வரன் - 10

 




செவியில் அலைபேசியை வைத்துக் கொண்டு வாயைப்பிளந்து நின்றார்  தேவகி. மகன் சொன்ன விஷயம் நெஞ்சை அடைத்து போல் இருந்தது 'இதுக்கே வா' என்பது போல இந்தச் சின்ன விஷயம் கூட அவருக்கு பெரிய  பிரச்சனையாகத் தான் தெரிந்தது.


"மகனே ! சும்மா விளையாட்டுக்கு தான சொன்ன?"என்றார் இளித்தப் படி."அம்மா  ! இதுல என்ன விளையாட்டு இருக்குனு நீ நினைக்கற? நான்  உன்கிட்ட விளையாடல, சீரியஸ்ஸா தான் சொல்றேன். நானும் மேகாவும் இல்லாம நீங்க ட்ரெஸ் எடுக்கப் போக வேண்டாம். அப்படித் தான் போவோம் சொன்னால் உங்களுக்கு மட்டும் எடுத்துக்கங்க. நானும் என் உட்பியும் தனியா போய் எடுத்துக்கறோம்" என்று அசட்டையாக சொன்னான்.


"டேய் விளையாடாத ! அப்பா இதுக்கெல்லாம் சம்மதிக்க மாட்டார். தீரனுக்கு துணி எடுக்கும் போது அவன் உங்க இஷ்டம் சொல்லி, அவன் வரவே இல்ல தெரியும் தான. நீ என்ன புதுசா கேட்டு உன் அப்பா கிட்ட என்னை வாங்கி கட்டிக்க வச்சிடுவ போல, ப்ளீஸ் டா"என மகனிடம் கெஞ்சினார்.


"சரி விடுமா ! நானே அப்பா கிட்ட பேசிக்கிறேன்" என்று மொட்டையாக முடித்தவனை யோசனையுடன்" அவர்  கிட்ட நீ என்ன பேச போற?" என்றார்.


"அதுவா, அம்மா கிட்ட நானும் மேகாவும் வரட்டுமானு கேட்டேன். வாடானு சொன்னாங்க. உங்க கிட்டையும் ஒரு  வார்த்தை கேட்கலாம்னு தான்ப்பா பேசறேன்னு, சொல்லுவேன்" என்றான் படு கூலாக. மாறாக அவருக்கோ மேனி  எல்லாம் நடுங்கியது.


"அடப்பாவி ! என் புருஷன் என்னை மரியாதையா வச்சிருக்கறது உனக்கு பொறுக்கலையா? ஏன் டா என்னை அவரோட மாட்டிவிடுற?"நொந்து போய் கேட்டார்.


"பின்ன என்ன இன்னமும் நீங்க ரெண்டு பேரும் அப்டேட் ஆகாம இருந்தால் என்ன பண்றது? காலம் எவ்வளவு ட்ரெண்ட் ஆகிட்டு இருக்கு. இன்னமும் பழைய  முறைய பிடிச்சித் தொங்கிட்டே இருங்க என்ன?" என்றான் பல்லைகடித்தப் படி. மகனின் கடிந்தலைப் பொறுக்காதவர், " நாங்க என்ன பண்றது? பழைய  முறையத்தான் பார்த்து வளர்ந்தோம்" அவன் காதுபடவே முணங்கினார்.


"இந்தக் காலத்திலும் அதே பழைய  முறை தான் இருக்குனு கண்ண மூடிட்டி வாழாம கொஞ்சம் தொறந்து வச்சி பாருங்க. நிச்சியதார்த்தம் எங்களுக்கு, எங்க விருப்பப்படி  ட்ரெஸ் எடுக்க நாங்க வரக் கூடாதா? இல்ல எங்களுக்கு பிடிச்ச ட்ரெஸ்ஸையே நாங்க போடக் கூடாதா? சொல்லுமா" என்று அவரை வளைத்து விட, யோசனையோடு அமர்ந்திருந்தார்.


"நீங்க பண்றதெல்லாம் எங்க சந்தோஷத்துக்கு தான்.ஆனா அதுவே  எங்களுக்கு கிடைக்கலேன்னா?" என்ற கேள்வியை அவர் மூளைக்குள் திணித்து விட்டுப் போனை வைத்தான். எப்படியும் அவர் மீண்டும் அழைப்பார் என்ற அசட்டு தனத்தில் அலைபேசியை மெத்தையில் எறிந்து விட்டு கையில் வைத்திருந்த புத்தகத்தை மீண்டும் படிக்கத் தொடர்ந்தான். அவன் செல் அலறியது. சிரித்துக் கொண்டே எடுத்து காதில் வைத்தான்.


