மடல் 15

 மடல் 15

உண்மையை மறைத்து தான் விஷ்ணு கொடுத்த அட்வான்ஸ் , வாடகையை வாங்கிக் கொண்டார் வைகுண்டம்.


பணம் அவருக்கு பெரிதல்ல தான். ஆனால் அந்த நொடி, அது இன்னொருவரின் தேவையாகிப் போனதால் அதை இழக்க விரும்பாமல் பணத்தை வாங்கியவர், உண்மையை விஷ்ணுவிடம் சொல்லாமல் மறைத்து விட்டார்.


இன்னொருவருக்கு உதவி கரம் நீட்ட,  உண்மையை மறைக்க நேர்ந்தாலும், அவருக்கோ 'ஒருவரை ஏமாற்றி வாங்கிய பணத்தை வைத்து இன்னொருவருக்கு உதவி  செய்ய வேண்டுமா ?!' என  இருந்தது.


' பேசாமல் விஷ்ணுவிடம் பணத்தை கொடுத்து விட்டு வெளியே யாரிடமாவது கடன் வாங்கி, அடுத்த மாதம் வரும் வாடகையை வைத்து கடனை அடைத்தால் என்ன?'என்று கூட யோசனை செய்து பார்த்தார்.

  

வைகுண்டத்திற்கு வெளியே வட்டிக்கு கடன் வாங்குவதை நினைத்து என்றுமே உள்ளுக்குள் கலக்கமாக இருக்கும். 


அவருக்கு அது பழக்கமில்லை. தன் மகன் , மகள் கல்யாணத்திற்கு கூட அவர் வட்டிக்கு வெளியே பணம்  வாங்கவில்லை. 



  உழைத்து சேர்த்து வைத்த பணமும், அவர் தந்தை உழைத்து தனது ஒரே மகனுக்காக விட்டுச் சென்ற சொத்துமே

போதுமானதாக இருந்தன. வட்டிக்கு பணம் ஈட்ட வைக்குண்டத்திற்கு அவசியமற்று போனது.


பல குடும்பங்கள்  கடனால் வட்டி அழிந்தது உண்டு, பிரிந்தது போனதும் உண்டு. கண்கூடாகப் பார்த்த இவருக்கு கடன் வாங்குவதில் அறவே விருப்பமில்லை.


எப்படியும் கடன் வாங்க வேண்டும் என்றால் பிணையம் கேட்பார்கள். அதற்கு, இவரிடம் காம்ப்ளக்ஸ் பத்திரம், மனைவியின் நகையை தான் இருக்கிறது. இரண்டில் ஒன்றைத்  தான் அடமானம் வைக்க வேண்டும். அதை நினைக்கும் போது உள்ளுக்குள் ஏதோ பிசைய, அதற்கு உண்மையை மறைப்பதே மேல் என்றானது அவருக்கு



'என்ன செய்வது? உதவி செய்வதா? இல்லை உண்மையை சொல்வதா ?'என  முதல் முறையாக தன் சம நிலையை தவறினார் வைகுண்டம்.



அவரது குழப்பத்திற்கு தீர்வு தர வந்தான் கதிரேசன்."அப்பா ! எதுக்கு இப்போ இவ்வளவு யோசிக்கிறீங்க... பொய்மையும் வாய்மையிடத்து வள்ளுவர் தாத்தா சொல்லி இருக்காரே ! அது போல நினைச்சிக்கங்க ! நீங்க பொய் சொல்லல உண்மைய மறச்சிருக்கீங்க அதுக்கு போய் சிவாஜி கணேசன் அளவுக்கு ஃபீல் பண்ண கூடாது..."என்றவனை முறைத்தவர்,


"நாளைக்கே தேவா கழுத பாட்ட போட்டு நம்ம மறச்சு வச்ச உண்மைய காட்டி கொடுத்திடுவாளே ! அப்ப  என்ன பண்றது? அடுத்த நாளே அட்வான்ஸ்ம் வாடகையும்

திரும்ப கேட்டு வந்து நிக்காதா அந்த தம்பி ?! அதுக்கு முன்ன உண்மைய சொல்லி பணத்தை கொடுத்தா என்ன?"


"சரி,  ஜெராக்ஸ் கடைக்காரனுக்கு கொடுக்க உங்க கிட்ட பணம் இருந்தால், நீங்க உண்மைய சொல்லி அந்தத் தம்பி கிட்ட பணத்தை கொடுங்க  !"என்று  அவரை மடக்கினான். பாவம் போல கதிரின் முகத்தை பார்த்தார் வைகுண்டம்.


