இதயம் - 29

 இதயம் 29

"நீ என்னை விரும்பற தானே ! அப்போ தாலி கட்டு சைத்து..." தன்னருகே அமர்ந்து விழியிரண்டையும் கூராக்கி மிரட்டும் அவளைக் காண பயம் ஓர் புறமும் என்றாலும் அவளது மிரட்டலுக்கு அடிபணிந்து அவள் வசமாகி விட்டாலே போதும் என்றது காதல் மனது.


இரு கைகளை கூப்பி சரணாகதி அடைவது போல,  தாலியை அவள் கழுத்தருகே கொண்டு வந்து  'உன்னிடம் சரணாகதியாகிறேன்"என்று சொல்வது போல தன் மனதைக் காட்ட விரும்பினான்.


ஆனால் அதற்குள் இன்னொரு குரலும் அவனை மேலும் கதி கலங்க வைத்தது.


"சைத்து, நீ மட்டும் அவ கழுத்துல  தாலி கட்டின. அப்றம்  என் கழுத்துல தூக்கு கயிறு தான் ஏறும். நான் தற்கொலை செஞ்சிப்பேன். உனக்கு உன் பெரியம்மா வேணாமா??"என்றிட கையிலிருந்த தாலியைத் தூக்கி எறிய  வேண்டும் போலிருந்தது.


அவர் என்ன தான் தனக்கு விரோதமாக செய்தாலும்  தனக்கவர் 'பெரியம்மா ' என்ற எண்ணம் அவனுக்குள் ஊன்றிப் போயிருக்க, அவரும் முக்கியம் என்று கொஞ்சம் தயங்கினான்.


அவள் தயக்கத்தை கண்டு"ஓ... அவங்க சாகறேன் சொன்னா, என்னை விட்டுடுவீயா?? இதான் உன் காதலா?? அவங்களுக்காக என்னை தூக்கி எறிஞ்சிட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ணிப்ப அப்படி தான"என்று  ஆவேசமாகக் கேட்டாள் வைஷு. அவனது தலையோ அனிச்சையாக இல்லை என்று ஆடியது 


"அப்போ கட்டு" என்றாள். "அவ கழுத்துல. தாலிய கட்டுன . உன் பெரியம்மா உயிரோடவே  இருக்க மாட்டேன்"என்று மிரட்ட, அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை இருவரையும் பகைவர்களாக்கிக் கொள்ள அவன் விரும்பவில்லை . இருவரும் தனக்கு வேண்டும் என்று  தான் இதுவரையிலும் எண்ணிக் கொண்டு இருக்கிறான். ஆனால் அது அவர்களுக்கு புரியவில்லை .


இருவரும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்க, அவனுக்கு தான் தலைச் சுற்றியது. வைஷுவின் மடியிலே மயங்கி நினைவை இழந்தான்.


"சைத்து... சைத்து..." என வைஷுவும் பெரியம்மாவின் குரலும் இரண்டு முறை கேட்டது. அதன் பின் கேட்டதெல்லாம் அவனது  தாயாரின் குரல் தான்.


"டேய் சைத்து..." என்று மீண்டும் கத்த, பதறியடித்து கொண்டு எழுந்து தன் கோலத்தையும் தன் இருப்பிடத்தையும்  கண்டான்.


"கனவா???"என முணங்கி கொண்டே தன் அறையை தான் நோட்டம் விட்டான். சாந்தி அவரது முந்தானையை எடுத்து அவனது முகத்தை துடைத்தவர்," வேர்த்து வடியற அளவுக்கு அப்படி என்ன கனவு கண்ட நீ?"என கேட்டார்.


"பச்... ஒண்ணுமில்லமா"என்று அவர் மடியில் சாய்ந்தான்.


"சைத்து, உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் தானே ! இல்ல பெரியம்மாக்காக ஒத்துக்கிட்டீயா??" என்றதும் அவரை நிமிர்ந்து பார்த்தான்.


"இல்லடா, கல்யாண பேச்சை எடுத்ததுல இருந்து  உன் முகம் கலையாவே இல்ல சோகமாகவே இருக்கீயா அதான் கேட்டேன்"என்றிட, "அதெல்லாம் ஒண்ணுமில்ல மா"என்று சமாளித்தவன், 


மேலும் தாயை இறுக்கி கட்டிக் கொண்டு படுத்தான். அவரும் கொஞ்ச நேரம் தலையைக் கோதிக் கொண்டிருந்தார்.

