வரன் - 5

 



கங்காதரனுக்கு தன் மகள் மேகாவை தன் தங்கை மகன் தீனதயாளனுக்கு கொடுக்கத்தான் ஆசை.  ஆனால் அவளது ஜாதகத்தில், ரத்த சொந்தத்தில் கட்டிக் கொடுத்தால் தாலி கயிறு நிலைக்காது என்று வழக்கமாக கம்பிக் கட்டும் கதைகளை ஜோசியர் கூறவும் பயந்தவர், வெளியே மாப்பிள்ளையை  தேடவும் முதல் வரனே  கவர்மெண்ட் மாப்பிள்ளையாக வரவும் அவருக்கு விட மனசில்லை.  அதுவும்' வரதட்சனை 'என்ற வார்த்தையை அறவே வெறுக்கும் குடும்பத்தை வேணாம் என்று எந்த மடையனாவது சொல்வானா?. அதான் மகளின் சம்மதத்தை பேருக்கு கேட்டு விட்டு கல்யாணத்தை பேசி முடித்தார். 


மோகனாவிற்கு ஜாதகத்தில் பெரிதாக நம்பிக்கை இல்லை. அதனாலே கங்காதரன், ஜோசியர் சொன்னதை சொன்னதும் அவர் பெரிதாக அலட்டிக்  கொள்ளவில்லை. கங்காதரனுக்கு ஜாதக நம்பிக்கை இருப்பதால், அவர் மோகனாவின் விருப்பத்திற்கு பிடிக் கொடுக்கவில்லை... மேகாவின் ஜாதகத்தில் இருக்கும் பிரச்சனையை மையமாக வைத்து தீனாவை  விடுத்து அவர் மாப்பிள்ளையை வெளியே தேடினார். ஆனால் அது கவர்மெண்ட் மாப்பிள்ளையாக வந்தது கங்காதரன் செய்த புண்ணியமாக  கூட இருக்கலாம். 


மோகனாவிற்கோ, கங்காதரன் தன் மகளுக்கு 'கவர்மெண்ட் மாப்பிள்ளை வரனாக அமைந்ததால் தான் தன் மகனை மாப்பிள்ளையாக எடுக்கவில்லை' என்று எண்ணிக் கொண்டு அதை பிடித்து தொங்கிய படியே சண்டைப் போட்டார்.


அந்த வீட்டில் சத்தமாக பேசும் பெண் என்றால் அது மோகனா மட்டுமே.மற்ற நான்கு பெண்களுக்கும் பேச உரிமை என்பது கிடையாது. தன் விருப்பத்தையோ கருத்தையோ கூற  அனுமதி இல்லை. அப்படி சொல்ல வேண்டும் என்றாலும்  தயங்கி பயந்த படி தான் கூறவார்கள்.அது ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் அந்த வீடு ஆண்களின் மனநிலையை பொருத்து தான். 


முந்தானையால் கண்ணீரை துடைத்தப் படி நடுக்கூடத்தில் அண்ணனின் பதிலுக்காக காத்திருந்தார் மோகனா.


"எனக்கு தீனாவ மருமகனாக்க ஆசையில்லாம இல்ல. மேகா ஜாதகம் சரியில்ல,  சொந்தத்தில கொடுக்க  கூடாதுனு இருக்கு. அதை மீறி நாம எதாவது செய்ய போய் பின்னாடி மாப்பிள்ளைக்கு எதுவும் ஆகிட கூடாதுனு  நினைச்சி தான் மேகாக்கு மாப்பிள்ளைய வெளிய தேடுனேன். உன் கிட்ட எத்தனை முறை தான் நான் சொல்றது, கவர்மெண்ட் மாப்பிள்ளைய எதிர்பார்த்து நான் வரன தேடல மோகனா, அதுவா வந்தது தான். நல்ல பையனா இருக்க போய் பேசி முடிச்சிட்டோம். கவர்மெண்ட் மாப்பிள்ளைனு, நாங்க தீனாவ மறுக்கல  புரிஞ்சிக்க மோகனா. மேகாக்கு தான ஜாதகத்தில் இப்படி இருக்கு. நேகாக்கு அப்படி எதுவும் இல்ல அவளுக்கு வேணா, தீனாவை  மாப்பிள்ளையா எடுத்துகிறோம் என்ன சொல்ற?" எனக் கேட்கவும், அவர் பட்டென முகத்தை திருப்பிக் கொண்டார்.