"அம்மா மேல கோபமா கண்ணா?"பாவமாகக் கேட்டார். அவர் வழிக்கு வந்ததை எண்ணி நகைத்தவன், "கோபம் இல்லம்மா கொஞ்சம் வருத்தம். எங்க ஆசைகளையும் கொஞ்ச புரிஞ்சிக்கோங்கனு தான் சொல்றேன். என்னை விடுமா ! மேகாவை நினைச்சி பார்த்தீயா? அவளுக்குனு உள்ளுக்குள்ள நிறைய ஆசைகள் இருக்கும். அங்க அவளோட அப்பா தான் இஷ்டப்படி தான் எல்லாம். நிச்சய ட்ரெஸ் எடுக்கறது கூட அவரோட விருப்பமா இருந்தால் எப்படி மா? அவளுக்கு தனக்கு பிடிச்ச ப்ளூ கலர் பட்டுச்சேலைய தன் வருங்கால கணவரோடு எடுக்கணும் ஆசை இருக்கும்ல மா !" என்றவனை சந்தேகத்துடன்" அந்தப் பொண்ணு சொல்லுச்சா உன்கிட்ட?" 


"இதெல்லாம் அந்தப் பொண்ணு எப்டி சொல்லும் , நாம தான் அந்தப் பொண்ணோட ஆசைய புரிஞ்சிக்கணும். ஒரு வருங்கால கணவனா, அவளை புரிஞ்சிக் கிட்டு பேசுறேன்மா" என்றவனை நக்கலுடன்" ம்ம்... உனக்கு பேச கத்துக் குடுத்த என்னை பெருமைக்கு பட்டுக்க வச்சிட்ட மகனே ! "என்றவர் தந்தையிடம் சொல்வதாகக் கூறி போனை வைத்தார்.


எப்படியும் தந்தையிடம் பேசி சம்மதிக்க வைத்திடுவார் என்ற நம்பிக்கையில்  மெத்தையில் விழுந்தவன், மேகாவுக்கு தரப்போகும் இன்ப அதிர்ச்சியை எண்ணி, அவள் முகம் அடையும்  பரவசத்தைக் காண முடியாத போதிலும் அவள் குரலில் தொணிக்கும் மகிழ்ச்சியை கேட்க ஆவல் கொண்டான். இன்னும் அவர்கள் பேசிக் கொள்ளும் நேரம் வரவில்லை.


இங்கே தேவகியோ கணவனிடம் பேச ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்க, அவரை நமட்டுச் சிரிப்புடன் ஏறிட்டனர் பிரதியும் தீரனும்.


"என்ன ரெண்டு பேருக்கும் என்னை பார்த்து லூசு மாதிரி தெரியுதா?  நானே எப்படி உங்கப்பாவை சமாளிக்க போறேன்ற பயத்தில இருக்கேன். என் பதட்டம் புரியாம சிரிச்சிட்டு இருக்கீங்க?" என்று கடிந்தார்.


"நீங்க இந்தளவு பயந்து பதட்டம் அடையறளவுக்கு அவ்வளவு பெரிய விஷயம் இல்ல இது. நாங்களும் உங்க கூட  இருக்கோம் அத்தை. பயப்படாதீங்க"என்று பயந்து கிடந்தவருக்கு நம்பிக்கைக் கொடுத்தாள் பிரதி.


"ஆமாம்மா பிரதி சொல்றது சரி தான். தம்பி அவனோட ஆசைய சொல்லிருக்கான் அதை கேக்கறது தான நம்ம கடமை. நானும் அப்பா கிட்ட இத பத்தி பேசறேன் மா நீ கவலை படாத என்ன?" 


"என்னமோடா உங்க அப்பா மேல எனக்கு நம்பிக்கை இல்ல, உன் தம்பி சொன்னதுக்கு நம்ம மேல எகிறி விழப் போறார். அவன் அங்க நல்ல சொகுசா இருந்துட்டு கட்டளைப் போடுறான். நாம அந்த மனுஷன சமாளிச்சி, அவன் சொன்னத செய்யணுமா? போடா !"