"அப்படி பாத்தா ! பிரச்சனை, உங்க மேலே பாவம் பார்த்து ஓடிடுமா? நாம தான் ஓட வைக்கணும். எனக்கு ஒரு ஐடியா இருக்கு சொல்லட்டுமா?"


"சொல்லு... சொல்லு... ! உன் கிட்டலாம் அறிவுரையும் ,  ஆலோசனையும் கேட்க வேண்டிய நிலமைக்கு வந்துட்ட என்னைய சொல்லணும்..."என சலித்துக் கொண்டவரை மேலும் கீழுமாக பார்த்தவன், 


"என்ன பெருசு ரொம்ப சலிச்சிக்கற? பாவமே உன்னை காப்பாத்தலாம் நினைச்சா? ரொம்ப பண்றியே நீ ! நீயே உன் பிரச்சனை சமாளி நான் கிளம்புறேன்"என நகர இருந்தவனை தடுத்த "என்னடா அப்பா தானே ஏன் பண்ணக் கூடாதா? சொல்லிட்டு போயேன் டா !"என்று சென்றவனை மீண்டும் தன்னுடன் நிற்க வைத்தார்.



"ம்... அப்படி வாங்க வழிக்கு. மொதல்ல உங்க வாய மூடுங்க ! நான் பேசற வரைக்கும் திறக்க கூடாது"என்றான். அவரும் வாயை மூடிக் கொண்டார்.


"நான், தேவா கிட்ட, நீ தினமும் பாட்டு, போட்றதால உன் மேல காம்ப்ளக்ஸ் இருக்குறவங்க பிராது குடுத்திருக்காங்க.  அதை அப்பா உன் கிட்ட சொல்ல தயங்குறார். என்னை விட்டுப் பேச சொன்னார்னு சொல்லி, இனி சத்தமா பாட்டு போடாத ! மத்தவங்களுக்கு தொந்தரவு தர்றாம , கடைக்குள்ள சத்தமா வச்சு பாட்டு கேட்டுக்கனு சொல்றேன் . உங்களுக்கு போன் பண்ணி கேட்டா ! ஆமான்னு சொல்லுங்க!"


"யாரு பிராது கொடுத்தானு கேட்டு அவ சண்டைக்கு வந்தா !?"


"நீங்க சங்கடப்பட்றீங்க ! ஃபீல் பண்றீங்க சொல்றேன். போன்  பண்ணி கேட்க மாட்டா ! அதை அப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க !"என்றான்.


"ஒரு உண்மையை மறைக்க இத்தனை பொய்யா டா?"

என நொந்தவரின்  தோளை தட்டி "ரெண்டு பொய் தான். அதுவும் நல்லதுக்கு தான். தினமும் பாட்டு போட்டு கொல்றாப்பா எங்களை ! ப்ளீஸ் கோஆ ப்ரேட் பண்ணுங்க உங்க பிரச்சனையும் எங்க பிரச்சனையும் சால்வ் ஆகிடும்..."என்றான். அவரும் வேறு வழியின்றி " சரி " என்றார்.



விஷ்ணுவிடம் பணத்தை வாங்கி, பழனியிடம் கொடுத்து விட்டு, அவர் கிளம்பி விட, அன்று மாலையே தேவாவிடம் கதிர் தயங்கி, அஞ்சிய படி சொல்ல

முதலில் கத்தி கூச்சல் போட்டவள், வைகுண்டத்தின் பேரை சொன்னதும் அடங்கிப் போனாள்.


கதிர் சொன்னதை நம்பி, தேவா மறுநாள் பாட்டு போடவில்லை, இரு கடைக்காரர்களும் கேட்காவிட்டால் இன்னமும் கூட அவளுக்கு தெரிய வாய்ப்பு இருந்திருக்காது.


அவர்கள் இருவரும் அவளை வம்பிழுக்க கேட்க போய் கதிர் மாட்டிக் கொண்டான்.  அவனிடம் உண்மையை விசாரிக்க, 

அதை அப்படியே தேவாவிடம் சொன்னான்.