"இப்ப மட்டும் உங்க அம்மா வாய், பச போட்ட மாதிரி ஒட்டிக்குமே ! பதில் வராதே" தன் பக்கத்தில் நின்ற தீனாவின் வயிற்றில் இடித்து விட்டு  கேட்டாள் நேகா. 


"அம்மாமா... சண்டாளி ! அந்தம்மா வாய தொறக்காம இருந்தா, நான் என்ன டி பண்ணுவேன்?"வலியில் முகம் சுறுக்கினான். "அப்படி என்ன தான்டா கோபம்  உங்க அம்மாக்கு என் மேலையும் எங்க அப்பா மேலையும். அவரும் அவங்களுக்கு அண்ணன் தான? நானும் மேகாவை போல அவங்களுக்கு மருமக தான? ஏன் இந்த பாகுபாடு பார்க்கறாங்க" என ஆதங்கத்தோடு கேட்டாள்.


"அவங்களுக்கு வர போற மருமக, அமைதியா சொன்னதுக்கெல்லாம் தலையாட்ற  பூம் பூம் மாடத் தான் எதிர்பார்க்கறாங்க. அந்தக் குவாலிட்டி எல்லாம் மேகா கிட்ட இருக்கறனால அவளை மருமகளாக்க நினைக்கிறாங்க டி" என உண்மையை உளறி தொலைக்க, செத்தாண்டா சேகரு என்பது போலானது அவனது நிலை 


"அப்போ, அப்படி ஒரு மருமகள உங்க அம்மா, உனக்கு பார்த்தால் நீ கட்டிப்பா அப்படி தான?" அவனிடம் எகிற, "இல்லடி பட்டு குட்டி !  அம்மா எதிர்ப்பார்க்கற பொண்ணோட குவாலிட்டிய தான் டி சொன்னேன். அந்தப் பொண்ண தான் கட்டிப்பேன்னு நான் எப்படி சொன்னேன்?" 


"ஓ... அப்ப அந்தப் பொண்ண தான் கட்டுவேன் வேற சொல்லுவீயா?" மீண்டும் எகிற, "அட லூசே ! நான் சொல்லலனாலும் நீ சொல்ல வச்சிடுவ போல!" என சலித்துக் கொள்ள, அவள் பேச ஏதோ வாயெடுக்க, " நிறுத்து,  என் முன்னாடி எத்தனை  பொண்ணுங்கள நிக்க  வச்சலும் நான் நேகாவை தான் கட்டிப்பேன் சொல்லி ஒத்தக் காலுல நிப்பேன் போதுமா?" எனக் கையெடுத்து கூம்பிடவே, "ம்ம்... நிக்கனும் நிக்கற, இல்ல இந்த  உடல்ல உயிர் நிக்காது பீ கேர்ஃபுல் மேன்" என்று மிரட்டவே, 


"இப்ப மட்டும் உடல்ல இந்த உயிர நிக்கவா விடுறீங்க? மாமியார் மருமகளும் உயரல எடுக்கிறீங்க. பசியோட வந்த எங்கள சாப்போடு போட்டு கவனிக்காம  கண்டதும் பேசி உட்கார வச்சிருக்கீங்க. நாள பின்ன மாப்பிள்ளையா வந்தாலும் இப்படி தான் கவனிப்பீங்க போல, டூ பேட், டேய் தீனா, இந்த குடும்பத்துல தான் நீ வாக்கப்படனுமா?" என நொந்து கொள்ள, " வேணும்ன்னா சார் அம்பானி குடும்பத்தில ஆள் இருக்காம் அவங்களுக்கு வேணா நீங்க மாப்பிள்ளையா ஆகறீங்களா?" அவனை கேலி செய்ய, " அப்படி ஒரு வரன் வந்தால், ஐயாக்கு கசக்குமா என்ன?" எனக் காலரை தூக்கிவிட்டு சொல்ல, அவனது வயிற்றில் மீண்டும் குத்தினாள்.


"கொலகாரி டி நீ!"வயிற்றை பிடித்தான்.

வீடே அமைதியாக  இருக்க, அதனை கலைத்தார்  மணிமாறன். 