"இதை நீ அவன்கிட்ட சொல்ல வேண்டியது தான?"


"எங்கடா, சோகமா பேசி லாக் பண்றான், இல்ல பாசமா பேசி லாக் பண்றான். அவனை என்னால மடக்க முடியல டா!" உண்மையை சொல்லி புலம்ப, இருவரும் நகைக்கத் தொடங்கினார்கள். சரியாக, குணசேகரனும்  வேலையை முடித்து வந்தார். அவர் வந்ததும் மூவரும் அமைதியானார்கள். அவரும் உள்ளே சென்று தன்னை சுத்தம் செய்து கொண்டு கூடத்தில் அமர்ந்தார். 


"என்ன தேவா உன் பையன் கிட்ட பேசிட்டீயா என்ன சொல்றான் உன் வி.ஏ. ஓ?" எனக் கிண்டலாக கேட்டு ஆரம்பித்து வைத்தார். "அது வந்துங்க, அவன்..."என இழுத்தவர் தயங்கிக் கொண்டே அனைத்தையும் சொல்லி முடித்து அவர் முகத்தை பார்த்தார். அமைதியாகவும் யோசனையுடன் அமர்ந்திருக்க, மூவரும் அவர் முகத்தையே பார்த்திருந்தனர்.


"இது நம்ம வழக்கம் இல்லையே ! தீரனுக்கு எடுக்கும்போது  கூட அவன் வரலையே, உன் மகன் என்ன புது புது வழக்கம் எல்லாம் சொல்றான்? நீ நம்ம வழக்கத்தை சொல்லி புரிய வைக்க வேண்டியது தானே !" மென்மையாகத் தான் பேசினார்.


"நானும் இது நம்ம பழக்கம் இல்லேனு  சொன்னேங்க, ஆனா அதுல எனக்கு சந்தோஷம் இல்லங்கறான். எங்க நிச்சயத்துக்கு எங்களுக்கு பிடிச்ச துணிய நாங்க வந்து ஏன் எடுக்க கூடாதுனு கேக்குறான்? என்னத்த சொல்ல சொல்லுறீங்க, இல்ல அது முறை இல்லைனு சொன்னால், நீங்களே எடுங்கனு சொல்லி முகத்தை தூக்கி வைக்கிறாங்க !" பக்குவமாக அவர் மனதைக் கரைத்தார்.


"அப்பா, எனக்கு எங்க கல்யாணத்துக்கும் நிச்சயத்துக்கும் துணி எடுக்க வரணும் இவளுக்கும் எனக்கும் ஆசை இருந்தது தான். ஆனா நம்ம வழக்கம் இல்லன்னு நீங்க சொல்லிட்டீங்க. எனக்கும் அப்போ வேலை இருந்தது என்னால வர முடியல. ஆனா தம்பி அவன் ஆசைய சொல்லிட்டான். ஏன்பா தடுக்கனும்? ஒரு தடவ நடக்கப்போற கல்யாணம், அவன் விருப்பப் படி இருக்கட்டுமே ! அவன் சந்தோசம் நமக்கும் முக்கியம் தான்ப்பா ! கொஞ்சம் யோசிங்க" என்று தம்பிக்காக பேசினான் தீரன். 


"சரி இவ்வளவு தூரம் சொல்றீங்க, அவனும் வரட்டும். தேவா நீ பொண்ணு வீட்ல சொல்லிடு !  ஆனா அங்க வந்து என் மானத்த வாங்கற மாதிரி எதுவும் பண்ணிடாம பார்த்துக்கங்க !" என்று எச்சரிக்கை விடுத்துச் செல்ல, தேவகியும் தீரனும் மூச்சை  விட்டனர்.  


பின் தேவகி தனாவை அழைத்து விஷயத்தை சொல்லி முடிக்க, தேவகியை அழுத்திய பாரம் இப்போது தனா தலையில் வந்து விட்டது. தனா தன் கணவனிடம் சொல்ல அஞ்சினார். 