நேரம் செல்ல"சைத்து, நல்ல நேரத்துல மண்டபத்துக்கு போகணும் போய் குளிச்சிட்டு வா"என்றதும் படக்கென எழுந்தவன், துவாலையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தான்.


நல்ல நேரத்தில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் அனைவரும் மண்டபத்திற்கு விரைந்தனர். பெண் வீட்டுக்காரர்களும் நல்ல நேரத்தில் வந்து சேர்ந்தனர்.


அந்த மண்டபம் முழுதும் உற்றார் உறவினர், சொந்தபந்தங்கள் , நண்பர்கள் உடன் வேலை செய்பவர்கள் எனக் கூடி மண்டபம் முழுவதும் நிறைந்திருந்தனர்.


பெரியவர்கள் பேசி  நிச்சயத்தட்டை மாத்திக் கொள்ள பொண்ணும் மாப்பிள்ளையும் மேடையில் வந்து ஜோடியாக நின்று அனைவருக்கும் வணக்கம் வைத்தனர்.


சுழல் காற்றாக அங்கிங்கும் ஓடிக் கொண்டிருந்தார் சரஸ்வதி. தான்  எண்ணியது போல மகனின் கல்யாணம் நடக்கப் போகிறது இனி  எல்லாம் தன் ராஜ்ஜியம் என்பது போல வலம் வந்தார் சரஸ்வதி. அவரை அங்கே கையில் பிடிக்க முடியவில்லை. 


வரிசையில் எகாவுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்த வஸ்தியை மேடையிலிருந்து பார்த்தான் சைத்து. அவர்கள் அருகே விஷ்ணுவும் மகிழும் அமிர்ந்திருப்பதையும் கண்டவன் வைஷுவை தேட, அவளோ வந்திருக்கவில்லை. ஏமாற்றமாக முகத்தை வேற எங்கோ திருப்பிக் கொண்டான்.


அவனது கண்கள் தங்களைச் சுற்றி வட்டமடிப்பதையும்  பின் ஏமாந்து போவதையும்  பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள் வஸ்தி.


தாமரை இலையில் சிதறி கிடக்கும் நீர் போல ஒட்டாமல் இருந்தனர் மணமக்கள் இருவரும். தன் பக்கத்திலிருப்பவளை ஒரு உயிராக கூட நினைக்காமல் ஏதோ ஒரு  பொருளுடன்  நிற்பது போல் தான் நின்றான் சைத்து. அப்படி தான் அவனும் நினைத்து கொண்டான்.இரண்டடி தள்ளி தான் நின்றனர் இருவரும். 


ஒருவரைப் பார்த்துக் கொள்ள, பேசி சிரிக்க, வம்பிழுக்க, கிண்டல் கேலியென எதுவுமில்லாமல் யாருக்கோ வந்த விருந்தைப் போல தான் இருவரும் இருந்தனர்.


அப்பட்டமாகத் தெரிந்தது அவர்களது எண்ணமும் இடைவெளியும் தான். வந்தவர்கள் தங்களுக்குள்ளே பேசி ஒரு முடிவை எடுத்துக் கொண்டனர்.


அதற்கு எல்லாம் ஐயமில்லை என்பது போல மேடையில் நின்று கொண்டிருந்தான் சைத்து. சாந்தி மட்டுமே மகனை எண்ணி வருத்தமாக வலம் வந்தார்.  ஆனால் சரஸ்வதி கண்களுக்கு அதெல்லாம் புலப்பட வில்லை.


"பிரதி, உன் கசினுக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு நினைக்கிறேன்"என்று மெல்லமாக அவள் காதை கடித்தான் எகா. 


"ஏன்  அப்படி சொல்ற?"


"எதுக்கோ யாருக்கோ வந்தது போல நிக்கறான். பக்கத்தில் ஒரு ஜீவன்  இருக்குங்கறது கூட நினைவு இல்லாம நிக்கறான் பாரு. அந்தப் பொண்ணோட நிலமை நினைச்சா பாவமா இருக்கு" என்றான் பெருமூச்சை சொரிந்தப்படி. 