" மோகனா, மச்சான் தான் அவ்வளவு  தூரம் சொல்றார்ல, இன்னும் ஏன் உனக்கு இந்தப் பிடிவாதம்? மேகா ஜாதகத்தில அப்படி ஒரு விஷயம் இருந்தால் நாம என்ன பண்றது? தீனாவுக்கு எதுவும் ஆகிட கூடாதுனு அக்கறையில சொல்றாங்க விடேன். மேகா மருமகளா வரலேனா என்ன நேகா இருக்கா. எனக்கு  ரெண்டு மருமகளும் வேற வேற இல்ல, நேகா மருமகளா  வந்தாலும்  எனக்கு சந்தோசம் தான்"நேகாவை புன்னகையுடன் பார்த்து சொன்னார் அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள். "அது மட்டுமில்ல இன்னேரம் மேகாவும் மனசில ஆசைய வளர்த்திருக்கும். அந்தக் தம்பி கூட போன்ல பேச ஆரம்பிச்சிருக்கும். மேகாக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கு அப்றம் இதெல்லாம்  கேக்கறது தப்பு மோகனா" என்று  அறிவுறுத்த,


" மாமா, போன் எல்லாம் பேச விடல, எல்லாம் கல்யாணத்துக்கு அப்றம் தான்" என மணிமாறனிடம் சொன்னாலும் மேகாவுக்கு தான் அந்த எச்சரிக்கை. அது அவளுக்கு நன்றாக விளங்க, அதை தவிடுபொடியாக்க அவளது கையிலிருந்து அலைபேசி அலறியது. ஆரன் தான். திரையை பார்த்து விழித்தவளுக்கு கங்காதரன் பார்வை தன் மேல் படுவதை கண்டு , கட் செய்தாள் . இரண்டு நிமிடம் கழித்து மீண்டும் அலற  அனைவரின் பார்வை தன் மேல் இருப்பதைக் கண்டு  செல்லை சுவிட்சாப் செய்தாள். " பிரண்டு பா ! நான்  அப்றமா பேசிக்கிறேன்"என்று சமாளித்தாள்.


"அட ! என்ன மச்சான் எந்தக் காலத்துல நீங்க இருக்கீங்க? பிள்ளைங்க பேசி ஒருத்தரை ஒருத்தரை புரிஞ்சிக்க வேணாமா?  கல்யாணத்துக்கு அப்றம் சொல்றீங்க, பிள்ளைங்களுக்கும் பேசணும் ஆசை இருக்கும்ல" 


"மாமா, காலம் சரியில்ல. கல்யாண முடியற வரைக்கும் பேசிக்காம இருக்கறது தான் நல்லது. யார் எப்படியோ இருக்கட்டும்,  என் பொண்ணு இப்படி தான் இருக்கணும்" என்று  முடித்துக் கொண்டார் கங்காதரன். 


"பேசாம உன்னை கல்யாணம் பண்றதுக்கு பதிலா, உங்க அப்பாவை பண்ணிக்கலாம் போல, ட்ரெண்டியா இருக்கார்" என்று நேகா நக்கலாகச் சொல்ல  அதில் பொறாமை கொண்டவன், "கடுப்படிக்காம போய் சாப்பாடு எடுத்துவை டி. பசிக்குது!"என்றதும் தான் அவன் முகத்தை பார்த்தாள், பயண களைப்பும், பசியில் இருப்பதும் தெரிய, வேகமாக சென்று உணவு கடையை பரப்பினாள். அதை  கண்டதும் கனகாவும்  தனாவும் அனைவரையும்  சாப்பிட அழைக்க,  ஆண்களும் மோகனாவும்  சாப்பிட அமர, நான்கு பெண்களும் பரிமாறினார்கள்.


மூவரும் சிரித்த முகமாய் பரிமாறினாலும் நேகா மட்டும் முகத்தை தூக்கி வைத்து தான் உணவை பரிமாறினாள். அதுவும் மோகனாவிற்கு மட்டும் உர்ரென்று முகத்தை வைத்து கொண்டு பறிமாறினாள். அதை  அவர் கவனிக்காமல் இல்ல. அனைவரும் சாப்பிட்டு எழ மற்ற நால்வரும் சாப்பிட்டனர்.


