இதயம் - 26

 

இதயம் 26


நவநீதனால் நாட்களை கடத்த முடியவில்லை. வைஷுவும் அவனுக்கேற்ற பதிலைச் சொல்லவில்லை என்றாலும் பெண் கேட்டு வாருங்கள் என்று சொன்னதே பெரிய காரியம். இதோ தாய் தந்தையைக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டான் வைஷுவை பெண் கேட்டுவிட. வதனா இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.



நீலகண்டனிடம் வைஷுவை பற்றிப் பட்டும் படாமல் உண்மையைச் சொன்னார் வதனா. அதெல்லாம் அவர் காதில்  போட்டுக் கொண்டால் தானே. 'நண்பனின் மகள், அவன் வளர்ப்பை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். நீ  தேவையில்லாமல் குழப்பிக்காத 'என்றவர் கூறிவிட அவருக்கு கடுப்பானது. 


அவளை பற்றி மகனிடமும் சொல்ல முடியவில்லை. அவன் தான் அவள் மேல் காதல் கொண்டு பிதற்றிக் கொண்டிருக்கிறானே. காதல் கண்ணை மறைத்திருக்கும் போது உண்மை அவனுக்கு எவ்வாறு புரியும் என்று எண்ணியவர், தன்னை மீறி அனைத்தும் செல்வதைக் கண்டு ஆத்திரம் தாள வில்லை.  எப்படியாவது கல்யாணத்தை நிறுத்தி விட  வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்தவருக்கு. சரஸ்வதியின் நியாபகம் வந்தது. அவருக்கு அழைத்து விஷயத்தை சொன்னார்.


அவரும் வதனாவிற்கு ஆறுதல் சொன்னவர், 'என்ன சொன்னால் அவளுக்கு கோபம் வரும். எதை சொன்னால் அவள் கோபப்படுவாள் என்று அறிந்து வைத்திருந்த சரஸ்வதி அதன் படியே தோழிக்கு சொல்லிக் கொடுக்க, அவரும் புரிந்து கொண்டார்.


மறுநாள் மூவரும் வைஷுவை பெண் கேட்டு அவளது இல்லத்திற்கு வந்திருந்தனர்.  வைஷுவை வஸ்தி தான் அலங்கரித்தாள்.


மிதமான ஒப்பனைகளிலும் தேவதையாக ஜொலித்தாள் வைஷு. வஸ்தியும் வைஷுவும் செல்பி எடுத்துக் கொண்டனர். அதை வஸ்தி ஸ்டேட்டஸாக வைக்க, முதல் பார்வையாளராக பார்த்த சைத்துவிற்கு உள்ளுக்குள் பெரும் பிரளையமே உண்டாகிப் போனது.


தனக்கு இவள் 'இல்லை' என்ற ஏக்கம் உள்ள பாடாய் படுத்தியது. அவன் கோபத்தில் செய்த காரியம் தான் இப்போது அவனுக்கே எதிராக நிற்கிறது. பாவம்' சம்மதம் ' சொன்னவனுக்கு தெரியவில்லை சரஸ்வதியின் வேகம்.


சொஜ்ஜி பஜ்ஜி டீ பலகாரங்களுடன் பூ , பலம் , தட்டு எல்லாம் நிறைந்திருந்தின.  ஒருவர் கண்கள் மட்டும் க்ரோதத்தில்  மின்ன, மற்றவர்களின் கண்கள் ஆனந்தத்தில் மின்னின.


வஸ்தி, வைஷுவை அழைத்து வந்தாள். மூவரையும் வணங்கி விட்டு சோபாவில் வஸ்தி மகிழுடன் அமர்ந்து கொண்டாள். எகாவும் விஷ்ணுவும் ஒரு புறம் அமர்ந்துக் கொண்டனர்.


நீலகண்டன் தான் ஆரம்பித்தார்."விஷ்ணு, பசங்களுக்கு பிடிச்சிருக்கு நமக்கும் பிடிச்சிருக்கு. இன்னும் ஏன் நேரத்தை கடத்திட்டு  தட்டை மாத்தி முறை படி கல்யாணத்துக்கு நாள் குறிச்சிடலாம்ல..." என்று சொல்லி சிரித்தார்.


"அதுவும் சரி தான் நீலு தட்டை மாத்திடலாம். அதுக்கு முன்ன இன்னொரு வாட்டி பசங்க கிட்டதையும் கேட்டிடலாம். வைஷுமா உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் தானே !"எனக் கேட்டதும் அவள்"சம்மதம் ப்பா"என்றாள்.


"தம்பி உங்களுக்கு...??"


"அங்கிள்,  இந்தக் கேள்வி அவசியம் தானா? நான் எப்பயோ சம்மதம் சொல்லிட்டேனே ! "என்றான் குதூகலமாய்.


"தனியா எதுவும் பேசணும் நினைக்கறீங்களா???" இருவரையும் பார்த்து கேட்டார் விஷ்ணு. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 


"இல்ல,  அங்கிள் மொதல்ல நீங்க பேசி முடிங்க. அப்றம் நாங்க பேசிக்கறோம்"என்று வைஷுவை காதலாகப் பார்க்க, அவளும் நட்பாக அவனை கண்டு சிரித்து வைத்தாள்.


"அப்றம் பேச என்ன இருக்கு தட்டை மாத்திக்கலாம்ல" என நீலகண்டன் விஷ்ணு பார்த்து கேட்கவும், வாய்த் திறத்தார் வதனா. 


"பேச வேண்டியது இருக்குங்க... பேசி முடிச்சிட்டு தட்டை மாத்திக்கலாம்"என்று பீடிக்கையுடன் சொல்ல, மற்றவர்களின் முகங்கள் எல்லாம் சுருங்கி தான் போயின. 


