வரன் - 12

 



நேகாவின் தீண்டலில்  நேற்றைய நினைவிலிருந்து வெளியே வந்தாள் மேகவர்ஷினி. "என்னாச்சி மேகி? என்ன யோசிச்சிட்டு இருக்க நீ?"


"ஆஹான் ! ஒன்னும் யோசிக்கலடி"என்றவள் ஆரனிடம் பேசியதை அவளிடம் சொல்லாமல் மறைத்தாள். "ம்ம்... சரி சொல்லு ! முன்னாடியே உனக்கு மாமா சேரி எடுத்த விஷயம் தெரியுமா?"


"ம்ம்ம்... தெரியும்டி. நேத்தே வாட்ஸ்ப்ல புடவைய முழுசா வீடியோ எடுத்து அனுப்பி உனக்கு புடிச்சிருக்கானு கேட்டார். எனக்கு பிடிச்ச ப்ளு கலர் வேற பார்த்ததும் பிடிச்சது, பிடிச்சிருக்குனு சொல்லிட்டேன்.  அவர் என்கிட்ட எல்லாத்தையும் நேத்தே  சொல்லிட்டார்"என்றாள் அசட்டையாக,


"அப்போ ட்ரெஸ் எடுக்க வந்த எங்களை, உன் வருங்கால புருஷனும் நீயும் சேர்ந்து ஜோக்கர் ஆக்கிட்டீங்க.என்னை விடு ! அங்க பாரு அந்த நாலு அப்பாவி லேடீஸ், காலம் போன காலத்துல கன்ஃபுசனாகி பிரஸர ஏத்திக்கிட்டு கிடக்குத்துங்க இதெல்லாம் தேவையா உங்களுக்கு?!"கையை விரித்து கேட்டவளிடம் உதட்டைப் பிதுக்கி'இதுக்கு  எனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல ' அசட்டையாக தோளைக் குலுக்கினாள். அவளை முறைத்து விட்டு மீண்டும் அவர்களுடன் ஐக்கியமானாள்.


தேவகி தன் மகன் ஆரனை, புடவை செக்ஸனுக்கு வருமாறு அலைபேசியில் அழைத்தார்.' இதற்கு தானே காத்திருக்கிறேன் 'என்பது போல அலைபேசியை பேக்கெட்டில் வைத்து விட்டு தந்தையிடமும் மாமனாரிடமும் சொல்லிவிட்டு கீழே இறக்கினான்.

அவன் வரும் வரைக்கும் மற்றவர்களுக்கு புடவை  எடுத்துவிடலாம் என்று பார்க்க ஆரம்பித்தனர் பெண்கள் அனைவரும்.


"குட் மார்னிங் ஸார்"என்று சேல்ஸ் மேன் ஆரனை கண்டு வணக்கம் வைக்க, பெண்கள்  அனைவரும் ஆரனைத்தான் கண்டனர். தன் மாமியார் இருவரையும் மேகாவின் அத்தையையும் மரியாதை நிமித்தமாக வணக்கம் வைத்தவன் மேகா நேகாவை சின்ன சிரிப்புடன் பார்த்தான்.


"மகனே ! நான் பொண்ணுக்கு புடவை எடுத்துட்டேன். நீங்க உங்களுக்கு மட்டும் எடுங்க சொல்லிருக்கலாம்ல . ஏன்டா சென்டிமெண்டா பேசி, என் மருமகளையும்  வரவச்சி, வந்தவங்க முன்னாடி என் மானத்த வாங்கற. எதுக்கு டா நீ முன்னாடி இந்தப் புடவையை எடுத்த? ஏன் நாங்க எடுக்க மாட்டோமா? உனக்கு என்ன அதுக்குள்ள அவசரம்?"எனப் பல்லைக் கடித்த படி கேட்டார்.


"எப்படி நீங்க மேகா விருப்பப்பட்ட புடவையை எடுக்க மாட்டீங்க ! உங்களுக்கு பிடிச்ச புடவையா எடுத்துட்டு அவளை கன்வீயன்ஸ் பண்ணி இதான் நிச்சயப் புடவைனு முடிச்சிடுவீங்க. அவளை நான் கூப்டுங்க சொல்லாம விட்டால் அப்படி தான நீங்க பண்ணிருப்பீங்க. அவளா அவளுக்குப் பிடிச்ச புடவைய நிச்சயத்துக்கு எடுக்கணும் தான் நான் அவளை வர சொன்னேன் மா" தன் அன்னை மாமியார் இருவரையும் அறிந்து தான் சொன்னான்.


