகும்" என்று பிகு செய்தவளுக்கு தெரியவில்லை அவனது பேச்சுக்கு 'ஃபேனாக்கும் நானு' என்ற  ரைமிங் டயலாக்கை. ' ஏதே நீ  மயங்கல ! காலையிலே சிரிப்பு டீச்சர்  சிரிப்பு காட்டாம  போய் வேலைய பாருங்க' மனசாட்சி கவுண்டர் கொடுக்க அதனையும் தட்டி உள்ளே அனுப்பி விட்டு தன் வேலையைப் பார்க்கச்  சென்றாள்.


காலையிலே முகம் கடுகடுக்கக் கிளம்பி வந்தாள் மேகா" என்ன மேகா என்னாச்சி உன் முகமே சரியில்ல? நேத்து சந்தோசமா தான தூங்க போன  இடையில என்னாச்சி?" தனம் தன் மகளின் வதனம்  கண்டு கேட்க, " அதெல்லாம் ஒண்ணுமில்லமா காலையிலே சீக்கிரமா முழிப்புத் தட்டி தூக்கம் போயிடுச்சி அதான் அப்படி இருக்கு.  வேற ஒன்னுமில்ல" என்று  பேக்கில் லஞ்ச் பாக்ஸை வைத்தவள், பையை மாட்டிக் கொண்டு வெளியே செல்ல வேடிக்கைப் பார்த்து  நின்ற நேகா, அவளைப் பின் தொடர்ந்தாள். அவள் வண்டியை இயக்க அவள் பின்னே அமர்ந்தவள்," பெருமாளே ! நல்லபடியா ஸ்கூலுக்கு கொண்டு போய் சேர்ந்திடு என்னை. உனக்கு ஒரு நெய் விளக்கு போடுறேன்" அவள் காதுபடவே வேண்டினாள். சட்டென திரும்பி தன் தங்கையை பார்த்தவள், " ஏய்  ! எதுக்கு இப்ப நெய் விளக்கு போடுறேன் வேண்டற?" 


"பின்ன நீ இருக்க கோபத்துல வண்டிய வேகமாக ஓடிட்டி புளிய மரத்தில  விட்டேனா அதுக்கு தான் இந்த வேண்டுதல்" என்றவளை முறைத்தவள் "நானே நினைச்சாலும் இந்த வண்டி அவ்வளோ ஸ்பீட்டெல்லாம் போகாது  மூடிட்டி வா" என்று வண்டியை திருக அது  நேராக பள்ளியில் சென்று தான்  நின்றது. வண்டியைத் தரிப்பிடத்தில் நிறுத்தி வைத்து விட்டு, வந்தவளிடம் விசாரணைப் படலத்தை ஆரம்பித்தாள் நேகா.

"என்னாச்சி மேகா, ஏன் காலையிலே சிடுசிடுனு இருக்க?" 


"பச் ! கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்க மாட்டார் சொல்வாங்கள அந்தக் கதை தான் இங்க. அப்பாவே போக ஒத்துக்கிட்டார்,  உன் மாமாவும் கண்டிப்பா ஒத்துப்பார்னு நினைச்சேன், கடைசி நிமிசத்துல அவரை நம்பி ஏமாந்துட்டேன். போக வேணாம் சொல்றார்டி. செம்ம கோவம் வந்துடுச்சி ஏன்னு கேட்டால் நாளைக்கு மீட் பண்ணலாம்ங்கறார். ரீசனைச் சொல்லாம போக வேணாம் சொன்னால் என்ன நினைக்கிறது?  அதான் போனை வச்சிட்டேன் எந்த ரிப்ளை பண்ணல"  என்றாள் பால்ய வயது பெண்ணைப் போல்.


நேகாவிற்கும் இது அதிர்ச்சி தான். மாமாவின் மேல் அத்தனை நம்பிக்கையில் இருந்தாள். அவன் இவ்வாறு சொன்னால் கோபம் வருவது சரி தானே ! பாவம் ஆசையாக அவன் போக சொல்லக் காத்திருந்தாள். இப்போ அவன் இப்படிச் சொல்ல , அவளது குட்டி மனசு என்னாகும்? அதை எண்ணி அனுதாபம் கொண்டாள் நேகா.


"சரி மேகா ! அப்போ  நீ  இன்னைக்கி பேர் கொடுக்க மாட்டீயா?"சோகமாகக் கேட்டாள். "ஏன் கொடுப்பேனே, அவர் சொன்னால் போகாம இருக்கணுமா? முடியாது நான் என் பெயரை கொடுப்பேன்"  என்று  முறுக்கிக் கொண்டு முன்னே சென்றாள்.


காலைப் பிராத்தனையில் கொஞ்சம் சாந்தமானவள், மீண்டும் கோபம் தலைகேறியது, டூர் போக பெயர் லிஸ்ட்  கேட்டு வந்தவர்களை கண்டு.ஸ்டாப் ரூமில் அமர்ந்த அனைவரும் அவரவர் பெயரை கொடுக்க, நேகா, மேகா இருவரும் கொடுக்க அஞ்சினர்.