"ஏன் ஏன் அவன் என்ன பண்ணிடப் போறான் அவளை. அதெல்லாம் நல்லா பார்த்துப்பான்..."தன் அத்தை மகனுக்கு  வக்காலத்து வாங்கினாள் வஸ்தி.


"நீ தான் மெச்சிக்கணும் உன் அத்தை மகன "என்று அலுத்துக் கொண்டான்.


"அவன் ரொம்ப ஷை டைப் காந்த். அதுனால அப்படி இருக்கான். நல்லா பழகிட்டானா  நல்லா பேசுவான்..."என்று மீண்டும் அவனுக்காக பேசினாள். 


"ம்ம்... ஓ. அப்றம். பழியும் வாங்குவான் அப்படி தான"என பதிலடி கொடுக்க ,அவளோ வாயை மூடிக்கொண்டாள். 


பின் வந்தவர்கள் வழக்கம் போல புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து விட்டு, பரிசைக் கொடுத்து விட்டுச் செல்ல, வேண்டா வெறுப்பாக வாங்கிக் கொண்டு கடனுக்கே சிரித்து வைத்தான்.


இதை எல்லாம் வஸ்தி கவனிக்காமல் இல்லை... 'அவனிடம்  பேச வேண்டும்'  என்று எண்ணிக் கொண்டாள்.


மண்டபத்திலிருந்த சொந்தங்களின் எண்ணிக்கைக் குறைய ஆரம்பித்தது. மணமக்களை தனியாகப் போட்டோ  எடுக்க அழைக்க, சைத்துவோ அதை தவிர்த்து விட்டு கல்யாணத்திற்கு பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று  மற்றவர்களின் வாயடைக்க, முடிவாகச் சொல்லிவிட்டான்.


புகைப்படக்காரர்களே  நொந்து போகற அளவுக்கு அவனது செயலிருக்க, 'எதற்கு இந்தக் கல்யாணம்? எதுக்கு கூப்பிட்டடீங்க'என்ற சந்தேகம் வந்து விட்டது . நேரம் செல்ல வந்தவர்களும் சென்றிருக்க, இரு குடும்ப வீட்டார்கள் மட்டுமே இருந்தனர்.


வஸ்தியை மட்டும் விட்டுட்டு மூவரும் வீட்டுற்குச் சென்றனர்.வஸ்தி தன் குடும்பத்துடன் சிரித்து பேசி நேரத்தை செலவிட்டவள், தனியாக வந்து வானத்தை வெறிக்கும் சைத்துவை பார்த்து விட்டு அவனை நோக்கி சென்றாள்.


அவள் வந்தது கூட தெரியாமல் விட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் சைத்து. அவன் கண்களில் நீர் துளி திரண்டு நிற்பதைக் கண்டு அதிர்ந்தாள்.


'இவன் அழும் ரகமில்லையே... அழ வைக்கும் ரகமாச்சே !' என்று எண்ணிக் கொண்டு"சைத்து"என அழைத்தாள். திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். வஸ்தி தான் அவன் முன் வந்து நின்றாள்.


'நீயா'என்பது போல அவளைப் பார்த்து விட்டுத் திரும்பிக் கொண்டவன் துளிர்த்த நீரைத் துடைத்துக் கொண்டான்.


"ஏன் பிடிக்காத இந்தக் கல்யாணத்த   செஞ்சுக்கற?" மனதில் உள்ளதை கேட்டாள்.படக்கென்று திரும்பிப் பார்த்தான். ஆனால் பதில் சொல்லவில்லை.


"எனக்கு தெரியும் உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லைனு . எனக்கென்ன இந்த ஊருக்கே தெரியும் உனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு அப்றம் ஏன் செஞ்சுகிற? நீ நீயா இல்ல சைத்து. எதை கேட்டு அடம்பிடிக்கற நீ, இந்தக் கல்யாண விஷயத்துல ஏன் அமைதியா இருக்க நீ??? பதில் சொல்லு" 


"என்ன சொல்லச் சொல்ற, விரும்பினது கிடைக்கல... அந்த கோபத்துலே எடுத்த முடிவு தான் இது. என்ன பண்ண சொல்ற?" 