"வர சொன்ன சரி ! ஆனா நீ மட்டும் என்ன பண்ணி வச்சிருக்க? அவளுக்கு பிடிச்சிருக்கா? பிடிக்கலையா? என் மருமக  கிட்ட கேட்டீயா?  நீயா எடுத்து அதுக்கு பணத்த வேற கட்டி வச்சிருக்க, இது மட்டும் நியாயம் பாரு !"என சலித்துக் கொண்டார்.


"அவளுக்கு பிடிச்ச கலர் ப்ளூனு எனக்கு தெரியும் அதுனால தான் இந்தப் புடவைய எடுத்தேன். இந்த புடவை பிடிச்சிருக்கானு நீங்களே உன் மருமக கிட்ட  கேளுங்களேன் என்ன சொல்றானு பார்ப்போம்?"என வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த மேகாவை உள்ளிழுந்தான்.அவளும் ' பே' வென அவர்களை பார்த்தாள்.


"மருமகளே  இங்க வா ! " என அழைத்தவர்,தன் அருகே நிற்க வைத்தார். ஆரனுக்கு மேகாக்கும் நடுவில் நின்று கொண்டவர் மேகாவிடம்" சொல்லு மா உனக்கு  இந்தப் புடவை பிடிச்சிருக்கா? என் பையன் பணம் கொடுத்துட்டான் நீ  பிடிச்சிருக்குனு சொல்லணும் இல்லம்மா. இது இல்லேன்னா வேறனு உனக்கு பிடிச்சதா மாத்திக்கலாம், நீ சொல்லு மா !" என பரிவாகக் கேட்டார்.

"எனக்கு இந்தச் புடவை ரொம்ப பிடிச்சிருக்கு அத்தை. பார்க்க ரொம்ப அழகா இருக்கு !" என்றாள். ஆரனைக் காதலாக பார்த்து விட்டு. 


"தங்கச்சி... வருங்கால புருஷன விட்டுக் கொடுக்க கூடாதுன்னு பிடிச்சிருக்குனு சொல்லலையே !" ஆரனை வம்பிழுக்க அவளிடம் கேட்டாள் பிரதி "இல்ல அக்கா ! எனக்கு ப்ளூ கலர்னா இஷ்டம். அந்தக் கலர்ல எந்தப் பொருளை பார்த்தாலும் பிடிக்கும். அது போல இந்த புடவையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு "என்றதும் தேவகியும் பிரதியும் முகம் மலர, 


" இந்த புடவையை பிரிச்சி காட்டுங்கப்பா முழுசா பார்ப்போம்" தேவகி மடித்திருந்த அந்தப் புடவையை பிரிக்கச் சொல்ல, சேல்ஸ்மேன் ஆரனைப் பார்த்தார், அவனும் அவரிடம் கண்ணைக் காட்டினார். அவரும் பிரித்து கொஞ்சம் கொஞ்சமாகப்  பிரித்து கட்டினார். அழகாக இருந்தது, கடையில் பொருந்தி இருந்த விளக்குகள் எல்லாம் மேலும் அப்புடவையின் அழகைக் கூட்டிக் காட்டின. 


கடைசியாக முந்தானையை பிரித்து கட்டும் போதும் அதில் ஆரன் மற்றும் மேகவர்ஷினியின் பெயரும் இடையில் ஒரு இதயமும் தைத்திருக்க, அதை கண்டவர்கள் அனைவரும் வாயை பிளந்தனர். மேகா கூட அப்படித்தான் நின்றாள். நேற்றே அவன் சொன்ன 'சின்ன  சப்ரைஸைக்' கண்டு பெண்ணவள் கண்கள் காதலைப் பனித்தன. 


புருவத்தை உயர்த்தி, 'எப்படி ?'என்று கேட்க, யாருமறியாமல் உதட்டை குவித்து 'சூப்பர்' என்றவள் மூன்று கைகளாலும் அதை மொழிந்தாள். நெஞ்சில் கைவைத்து  தலையை தாழ்த்தினான்.


சேலையை விழியாகற்றாமல் பார்த்தவர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்குமா என்ன? அதிலும் கனகா, தன்னருகில் நின்ற நேகாவை இடித்து"மேகா ! அந்தப் பையன் கூட போன்ல எதுவும் பேசுறாளாடி"என சந்தேகமாகக் கேட்டார்.