' என்னமோ பெருசா பெயர் கொடுப்பேன் சொன்னாள். இப்போ திரு திரு முழிக்கறா !'மேகாவின் நிலயை எண்ணி  நகைத்தவள் , லிஸ்ட் கொண்டு வந்த அக்காவிடம், " அக்கா பெயர் நாளைக்கு கொடுக்கிறோம் கா" அவரை அனுப்பி வைத்து விட்டு, "என்னடி ஆச்சி ஏன் பெயர் கொடுக்கல?" என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்டாள்." அவர் சொன்னதையும் மீறி பெயர் கொடுக்க மனசு வரலடி,  ஏதாவது காரணம் இல்லாமலா போக வேணாம் சொல்லிருப்பார்.  என்னான்னு கேட்டே கொடுக்கலாம்னு விட்டுட்டேன்" என்றவளை வாஞ்சையாகப் பார்த்தவள் ஆரன் மேல் வைத்த காதலை எண்ணி தேகம்  சிலிர்த்தாள் நேகா. இதற்கு முன் தந்தையின் மேலுள்ள பயத்தில் மறுக்கும் மேகா இன்று காதலுக்காக மறுப்பதைக் கண்டு ஆச்சர்யம் கொண்டாள். 


"என்னங்கடி மருமகள்களே பேரு கொடுத்திட்டீங்களா?"எனக் கேட்டு வந்தார் அன்பு." ம்க்கும் உங்க புள்ள போக வேணாம்  சொன்னதுக்கு அப்றம் எங்கிட்டு பேர் கொடுக்க?" சிலுப்பிக் கொண்டாள் மேகா.


"யாரு ஆரனா, போக வேணாம் சொன்னான். ஏன் அப்படி சொன்னான்?" அதிர்ச்சியாக கேட்டார்." என்னானு தெரியல போக வேணாம் சொல்லிட்டார். என்ன பிள்ள வளர்த்திருங்களோ ! பொண்டாட்டி ஆசைய கூட நினைக்க மாட்டிக்கிறார். சொல்லி வைங்க உன் புள்ள கிட்ட  பொண்டாட்டி சொன்னதும் சரினு சொல்லி ஆமா சாமி போட சொல்லுங்க" என்று மாமியாரான அன்புவிற்கு இடி கொடுத்து விட்டு போனாள் மேகா. நேகாவும் அன்புவும் சிரித்துக் கொண்டனர்.


மாலை ஆகிட, இருவரும் அவனது வருகைக்காகக் காத்திருந்தனர். எப்பொழுதும் வேகமாக வருபவன் இன்று தாமதமாக வந்தான். அவன் வந்ததும் நேகா எழுந்துக் கொள்ள, அவளை அங்கே அமரச் சொன்னான்.


"என்ன மாம்ஸ் ஆச்சர்யமா இருக்கு !எப்பையும் என்னை அங்க தான போக சொல்வீங்க, இப்போ என்ன இங்கே உட்கார சொல்றீங்க. என்ன உங்க பொண்டாட்டிக்கு தூது போகணுமா?" நக்கலாகக்  கேட்டாள்.


"ச்ச  ! நீ ஏன் டால் தூது போகணும் ?  என் பொண்டாட்டி என் கிட்ட பேச மாட்டாள். உன் கிட்டடையாவது பேசிட்டு இருக்கலாம் தான் இருக்கச் சொல்றேன்.  இரு ! நாம கடலை போடுவோம்" என்று  அவள் பக்கமாக அமர, இருவரையும் பார்க்க பத்திக் கொண்டு வந்தது அவளுக்கு.


"என்ன மாமஸ் லைட்டா பத்த வச்சத்துக்கே இப்படி கருகற வாசனை வருது?" என மேகாவைப் பார்த்து சொன்னாள் " இ..ல்..ல ! பார்த்து குடல் எல்லாம் வெந்திட 

போகுது !" என ஓர பார்வையில் அவளை  கேலி செய்ய, 


" குடல் வெந்தா உங்களுக்கு என்ன ? நீங்களும் உங்க மச்சினிச்சியும்  கடலை போடுங்க" என்று எழுந்து செல்ல இருந்தவளின் கைகளைப் பிடித்து தன பக்கம் அமர்த்திக் கொண்டு விடாமல் கையைப் பிடித்துக் கொண்டான்.


"கோபத்துல கூட  என் சக்கர ஆப்பிள் போல் சிவந்திருக்காளே அவள அப்படியே கடிச்சி திங்கணும் போல இருக்கு, திங்கட்டுமா சக்கர !" எனக் காதருகே அவளுக்கு மட்டும் கேட்கச் சொன்னவன் காது மடலை மேலும் சிவக்க வைத்தான்.