"விரும்பினது கிடைக்கலையா? நீ முயற்சி பண்ணியா??? சரி கோபத்துல ஒத்துக்கிட்ட. எப்படி அந்தப் பொண்ணோட  வாழ்வ?  உன் கோபத்தால எடுத்த முடிவு இன்னொரு பொண்ணோட வாழ்கையையும் சேர்த்து கெடுக்கப் போற நீ?"என்றாள்.


விரக்தியில் சிரித்தவன்"கண்டிப்பா அது மட்டும் நடக்காது... நான் யார் வாழ்க்கையும் கெடுக்க மாட்டேன்"என்று உறுதியாகச் சொல்ல அவளுக்கு உருத்தியது. 


"கல்யாணத்த நிறுத்த போறீயா???" 


அதற்கும் சிரித்தவன் பதில் சொல்லாது அவளுக்கு சம்பந்தமில்லாத கேள்வியைக் கேட்டான்.


"ஏன் வைஷு வரல?" என்றான்.


அவனை உறுத்து விழித்தவள்"நாளைக்கு வருவா?"என்றாள்."ம்ம்... சரி நீ போய் ரெஸ்ட் எடு"என்றான். 


அவன் வாயிலிருந்து எதையும் பிடுங்க முடியாது என்று தெரிந்து பின் கேட்கிறது என்று தோன்றினாலும் கடைசியாக கேட்டுப் பார்த்தாள்.


"யார நீ காதலிச்ச?" என்றாள். அவள் முகம் பார்த்தவன் அருகில் அழைத்தான். அவளும் அருகில்  செல்ல அவளை இறுக்கி அணைத்தவன், " எனக்காக நீயாவது அக்கறை பட்டு யோசிக்கறீயே   அதுவே போதும். அதுக்கு தேங்கஸ் "என்று விடுவித்தான். அவளும் அமைதியாக அங்கிருந்து குழப்பத்துடன் சென்றாள்.


*****


விஷ்ணு மகிழும் அசதியில் உறங்கிட எகா, வைஷு மட்டும் படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.


"என்ன எகா? எங்கெஜ்மெண்ட் எப்படி இருந்தது அதை பத்தி சொல்லவே இல்லை..." என்றாள்.


"நீ வேற ரெண்டு பொம்மைய வச்சி நிச்சயம் பண்ணினா எப்படி இருக்கும் அப்படி இருந்தது"என்றதும் அதிர்ந்தவள்.


"என்ன சொல்ற நீ?"


அவனும் அங்கு நடந்த கூத்தைச் சொல்ல"அப்போ விருப்பமில்லாம தான் கல்யாணம் பண்ணறானா? "சந்தேகமாக கேட்டாள்.


"யாருக்கு தெரியும் அப்படி கூட இருக்கலாம். அவனுக்கு கல்யாணம்  எல்லாம் ஒரு கேடு. என்ன கேட்டால் அவனுக்கு அதெல்லாம் வேணாம் தான் சொல்வேன்"என்று அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டு போக அவளோ சைத்துவை பற்றி தான் யோசித்து கொண்டிருந்தாள்.


அவளிடம் பண்ணியது, நவநீதனைப் பற்றி கேட்டவைகள் எல்லாம் நினைவிற்கு வந்தது... அவை  எல்லாம் நினைக்கும் போது தேகம் சிலிர்த்தது. அவளால் படத்தில் கவனம் செலுத்த முடியவில்லை எழுந்து கொண்டாள்.


"ஏன் எழுந்திருச்சிட்ட ?"


"தூக்கம் வருது "என்று சமாளித்து விட்டு  உள்ளே சென்று படுத்தவளுக்கு அவனது ஞாபகம் மட்டுமே மூளைக்குள் சுழன்றன. தூக்கமின்றி அவனையே நினைத்திருக்க, அவனும் அவளை தான் நினைத்து கொண்டிருந்தான்.


***


மறுநாள் பட்டுவேஷ்டி சட்டையில்  ஆண்மகனுக்குரிய மிடுக்குடன் மணமேடையில் ஐயர் சொல்லும் மந்திரங்களைக் கடனுக்கே என சொல்லிக் கொண்டிருந்த்தவன், ஐயர் 'பொண்ணை அழச்சுட்டு வாங்ககோ 'என்றதும் அவனது பார்வை வைஷுவைத் தழுவ, அவளும் அவனைத் தான் பார்த்தாள்.