"ஓ... அவனுக்காக நான் பாட்டு போடாம இருக்கணுமா? முடியாது இப்பவே பாட்ட போட்டு அவன அலற விடல நான் தேவா இல்ல !"என நகர்ந்தவளை தடுத்து நிறுத்தியது கதிரின் குரல், 



"போ ! அலற விடு ! சத்தமா பாட்டு போடு! உனக்கு என்ன வந்திட போகுது இதுல? அப்பா சட்டைய பிடிச்சி அட்வான்ஸ குடுயா? வாடகைய குடுயா கேட்பான்,  அப்பா தான அவன் கிட்ட அவமானப் பட்டு நிக்கப் போறார்.உனக்கு இல்லேல !உனக்கு அதுல கவலையுமில்லேல ! "என்றவனின் கழுத்தை  நெரிப்பது போல வந்தாள்.


"நீ இந்த சிட்டுவேஷனை யூஸ் பண்ணிட்டேல! நல்லா பழகிட்டு, சந்தர்ப்பம் கிடச்சதும் கால வாரிட்டேல !என்று அவனது சட்டையை பிடித்தாள்.


"எது நானும்?! உன் கால வாரிட்டேன்ல !"எனவும், அவள் பிடியில் நின்று விரக்தி சிரிப்புடன் சொன்னான். 


மல்லுக்கு நிற்கும் இருவரையும் தவிப்பாகப் பார்த்தாள் மஞ்சுளா!


"இங்க இருக்கிறவங்க உன் பாட்டு அடிமைலாம் இல்ல ! உன் முன்னாடி புகழ்ந்து பேசி பின்னாடி கேவலமா பேசுறவங்க  தான் இவங்க. 


உன் மேலே இவங்களாம் அப்பா கிட்ட புகார் கொடுக்கலன்னு நினைச்சியா? அதெல்லாம் நிறைய குடுத்து இருக்காங்க ! அப்பா அதை பெருசா எடுத்துக்கல. 


இதோ இப்போ வந்து அக்கறையா பாட்டு போடலையா? ரேடியோ ரிப்பேர் பண்ணித்தரவா? கேக்குறவனுங்க யாரு? அப்பாடா இன்னைக்கி இவ பாட்டு போடல சந்தோஷ்ப்பட்றவங்க தேவா !


நீ பாட்டு போட்றது தப்பில்ல ! ஆனா, அது உன் கடையோட முடிஞ்சிடனும் வெளியே கேக்கறது  போல சத்தமா வச்சு மத்தவங்களுக்கு  ஏன் தொல்லை தர? உன் அண்ணனா நான் பொறுத்துப்பேன். மத்தவனும் ஏன் பொறுத்துக்கணும்? 


அவனவன் தனியா கடைக்குள்ள பாட்டு கேட்க சிஸ்டம்  வச்சிருப்பான். அவனவனுக்கு பிடிச்ச பாட்டு போட்டு கேப்பானுங்க, நீ புதுசா எப்எம் ஆரம்பிச்சி அவனுங்களுக்கு பாட்டு போடணும் அவசியமில்ல !"என அவளுக்கு புரிய வைக்க முயற்சித்தான். ஆனால் அவளை தான் புரிந்து கொள்ள கூடாதென்று அவளது கோபம் தடுத்தது. 


"போதும் ! நான் யாருக்காகவும் பாட்டு போடல ! எனக்காக தான் போட்றேன் !"


"அப்போ... உன் கடைக்குள்ள எவ்வளவு சத்தம் வேணா வச்சி போடு ! எங்களை ஏன் செவுடாக்குற?"என்றான்.


மூக்கு நுனி சிவக்க அவனை முறைத்தாள்," நான் பாட்டு போடுவேன், எவன் எப்படி வேணா போகட்டும்?"என திரும்பி நடக்க , கதிரும் விடாமல்"அப்பா! அவமானப் பட்டாலும் பரவாயில்லை பாட்டு போடுவ அப்படி தானே? அவன்  வந்து அப்பா சட்டைய பிடிப்பான் பார்த்து ரசி !"என்றான். 


அவளது நடை நின்றது. திரும்பிப் பார்த்தாள், அவனோ தோள்களை குலுக்கினான். 


சரியாக, விஷ்ணுவும் கடையை சுத்தம் செய்ய  ஆட்களுடன் வந்திருந்தான். அவனை கண்டதும் அவள் கோபத்தில் மேலும் தூபம் போட்டது போலானது. அவனிடம் திட்ட வேண்டும் என்று அவனை நோக்கி நடந்தாள். 


கதிர் தான் , தேவா அவனை நோக்கி செல்வதை கண்டு அதிர்ந்தவன் அவளை தடுத்து நிறுத்த, "அவனுக்கு எதுவும் தெரியாது, நீ என்ன சொன்னாலும் பிரச்சனை அப்பாவுக்கு தான் தேவா புரிஞ்சுக்க !"என்றான் . கதிர் சொன்னதை காதில் வாங்கிக் கொண்டாலும் கோபமாக அவனை  நோக்கிச் சென்றாள். 