"ஹலோ மாம்ஸ் ! என் கூட கடலைப் போடணும் சொல்லிட்டு அங்க என்ன ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க !"  செல்லமாகக் கோபம் கொள்ள, " என்ன பண்றது  உன் கூடக்  கடலை தான் போட முடியும் ரொமான்ஸா பண்ண முடியும் ? ஆனா என் பொண்டாட்டி கிட்ட தான் ரொமான்ஸ் மட்டும் தான பண்ண முடியும்" என்று ஒற்றைக் கண்ணை அடிக்க அவளோ இதழைச் சுளித்து கொண்டு திரும்பினாள்.


"என்ன சார் வேணும் ?" ஆடர் எடுக்க வர, "என் மனைவி ரொம்ப ஹாட்டா இருக்காள். அதுனால அவளுக்கு ஒரு கோல்ட்காபி. என் மச்சினிச்சி நானும் கூலா தான் இருக்கோம் அதுனால எங்களுக்கு ஒரு ஹாட் காபி"  என்று ஆடர் செய்ய, அவர் சிரித்துக் கொண்டு நகன்றதும், " உங்களை..." தன் கை பையால் அடித்தாள். 


"ஒரு கவர்மெண்ட் ஆபிஸர்டி நான். என்னை அடிச்சால் தமிழ்நாடே பத்திட்டு எரியும்டி" என்று அடிவாங்கிக் கொண்டே கதைத்தான், " ஆமா ஆமா எரியும் இவரை அடிச்சா தமிழ் நாடே எரியும். நீங்க இப்போ ஆபிஸர்  இல்ல என் புருஷன் தாராளமா அடிக்கலாம்" 


"அப்பையும் பப்ளிக் பிளேஸ்ல புருஷன அடிக்கறனு ஆண்கள் சங்கம் உன் மேல் பாயும்டி" என்றவனை இன்னும் அடித்தாள். சரியாக அங்கே வந்தான் தீனா ." என்னா சகல பூஜ நடக்குது போல"  என  கேலியாக கேட்டுக் நேகா அருகில் அமர, அவனை அதிசயமாய் பார்த்தாள் நேகா.


"யோவ் சகல !  காப்பாத்துவனு பார்த்தால் கேலிச் செஞ்சிட்டு நான் வாங்குறத கண்டு களிக்கற !" அவள்கையைப் பற்றி கொண்டே தீனாவைப் பார்த்து கேட்டான்.


"எங்க வீட்டுப் பொண்ண எவ்வளவு அருமையா வளர்ந்திருக்கோம் கண் குளிர பார்த்தேன் சகல !"என  நக்கல் செய்ய, "அப்டியா ! இப்போ நானும் பார்க்கிறேன்" என்றவன், " என்ன நேகா ! சகல கூட  நீயும் இப்படி  காஃபி சாப்'பிக்கு போயிருக்கியா, எனக்கு தெரிஞ்ச நான் அப்படி கேள்வி பட்டதே இல்லயே !" என அவன் பத்த வைக்க, " பத்த வச்சிட்டீயே பரட்ட !" அவனைப் பாவமாக தீனா பார்க்க, அவனோ ' கண்ண குளிர பார்க்கிறீயா  இருடா உனக்கு  இப்போ உடம்பே குளிரும் ' "நேகா ஏன் வெயிட்டிங் பூஜைய ஸ்டார்ட் பண்ணு !" என்றதும் தீனாவைச் சாத்தினாள்.


"மாடு மாடு தடிமாடு ! காதலிக்கிறேன் தான் சொல்லிக்குவான்.  ஆனா ஒரு மண்ணும் தெரியாது. என்னைக்காவது  வெளியக் கூட்டிப் போய் ஒரு வடை வாங்கித் தந்திருப்பானா?  இவனை வச்சி எப்படி தான் நான் காலம் தள்ள போறேனோ !" என புலம்ப, தீனா ஆரனை முறைக்க அவனோ சிரித்தான்.


"கொஞ்சம் இந்த விளையாட்டை  நிறுத்திட்டு விஷயத்துக்கு வாங்க  ! எதுக்கு என்னை வர சொன்னீங்க ?" என்றுகோபமாக கேட்டவளை ரசித்தவன், மேலும் முறைப்பில்  வந்த விஷயத்தை சொன்னான்.

"நாம் நாலு பேரும் டூடேஸ் ஆவுட்டிங் போலாம். அதுவும் நீங்க டூர் போறதா சொல்ற அந்த நாள்ல போயிட்டு வரலாம்" என்றதும் இடைப்பட்ட நேரத்தில்  காஃபி வர வாயில்  ஒரு மிடறு வைத்தவளுக்கு, புரையேற வெளியே துப்பிவிட்டாள் நேகா

Comments

  1. Tour தான. நான் ஏதோ வில்லங்கமோன்னு நினைத்தேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2