இருவரின் பார்வை நேர்கோட்டில் நின்றது. அதை கலைக்கும் விதமாக ஹேமாவின் அழுகுரல் கேட்டு அனைவரும் பதறிப் போனார்கள். ஆனால் வைஷு , சைத்து இதழலில் மட்டும் புன்னகை அரும்பியது.


ஆர்த்தி தன் காதலனுடன் ஓடி போயிருந்தாள். மணமகள் அறை வெறும் அறையாக இருந்தது. சிறு காகிதத்தில் மன்னிப்பு கடிதத்துடன் ஓடிப் போன செய்தியை அவள் எழுதிருக்க, ஹேமாவும் அவளது கணவனும் தலையில் அடித்துக் கொண்டு அழுதனர். 


அவர்களை மேலும் காயப்படுத்தினார் சரஸ்வதி . ஹேமாவையும் அவரது குடும்பத்தையும் திட்டித் தீத்தார். மகனை நினைத்து தலையில் அடித்து அழுதார். சாந்தி அவரை கட்டுப்படுத்த முயன்றார்.


சைத்துவோ மாலையை கழட்டிக் கொண்டு எழ , அவனை தடுத்த சரஸ்வதி."சைத்து எந்திருக்காத உனக்கு இன்னைக்கி கல்யாணம் நடந்தே தீரும்"என்றவர்" பிரகதி, போய் சைத்து பக்கத்தில் உட்கார்"என்று கட்டளையிட்டார்.


அவளோ பயந்து வஸ்தியின் கையை பிடித்து கொண்டு அரண்டு போய் நின்றாள்.


"வா சொல்லுறேன்ல"என்று கத்த, அகல்யாவிற்கோ பீதியாக இருந்தது. வஸ்திக்கு கோபம் வந்து "அத்தை "என கத்த,  அதெல்லாம் கண்டு கொள்ளாதவர் பிரகதியை அழைப்பதிலே குறியாக இருந்தார்.


அவர் முன் வந்து நின்ற வைஷு" அவளுக்கு இன்னும் கல்யாணம் வயசே வரல, சட்டப்படி பார்த்தால் இது குழந்தை திருமணம்... போக்கோ சட்டத்தில உங்களை உள்ள தூக்கி வச்சிடுவாங்க"என்றாள்.


"எனக்கு அதை பத்தி கவலை இல்ல.. இன்னக்கி என் மகன் கல்யாணம் நடந்தே தீரும்.  நீ என்ன பண்ணனுமோ பண்ணிக்க... இது என் குடும்ப விஷயம் நீ தலையிடாத"என்றார்.


"ஆஹான் அப்போ நீங்க மட்டும்  என் குடும்ப விஷயத்துல தலையிட்டு என் கல்யாணத்த நிறுத்தினீங்க அது சரியா???"எனவும் திடுக்கிட்டு அவளை பார்த்தார்."அதுக்கு பரிகாரம் பண்ண வேண்டாம்..."என்று சொல்லிச் சிரித்தவள் மேடை ஏறி சைத்து பக்கத்தில் அமர்ந்தாள். அருகே இருந்த மாலையை எடுத்து போட்டுக் கொண்டாள். விஷ்ணுவிலிருந்து பிரகதி வரைக்கும் அதிர்ந்தனர்.


"ஐயரே மந்திரம் சொன்னது போதும் தாலியை எடுத்து  மாப்பிள்ளை கிட்ட கொடுங்க "என்றாள். அவரும் அப்படியே செய்ய , தாலியையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தான் சைத்து.


"உனக்கு விருப்பம் இருந்தால், தாலிய வாங்கி என் கழுத்தில கட்டலாம். இல்ல இங்க எழுந்து போலாம்"என்றாள்.


ஒரு நொடி சரஸ்வதிய பார்த்தான். அவரோ கண்ணை சொருகி மயங்குவது வர, கையில் எடுத்த தாலியை வேகமாக அவள் கழுத்தில்  கட்டினான்.  சரஸ்வதி சாந்தி மீது மயங்கி சரிந்தார்

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2