கதிருக்கோ , 'அவனிடம் என்ன பேசி தொலைக்க போகிறாள் ?!' என்கிற பயம் இதயத்துடிப்புடன் சேர்ந்து கொண்டது.



கடையை திறந்தவன் ஆட்களை உள்ளே அனுப்பி வைத்து வெளியே வந்திருந்தான். 


தன்னை நோக்கி கோபத்துடன் வரும் தேவாவை புருவங்கள்  சுருங்க பார்த்தான். ஆனால் அவனை நோக்கி சென்றவள், சட்டென அவனை தாண்டி பெண்கள் கழிப்பறைக்குள் நுழைந்து கொண்டாள். 



மேலே இருக்கும் ஐந்து கடைக்களுக்கும் சேர்த்து பெண்கள், ஆண்கள் என  இருபாளருக்கும் தனித் தனியாக கழிப்பறை ஓரமாக அமைக்கப்பட்டிருந்தன. 


புயல் போல தன்னை கடந்து செல்லும் அவளை மிரட்சியுடன் பார்த்தான். 


' சண்டை போட வந்தது போல இருந்ததே ! சட்டுனு கடந்து போயிட்டா ! ' என போகும் அவளை வெறித்தவன் ' என்னவோ ' என  தோளை குலுக்கி விட்டு உள்ளே சென்றான்.


தேவா, விஷ்ணுவை தாண்டி சென்றதை கண்டதும் தான்  இருவரும் நெஞ்சில் கைவைத்து ஆசுவாசம் கொண்டனர். 


"என்னங்க இவ, சண்டை போட்டு போறா !"


"விடு மஞ்சு ! இப்போ சண்டை போடுவா ! நாளைக்கு கதிரே காப்பியோட வாம்பா ! எங்கூட என் அம்மா வயித்துல  பொறக்கல அது ஒன்னு தான் குறை, மத்தபடி அண்ணனா அவங்களுக்கு நானும் எனக்கு தங்கச்சிங்கனா அவங்க ரெண்டு பேரும், ஒரே குடும்பமா தான இருக்கோம்..."என்றான். 


மஞ்சுவும் அதை அமோதிக்க, "திகழு  பேசி அவள சரி பண்ணுவா, வா கடைய பார்க்கலாம்..."என்று அவளை உள்ளே அழைத்து போனான். 



****

திகழும் வெளியே வேலையாக சென்றவள் அப்போது தான் வண்டியை நிறுத்து வைத்து விட்டு உள்ளே நுழைந்தாள். காம்ப்ளக்ஸை கூட்டி பெருக்கிக் கொண்டிருந்தார் சோபனா ! 



"சோபு  சோபு "என இரண்டு முறை அழைத்தாள். மகனை நினைத்து கவலையில் தவித்தவர், இரண்டாவது அழைப்பில் தான் திகழை கவனித்தார். 


"சோபு கவனம் எங்க இருக்கு ? ஸ்கூல்ல இருக்க உன் மகன் மேலயா? இல்ல பார்க்கற வேலை மேலயா?"


அவரோ கஷ்டப்பட்டு வரவழைக்கப்பட்ட சிரிப்புடன் "சொல்லு பாப்பா !"என்றார். 


"சரி சரி வேலை முடிஞ்சிடுச்சா! வா  ஸ்கூலுக்கு போய் ஃபீஸ் கட்டிட்டு வருவோம். இன்னைக்கி தான் பணம் கையில கிடைச்சிருக்கு உடனே கட்டிடலாம்"என்றாள். 


"அது வந்து பாப்பா ! இன்னைக்கி நல்ல நாள் இல்ல நாளைக்கு கட்டுவோமா? "என மழுப்பிச் சொல்ல,அவளுக்கு சந்தேகம் அவர் மீது வந்தது. 


"ஏற்கெனவே ஸ்கூல் ஓபன் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு. இதுல இன்னைக்கி வேணாம் நாளைக்குங்கற ! என்ன நினைச்சிட்டு இருக்க? வா போலாம்... ஸ்கூல்ல அவன் மிஸ் இந்நேரம் கட்ட சொல்லி சொல்லியிருப்பாங்க ! வா போய் கட்டிட்டு வந்திடலாம் ! அப்படியே அவனை பார்த்து ஃபீஸ் கட்டினதை சொல்லிடலாம் "என்றவள் சோபனாவின் முகத்தில் தெரிந்த கலக்கத்தை கவனிக்கத் தான் செய்தாள். 