"என்னடி இவங்க, நிச்சயத்துக்கு துணி எடுக்கப் பொண்ணு வரணும் சொல்றாங்க. நான் எப்படி இத உங்க மாமா கிட்ட சொல்லுவேன்?"என்று வெடவெடத்தவரை கண்டு அவரும் அஞ்சிய வண்ணம், "வேற வழி  இல்லக்கா, மாப்பிள்ளை வீட்ல சொன்னத்த சொல்லித்தான் ஆகணும், இல்ல அதுக்கும் நம்மள தான் சத்தம் போடுவாங்க, பேசாம சொல்லிடு !" என்றார். தனாவும் தயங்கிய படி விஷயத்தை கங்காதரன் காதில் போட, கோபம் கொண்டார்.


"கல்யாணச் சேலை எடுக்கும் போதே நாம பொண்ணக் கூட்டி போனது இல்ல ! இது என்ன நிச்சயத்துக்கே பொண்ண வர சொல்றாங்க ! எனக்கு இது சரினு படலை.  கல்யாணப் பொண்ண கடைக்கு அழைச்சிட்டு போறாதா?! எனக்கு இது சுத்தமா பிடிக்கலை" என்று கோபம் கொண்டார்"என்ன மாமா நீங்க? இந்தக் காலத்துல பிள்ளைங்க விருப்படி படி தான் நிச்சயம் , கல்யாணம் எல்லாம் நடுக்குது. ஆனா நீங்க இன்னமும் உங்க விருப்பப் படியே நடக்கணும் சொல்றீங்க. என் மருமகளும் வாயில்லா பூச்சி எதையும் உங்க விருப்பம்னு விடறனால  தான் இப்படி பேசிட்டு இருக்கீங்க. என் மருமகளுக்கு ஆசை இருக்கும் மாமா ! அதை என்னைக்காவது நீங்க கேட்டு இருக்கீங்களா?! போங்க மாமா, ஹிட்லர் மாதிரி இருக்காதீங்க ! நம்ம பொண்ணு தங்கம். காதல் கீதல் வர்றாம நீங்க பார்த்த புள்ளைய தான கட்டிக்கிறேன்  சம்மதிச்சிருக்கு,  உங்க மேல அம்முட்டு மரியாதையும் மதிப்பும் வச்சிருக்கு அதுக்காகவாது அத்தோட ஆசையை கேட்க கூடாதா நீங்க?" என தன் மருமகளுக்காக பேசினார் மணிமாறன். 


கங்காதரனோ, மேகாவைப் பார்த்தார், அவளோ தலை குனிந்த படி இருந்தாள். "மேகா நீயும் வர்றீயா?" எனக் கேட்டார். " உங்க விருப்பம் பா" என்று  முடித்துக் கொண்ட மகளை உள்ளுக்குள் மெச்சிக் கொள்ள,


"இவ ஒருத்தி, அப்பன விட்டுக் கொடுக்காம உங்க இஷ்டம்னு சொல்லிடுவா, என் அண்ணன விடு ! நிச்சய துணி எடுக்க நீ வர, அத்த நான் உன்னை நான் கூட்டிட்டு போறேன்" என்றிட, அவள் கங்காதரனை பார்த்தாள் அவரும் சிரித்துவிட்டு அவள் வர சம்மதித்தார். 


இந்தக்கூத்தை எல்லாம்  வாடிக்கையாளராகப் பார்த்து கொண்டு பெருமூச்சை விட்டுக்கொண்டனர் கங்காவும் தனாவும்.


வெள்ளிக்கிழமை வந்து விட, இருவீட்டாரும் மதுரையில் புகழ்பெற்ற பட்டாடை கடையில் படையெடுத்தனர். பெண்கள் பிரிந்து பட்டுச் சேலை பகுதிக்கு சென்று சேலையை தேர்வு செய்ய ஆரம்பித்தனர்.


ஆகாய நிறத்தில் வெள்ளி ஜரிகை வைத்த பட்டுப் புடவையை அவர்கள் முன் எடுத்து வைத்தார் சேல்ஸ் மென். வேறு வண்ணங்களில்  பட்டுப் புடவை  எடுத்து போடச் சொல்ல,


'மணப்பெண்ணுக்கு இந்தப் புடவை தான் தேர்வு செய்து பணம் கட்டிவிட்டதாகச் சொல்ல' அனைவரும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து குழம்பி நின்றனர்

Comments

  1. ஆரன் selection ஓ?

    ReplyDelete
    Replies
    1. சித்ரா ஹரிதாஸ்September 7, 2024 at 7:32 AM

      ரெண்டு பேரு selection thaan maa

      Delete

Post a Comment

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2