மோகனாவிற்கு படுக்கும் முன்  யாராவது அவருக்கு  கால் அமுக்கி  விட வேண்டும். வீட்டில் தீனா தான் இதை செய்வான். இன்றோ தீனாவோ பயண களைப்பில் நேத்ரனின் அறைக்கு சென்று  உறங்கிவிட்டான்.  அவர் நேத்ரனை அழைக்க, "நாளைக்கு ப்ரீட்சை  இருக்கு படிக்கணும் அத்தை" என்று உள்ளே ஓடிவிட்டான். " மேகா நீ வா"என அழைக்க அவளோ நேகாவை பாவம் போல பார்க்க, " நான் அமுக்கி விடுறேன், நீ போய் உன் வேலைய பாரு மேகா "என்று  கண்ணைக் காட்ட, நன்றியாய் அவளை பார்த்துவிட்டு உள்ளே சென்று விட்டாள். மோகனாவின் காலை தன் மடியில் வைத்து  அமுக்கினாள். அவரோ அவள்  முகத்தை பார்த்த படியே படுத்திருந்தார். அவளது முகம்  வெறுமையாக இருந்தது அவர் பார்வை தன் மேல் படிவதைக் கண்டும் காணாமல்  தன் வேலையை செய்தாள். அவருக்கும் வாய் சும்மா இருக்க முடியாமல் அவளிடம் கேட்டும் வைத்தார்."ஏன் டி முகத்தை இப்படி வச்சிருக்க?"


"நான் எப்படி  முகத்தை வச்சிருந்தா உங்களுக்கு என்ன? "  


"ஏன் இப்போ இப்படி பேசற?" எனக் குரலை உயர்த்த, "வேற எப்படி பேச சொல்றீங்க? நான் எப்படி பேசினாலும் உங்களுக்கு என்னை பிடிக்க போறதில்ல,  உங்களுக்கு மேகாவை தான பிடிக்கும்?" எனக் கேட்கவும் பதில் சொல்லாது அமைதியாக இருந்தார். 


"ம்ம்... இப்ப கூட உங்க வாயில் இருந்து ' உன்னை பிடிக்கும்'ன்ற வார்த்தை வரலேல. நான் என்ன பண்ணேன்? உங்களுக்கும் உங்க அண்ணனுக்கும் மன்ஸ்தாபம் இருக்கலாம், அதுக்காக அவர் பெத்த பொண்ணு கிட்ட  பேசக்கூடாதுனு இருக்கா? ஏன் நான் உங்க வீட்டுக்கு வந்தா, உங்களையும் உங்க புள்ளையும் பிரிச்சிடுவேனா?பெரியப்பாவும் மாமாவும் சொல்லும் போது கூட நீங்க வாய தொறக்கலேல ... பரவாயில்லை உங்க புள்ளைக்கு உங்க இஷ்டபடியே பொண்ணு பார்த்து கட்டிவைங்க, நான் யாரோ தான?" என கண்ணை துடைத்தவள், மெத்தையில் காலை வைத்துவிட்டு சென்று விட்டாள். அவருக்கு தான் நேகாவின் அழுகை ஏதோ செய்தது. 


தயங்கிய கொண்டே ஆரனுக்கு அழைப்பு விடுத்தாள் மேகா. முதல் ரிங்கிலே எடுக்கப்பட்டாலும்  அவன் பேசவில்லை அமைதியாக இருந்தான்.  'என்ன மிளகா  எதுவும் பேசல? ஒரு வேள கோவமா இருப்பானோ ! ஐயோ கோபமா இருந்தால் கத்துவானே !எதுக்கும் காதை கொஞ்ச தொடச்சு வைப்போம்' காதை குடைந்தவள், மெதுவாக, "ஹலோ லைன் இருக்கீங்களா?" வாய்க்கும் தொண்டைக்கும் வலிக்காமல் கேட்டாள். அதில் அங்கே அவனுக்கு சிரிப்பு வந்தாலும் கோபமாக இருப்பது போல "சொல்லு " என்றான் காரமாக. அதில் அவனது கோபம் தெரிய, " வீட்ல அத்தையும் அவங்க பேமலியும்  வந்திருக்காங்க. எல்லாரும் ஒண்ணா அமர்ந்து பேசினோம் அதான் உங்க காலை அட்டன்ட் பண்ண முடியல,ஸாரி"என்று விளக்கம் கொடுத்தாள்.


சட்டென குரல் கனிய "ஓய் சக்கர ! கோபப்படுவேன் பயந்திட்டீயா?" என கேட்டு போட்டு வாங்க, "ஆமா கொஞ்சம் பயந்துட்டேன்" என்றாள் இன்னும் தெளியாத குரலில். "ஹேய்  எனக்கு ஏன் நீ பயப்படற? இதான் ரீசன் ஸோ என்னால பேச முடியல சொன்னால், நான் அக்சப்ட்  பண்ணிக்க போறேன். இதுல உன்னோட தப்பு எதுவுமே இல்ல தென் ஓய் சூட் யூ பீ அஃபிராய்டு சக்கர?" எனக் கேட்கவும் இதழை கடித்து அமைதியாக இருந்தாள்.