அவள் கிளம்ப ஆயத்தமாக, சோபனாவோ அங்கே நின்றிருந்தார். அவர் அப்படியே நிற்பதை கண்டு குழம்பியவள் , அவர் அருகே வந்து தோளை அழுத்திய பின் தான் சுய நினைவுக்கு வந்தார்.


"என்னாச்சி? ஏன் இங்கே நிக்கற? வா நேரமாச்சு..."என்றாள். 


மீண்டும் சமாளிக்கும் பொருட்டு சோபனாவோ" தம்பி இன்னைக்கி ஸ்கூலுக்கு போகல பாப்பா ! வீட்ல தான் இருக்கான் உடம்பு முடியல !"என்றார். 


"என்னாச்சி அவனுக்கு ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போனியா? இல்ல ஏதாவது மாத்திரை குடுத்து படுக்க சொல்லிட்டு வந்திருக்கியா? சரி நீ வேலைய பாரு ! நான் போய் அவனை பார்த்திட்டு வர்றேன்..."என கிளம்ப இருந்தவளை தடுத்தவள் "எதுக்கு பாப்பா அலையற? நாளைக்கு பார்த்துக்கலாமே !"என்க ,

அவளது சந்தேகம் வலுவானது.


கைகளை கட்டிக் கொண்டு அவரது விழிகள் வழியே உண்மை என்ன? என்பதை தன் விழிகளால் ஊடுருவி பதிலை வாங்கிட நின்றாள். 


கூர் விழிகளால் துளையிட்டு உண்மையை கரந்து விடுவாள் என்று  அவளை பாராமல் தலை கவிழ்ந்தார். 


"உண்மை சொல்லு சோப்பு ! எதுக்கு இப்போ என்னைய தடுக்குற? பீஸ் கட்ட போலாம்னு சொன்னா நாளைக்கு போலாங்கற, முடியாம கிடக்கிறவன பார்க்க போலாம் சொன்னாலும் தடுக்குற என்ன பிரச்சனை உனக்கு? உண்மைய சொல்லு !"என்று உண்மை வேண்டும் என்ற பிடியிலே இருக்க, வேறு வழியில் இல்லாமல் தயக்கத்துடன் உண்மையை சொன்னார்.,



முஷ்டியை இறுக்கி இரண்டு முறை தொடையில் குத்தினாள். அந்த பள்ளியில் ஆசிரியரிடமிருந்து தொடங்கி தாளாளர் வரைக்கும் அவர்கள் மீது கட்டுக்கடங்காத கோபம்,


"வா சோப்பு !"என அவரை இழுக்காத குறையாக அவரது இல்லத்திற்கு அழைத்து சென்றாள். 


அங்கே சோபனாவின் மகன் முருகன் படித்துக் கொண்டிருந்தான். நன்றாக  படிக்கும்  மாணவன். முதலிடம் தக்க வைத்துக் கொள்ளும் மாணவன், கணவன் இருக்கும் வரை தலையை அடமானம் வைக்காத குறையாக வேலை பார்த்து பணம் ஈட்டி அந்தப் பெரிய பள்ளியில் மகனை படிக்க வைத்தார். விதி, கணவன் இறந்ததும் பள்ளி கட்டணத்தை கட்ட முடியாதவர், அரசு பள்ளியில் சேர்க்க நினைத்தார்.


மகனும் ஒத்துக் கொண்டான். ஆனால், சோபனாவிற்கு கணவனின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்ற சோகமும் குற்றவுணர்வும் உள்ளே  இருந்து அறுத்துக் கொண்டிருந்தது. 


அதை அறிந்து கொண்ட திகழ்,

முருகனை படிக்க வைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். இரண்டு வருடமாகப் படிக்கவும் வைக்கிறாள் திகழ். 


இந்த வருடம் அவன் எட்டாவது படிக்கிறான். பணத்தை திரட்ட கொஞ்சம் நாள் அதிகமாகிவிட்டது . பள்ளிக் கட்டணம் கட்ட முடியாத மாணவர்களை வெளியே அமர வைத்தனர் ஆசிரியர்கள். 


ஒருவாரம் வெளியே அமர்ந்தான் முருகன், வகுப்பு மாணவர்கள் அவனை கண்டு சிரிக்க, அவனுக்கு அவமானமாக இருந்தது.