அவர் அவ்வாறு கேட்டதும் இருமல் வந்தது போல இறுமியவள், "மா... அவ பத்து மணி வரைக்கும் நம்ம கூட தானமா பேசிட்டு இருப்பா ! சரியா ஐஞ்சு மணிக்கு வீட்டுக்கு வந்திடுறோம். இதுல எந்த நேரத்துல அவளுக்கு பேச நேரமிருக்கு? அப்படியே நேரமிருந்தாலும் உங்க மாமாவோட பேச்சை மீறி அவ அவர்கிட்ட பேசிடுவாளா?  இல்ல நீங்க தான் பேச விடுவீங்களா? இந்தக் காலத்துக்கு சுத்தமா சம்பந்தமில்லாத குடும்பம் நம்ம குடும்பம். டேவல்பாகாத குடும்பத்துல அவ மட்டும் அப்டேட் ஆகிடுவாளா என்ன?" கிடைத்த இடத்தில் குடும்ப மொத்தத்தையும் வாரினாள் நேகா. 

அவளை முறைத்துவிட்டு திரும்பிக் கொண்டார் கனகா.


"ஏன் கொழுந்தரே ! எங்களுக்கும் தான் கல்யாணம் நடந்தது, இந்த மாதிரி ஐடியா  கொஞ்சம் கொடுத்திருக்கலாம்ல"என்ற பிரதியை நன்றாகப் பார்த்தவன்,  "அதெல்லாம் சுயமா யோசிக்கணும் அண்ணி ! இன்னொருத்தர் ஐடியா கொடுத்து வரக்கூடாது"என்றவனை பொய்யாக முறைத்தவள்,


"மகூகும்... தனக்கு கல்யாணம்ன்ற நினைப்பு கூட இல்லாம மாட்டுக்கு வைத்தியம் பாக்கணுமேனு கிடந்த மனுஷனுக்கு எங்க இந்த மாதிரியெல்லாம் தோணப் போகுது. கடைசி நிமிஷத்தில் நமக்கு கல்யாணமானு கேட்ட அந்த மனுசர் கிட்ட இதெல்லாம் எதிர்பார்க்கிறது ஆத்துல விழுந்த செம்பு கிடைக்கும் நினைக்கறதுக்கு சமம் கொழுந்தனாரே !"சலித்துக் கொண்டாள்.


"ஹாஹா ! மாட்டு டாக்டர் கிட்ட மாட்டிக்கும் முன்ன யோசிச்சி இருக்கணும் அண்ணி!  இப்போ ஃபீல் பண்ணி,  நோ யூஸ்  !" என்றவன் தனக்கு உடையை எடுக்கச் சென்றான். 


குணசேகரன், ஆரனிடம் சிறு பிள்ளையிடம் கேட்பது போல என்ன உடை வேண்டும் என்று கேட்டிட, சமத்தாக வொயிட் ஷர்ட்டும் ப்ளூ ஜீன்ஸூம் வேணும் என்று கேட்டான்.


"ஏன் மாப்பிள்ளை கோட் சூட் எடுத்துக்கலாம்ல !"  என்ற கங்காதரனை கண்டவன் அவர் வேலையை தன்னிடம் காட்டுவது போலிருக்க, அதற்கு இடம் கொடுக்காமல்"இல்ல மாமா எனக்கு சிம்பிள்ளா இருக்கத் தான் பிடிக்கும். நான் பிஸ்னஸ்  மேன் இல்லையே ! சாதாரண கவர்மெண்ட் ஆபீசர் சிம்பிளா இருக்கறது தான் எனக்கு நல்லது" என்று முடித்துக் கொள்ள, அவருக்கு தான் ஏதோ போலானது. குணசேகர்  சற்று அதிர்ந்து விட்டு கங்காதரனை சிரித்து பேசி 

சமாதானம் செய்து உடையெடுக்க என்று கவனத்தை திசை திருப்பினார். 

ஒருவழியாக ஆண்களுக்கு எடுத்து விட்டு கீழ வர பெண்களும் எடுத்திருக்க மொத்தமாக பில் போட காத்திருந்த வேளையை உபயோக்கித்து கொள்ள எண்ணினான் ஆரன்.

மணிமாறன் ,  தீரன், நேத்திரன் பணம் கட்டச் செல்ல பெண்கள் கூட்டமும்  அவர்கள் அருகில் கங்காதரனும் குணசேகரனும் நின்றிருந்தனர். "அப்பா மாமா !"என அழைத்து அனைவரின் முழு கவனத்தை தன் பக்கம் திருப்பினான். 


"அப்பா, அவங்க பில் போடற நேரமாகும் அதுக்குள்ள நானும் மேகாவும் பக்கத்தில இருக்க கடைக்குப் போயிட்டு எங்கேஜ்மெண்ட் ரிங் வாங்கிட்டு வர்றோம்" என்று நேரத்தையும் இடத்தையும்  கணித்து தன் ஆசையை சொன்னான்.