"லிசன் சக்கர,  என் பொண்டாட்டி எதுக்கும் பயப்படுறவளா இருக்கக் கூடாது. முக்கியமா என் கிட்ட பேசும்  போது பயப்படவே கூடாது.  என்னோட அடிமை இல்ல டி நீ. 

யூ ஆர் மை குயின். சோ மனசில வச்சிக்க உங்கப்பன் கிட்ட பயந்து பயந்து பேசறது மாதிரி எல்லாம் எங்கிட்ட பேசக்கூடாது. எதுனாலும் எது வேணும்னாலும் நேரடியா கேளு, பேசு.  அப்படி தான் என் ஒயிப் எனக்கு இருக்கணும் சம்ஜே  !" 


"சம்ஜே !" என்றாள் கண்கள் கலங்க. 


"தேட்ஸ் குட் மை சக்கர ! ம்ம்... அப்றம் உங்க அத்தை நம்ம மேரேஜ் பத்தி என்ன சொன்னாங்க?" அவனே பேச்சை தொடர்ந்தான். அவளும் நடந்ததை சொல்ல, "ம்ம்... அந்த ஒன் திங் தான் எனக்கு கிடைக்க வேண்டிய நீ கிடைச்ச,, அவங்களுக்கு நீ மிஸ் ஆகிட்ட. சீரியஸ்லி உனக்கு அத்தை பையன் இருக்கான்னு கேள்வி பட்டதும் முதல்ல கொஞ்சம் பயந்தேன். பட் ஜாதகத்துல  

அந்த மேட்டர் இருக்கறத கேட்டதும் எனக்கு மூச்சே வந்தது" என்றவன் அவளை வியப்பில் ஆழ்த்தி கொண்டிருந்தான்.


'எப்படி இதெல்லாம்  தெரியும் கேட்டா சொல்ல மாட்டான். எதுக்கு கேட்டுட்டு அவனா சொல்லட்டும்?' என்றெண்ணியவள், "சப்போஷ் எங்க அப்பா மனசு மாறி இந்தக் கல்யாணத்தை நிறுத்திட்டு, தீனாவுக்கே கட்டிவைக்க முடிவு பண்ணிட்டார்னா என்னப் பண்ணுவீங்க?"


"அதுக்கு வாய்ப்பிள்ளை சக்கர !" என்றான் படு கூலாக, அவன் பதறுவான் என்றெண்ணியவளுக்கு ஏமாற்றமாக இருந்தது." ஏன் வாய்ப்பில்ல?" 


"தீனாவும் நேகாவும் லவ் பண்ணும் போது, எப்படி அவன் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஒ.கே சொல்வான். நேகா எப்படி சும்மா இருப்பா?" எனக் கேட்டு மீண்டும் மீண்டும் அதிர்ச்சியே அவளுக்கு கொடுக்க, ' போதும் டா முடியல ' என்றாள் மனதோடு. 


"அவங்க லவ் பண்ற விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்?"


"சக்கர ! சக்கர ! ஐ நோ ஆல் மா !" என்றவன் குரலில் தெரிந்த ஆளுமை அவளுக்கு மலைப்பை கொடுத்தது. 


"எங்க வீட்ல ரேஷன் கடையில் என்ன என்ன வாங்கினாங்க சொல்லுங்க?" என்றாள் நக்கலாக, "ம்ம்ம்... எல்லாம் தான் வாங்கினாங்க  உங்க அம்மா. ஆனா எண்ணெய் இல்லேன்னு பொலம்பிட்டே போனாங்க பச்" என்றவன் குத்து மதிப்பாக சொல்ல, "ஆ.."என் வாயை பிளந்தாள். சத்தம் போட்டு சிரித்தான். 


"பிராடு ! பார்த்திருக்கறது எல்லாம் பிராடு வேலை... இதுல  மட்டும் தானா, இல்ல வேலையிலும்  இதே மாதிரி பிராடு வேல பார்ப்பீங்களா?" என அவள் விளையாட்டாக  கேட்க, அவனுக்கு தான் கோபம் சர்ரென்று ஏற " ஏய் சக்கர !"என கர்ஜித்தான் உடல் நடுங்கி போனது அவளுக்கு

Comments

Post a Comment

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2