தாயிடம் சொல்லி அழுதான். அவர் பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என்று வீட்டிலே இருக்க சொல்லி விட்டார். 


இந்த உண்மையை தான் திகழிடம் சொல்லாமல் மறைத்தார். சொன்னால் கண்டிப்பாகப் பள்ளிக்கு சென்று சண்டை போடுவாள் என்று பயத்தில் மறைத்தார். 


முருகனை அழைத்து பள்ளிக்கு சென்றாள். அவனது வகுப்பு ஆசிரியரிடம் செல்லாமல் நேரடியாக தனிஷ்ஷிடம் சென்று விட்டாள்.  ' அவன் சொல்லாமல் ஆசிரியர்கள் இப்படி செய்ய மாட்டார்கள் 'என்று எண்ணித் தான் அவனைப் பார்க்க சென்றாள். 


 ஆனால் இது முதல்வர் கொடுத்த கட்டளை,  தனிஷ்ஷிற்கு இவ்விஷயம் தெரியாது. 


அலெக்ஸ் திகழ் வந்ததை தனிஷ்ஷிடம் சொல்ல , அவனோ ' இப்போ என்ன?' என்பது போல நுதலை சொறிந்தவன், உள்ளே வர அனுமதி தர, அலெக்ஸ் அவர்களுக்கு வழி விட்டான். 


மூவருமாக உள்ளே நுழைந்தனர். அவங்களை கண்டதும்

' இது அவங்க அம்மா ! தம்பியா இருக்குமோ ! நம்ம ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டு இருக்கான், இங்க தான் இவனும் படிக்கிறானா? என்ன பிரச்சனை தெரியல ! என்ன பிரச்சனைய கொண்டு வந்திருக்காளோ ! ' என மீண்டும் நெற்றியை நீவிக் கொண்டே 

"சொல்லுங்க " என்றான்.


"இவன் முருகன், எட்டாவது படிக்கிறான். கே .ஜி .ல இருந்து இங்க தான் படிக்கிறான். இப்போ வரைக்கும் கிளாஸ் டாப்பர் இவன்..."என்று நிறுத்த, 


"இப்போ அதுக்கு என்ன?"என தயங்கியபடி கேட்டான்.


"அதுக்கு என்ன வா? கிளாஸ் டாப்பரா வர பையன், நாளைக்கு உங்க ஸ்கூல் பெருமைப்பட்றது போல மார்க் எடுப்பான்ல, எங்க ஸ்கூல்ல இவ்வளவு மார்க் எடுத்திருக்கான் போஸ்ட் ஒட்டி விளம்பரம்  பண்ணுவீங்கல ! உங்க உழைப்புக்கு அதிகமா  அவனும் கஷ்டபட்டு படிச்சி மார்க் எடுக்குறான்ல. அதுக்கு மரியாதை குடுத்தாவது ஒரு  வாரம் ஃபீஸ் கட்ட டைம் குடுக்கக் கூடாதா? 



ஸ்கூல் பீஸ் கட்டலை எங்க தப்பு தான் , அதுக்கு ஒரு வாரம் வெளிய உட்கார வைக்கிறது எந்த விதத்துல நியாயம்? எல்லாரும் சமம் தான் ஸ்கூல்ல யூனிஃபார்ம் கொடுத்தாங்க.. ஆனா நீங்க வெளிய உட்கார வச்சி பிரிவினை காமிச்சிட்டீங்கல !"என தன் ஆதங்கத்தை கேள்வியாக கேட்டு வைக்க, புரியாமல் விழித்தான். அவனது விழிகள் அவனுக்கு இதில் சம்மதமில்லை என்றன. 


"வாட்? ஒரு வாரம் வெளியே உட்கார வச்சிருந்தாங்களா?"என்றவன், முதலில் நம்பாமல் முதல்வரை தன் அறைக்கு அழைக்க, அவரும் வந்தார். 


"என்ன சொல்றாங்க இவங்க? ஸ்கூல் ஃபீஸ் கட்டாதவங்கள வெளிய உட்கார சொல்லி இருக்கீங்களா?" என நம்ப முடியாமல் கேட்டான்.


"எஸ் சார் இது வழக்கமா பண்றது தான் சார்"என்றதே அவனுக்கு பேரிடியாக இருக்க, "வாட் நான்சென்ஸ் !"என அவ்வறையே அதிர கத்தியிருந்தான். முதல்வரே அரண்டு போய் விட்டார்.


' இவன் நல்லவனா? இல்ல கெட்டவனா?' என தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள்.


Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2