"எங்கேஜ்மெண்ட் ரிங்கா? மோதிரம் மாத்திக்கற வழக்கம் நமக்கு இல்ல  தெரியும் தான ஆரா?" என  அடக்கப்பட்ட கோபத்தில் கேட்டார். 


"தெரியும் பா ! ஆனா மோதிரம் மாத்திக்கணும்ங்கறது என் ஆசை " என்றான் அழுத்தமாக,"உன் ஆசைக்காக வழக்கத்தை மாத்திக்கணும் நினைக்கிறீயா?" 


"நான் வழக்கத்தை மாத்திக்கணும் சொல்லல ப்பா, வழக்கமா பண்றதோட  இதையும் சேர்த்துக்கலாம் சொல்றேன்" என்றான்.


"உங்க இஷ்டத்துக்கு எல்லாம் செய்ய முடியாது மாப்பிள்ளை. இப்படி எல்லாம் பண்ணத்தில்ல நாங்க !"என்று இடையில்  நுழைந்தார் கங்காதரன்.


"ஆனா மாமா !  இந்த எங்கேஜ்மெண்ட் எங்களுக்கு. என் இஷ்டப்படி பண்ண முடியாதுனா என்ன அர்த்தம் மாமா?" என அவரை எதிர்த்து கேட்க,  கங்காதரனுக்கு  கோபம் முட்டிக் கொண்டு வந்தது. 

கங்காதரனின் கோபமான முகத்தை கண்டு பயந்து போனாள் மேகா. நேற்று சொன்னது போல இருவரும் முட்டிக் கொள்வார்களா? என்று உள்ளுக்குள் பதற்றம் கொண்டாள்.


"ஆரா ! இதை இங்க வச்சி தா பேசனுமா? வீட்ல இருக்கும் போது சொல்லக் கூடாதா?  பொது இடத்துல குடும்ப விஷயத்தை பேசணுமா?" என்று பல்லை கடித்தப் படி கேட்டார். 


"வீட்ல என்கிட்ட கேட்டு எல்லாம் செஞ்சா, நான் ஏன்பா  இங்க பேசப் போறேன்? வேற வீட்ல இருந்தா என்னையும் சொந்தக்காரன போல நிச்சயத்துக்கு வந்திருனு,  கூப்பிடுவீங்க போல... நிச்சயத்துக்கு என்ன பண்ணலாம் கூப்ட்டு உக்காந்து பேசுனீங்களா? ட்ரெஸ் எடுக்கறத தவிர ! ஸாரி பா எனக்கு எங்கேஜ்மெண்ட் ரிங் மாத்திக்கணும் அவ்வளவு தான்"என்றான் முடிவாக,


'இதுக்கு தான் இவனை கூட்டிட்டு வர வேணான்னு சொன்னேன்' என்பது போல தேவகியை கடுமையாக முறைத்தார். தேவகியோ அவருக்கு பயந்து , ஆரனின் அருகில் சென்று, "ஏன்டா இப்படி பண்ற ?  சம்மந்தி வீட்டுக்காரங்க முன்ன ஏன் எங்கள ஆசிங்கப்படுத்தற? அன்னைக்கே எங்கிட்ட சொல்லிருக்கலாம், அப்பா கிட்ட நான் பேசி இருப்பேன்ல இப்ப வந்து அதுவும் இங்க வச்சி பேசணுமா?" அவனுக்கு மட்டும் கேட்கும் படி கேட்டார்.


"அன்னக்கே சொன்னா, ரெண்டு பெருசுங்க, சரினு சொல்ற மாதிரி தான். இன்னைக்கி சொன்னத்துக்கே குதிக்கிதுங்க, அன்னைக்கே சொல்லிருந்த, இப்படி ஒரு விஷயம் கேட்டதாவே  காட்டிக்காம மறைச்சிடுவாங்க ! ஸோ எனக்கு உங்க வழக்கம் பழக்கம் வரையறை எல்லாம் வேணாம் நீ அப்பா கிட்ட பேசி எங்கேஜ்மெண்ட்  ரிங் மாத்த ஒத்துக்க வைக்கற ! இல்ல நானே மேகவா கூட்டிட்டு போய் எடுப்பேன், எனக்கு ரிங் மாத்தியே ஆகணும் அதுக்கு நான் என்ன வேணா பண்ணுவேன் சம்ஜே !" என்று அவரை நெஞ்சடைக்க வைத்தான் ஆரன்

Comments

Post a Comment

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2