வரதட்சணை எதிர்பார்கிறாரோ என்று எண்ணிய மகிழ், "நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்கனு சொல்லுங்க நாங்க எங்க பொண்ணு செய்றோம். எங்க பொண்ணுக்கு இல்லாததா... என்ன எதிர்பார்க்கிறீங்க சொல்லுங்க செய்ய நாங்க தயார் ?"என முகம் சுணுங்காமல் கேட்டார்.


"ஐயோ ! நாங்க அதெல்லாம் எதுவும் எதிர்பார்க்க மாட்டோங்க. எங்களுக்கு இருக்கறது ஒரு பையன் அவனுக்கு தான் எல்லாம். இவர் பிஸ்னஸ் பண்றார். தம்பி ஸ்டூடியோ வச்சிருக்கான். பணத்துக்கா எங்களுக்கு பஞ்சம்.

நீங்க உங்க மகளுக்கு செய்றத செய்ங்க அதுல நாங்க தலையிடவும் மாட்டோம்... 


நான் என்ன சொல்ல வர்றேனா, கல்யாணத்துக்கு அப்றம் பொண்ணு வேலைக்கு போகக் கூடாது.  வீட்லே ராணி மாறி இருந்தால் போதும் சொல்றேன். அவளும் சம்பாரிக்கணும் எந்த அவசியமும் இல்ல... அவ வேலை பார்த்து உங்களுக்கு கொடுக்கணும்னு கூட எந்த நிபந்தனையும் இல்ல. அதுனால வேலைக்கு போக வேணாம் வீட்லே என்னோட இருக்கணும். இதுக்கு சம்மதம்னா மேற்கொண்டு பேசலாம்"என்று பவ்யமாகப் பேச வந்ததை பேசி முடித்து விட்டார். 


நீலகண்டனும் நவநீதனும் தாயை முறைத்தனர். "உன் கிட்ட முன்னாடியே சொன்னேலடி பொண்ணுக்கு நம்ம பையனை போல ஸ்டுடியோ வைக்கணும் ஆசை இருக்கு. அவளும் போட்டோகிராபர் தான் மறந்துட்டியா? இப்போ எதுக்கு சம்மந்தம் இல்லாம பேசிட்டு இருக்க நீ???"பல்லை கடித்துக் கொண்டு அவருக்கு மட்டும் கேட்கும் படி கேட்டார்.


"அதுக்காக மருமக புள்ளையும் வேலைக்கு அனுப்பிட்டு நான் தனியா இருக்கணுமா??? நீங்க பிஸ்னஸ் பிஸ்னஸ்னு  போயிடுவீங்க.. இவன் ஸ்டூடியோவே கதினு கிடப்பான். சரி வந்தவளாவது துணைக்கு இருப்பானு பார்த்தால் அவளும் ஸ்டூடியோனு போனா நான் மட்டும் தனியா இருக்கணுமா? போங்க... இதான் என் முடிவு. இதுக்கு சம்மதம்னா பேசித் தட்டை மாத்துவோம் இல்லையா கிளம்பலாம்"என்று முடிவாகச் சொல்லி விட்டார்.


நீலகண்டனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. விஷ்ணுவின் முகத்தை அவரால் பார்க்க முடியவில்லை. 


அங்கே அமைதி மட்டுமே நிலவியது அதை கலைத்தார் வதனா. "என்னங்க எல்லாரும் அமைதியா இருக்கீங்க.உங்க விருப்பத்தை சொல்லுங்க..."என்றார் உள்ளே எழுந்த குதூகலத்தில். 


"இல்லம்மா, பாப்பாக்கு போட்டோகிராபினா இஷ்டம். கல்யாணம் பண்ணினாலும் அதை தொடரனும் நினைக்கறாள். அதுனால நான் நீலகண்டன் கிட்ட பேசினேன். அவனும் சரினு சொன்னான். மாப்பிள்ளைக்கு  விருப்பம் இருக்குனு சொன்னதால தான் இந்தக் கல்யாணப் பேச்சை எடுத்தோம்."விஷ்ணு விவரிக்க, 


"ஓ... அவங்க சரினு சொல்லிட்டா மட்டும் போதுமா?? நாங்க அங்க என்ன வேலைகாரியாவா இருக்கேன். என்னோட விருப்பத்தை எல்லாம் கேட்க மாட்டிங்களா அண்ணா.  இவன் அந்த ஸ்டுடியோவையே கட்டிட்டு அழறான். இவர் பிஸ்னஸ் பிஸ்னஸ் அதை கட்டு அழறார். நான் மட்டும் காவல் பூதம் போல அந்த வீட்டை காத்துட்டு இருக்கணும். 


வர போற மருமகளாவது நமக்கு துணையா இருப்பானு பார்த்தால் அவளும் வேலைக்கு போவானு சொல்றீங்க. எனக்கு வேலைக்கு போற மருமக வேணாம்ங்க... அவ வீட்ல இருக்கறதா இருந்தா மேற்கொண்டு பேசலாம்"என்று கறாராக சொல்லிவிட்டார்.


"ஆனா அம்மா, வைஷுக்கு சில கனவுகள் இருக்கு என்னை போல போட்டோகிராபிய நேசிக்கறாங்க.  கல்யாணம் ஆனாலும் அவங்க ப்ரோபஷனல்ல  தொடரனும் நினைக்கறாங்க. அதை அவங்க தெளிவா எங்கிட்ட சொல்லிட்டாங்க. சொல்லி தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாங்க... இப்போ வந்து ஏன் மா குட்டைய குழப்புற??"என்ற மகனை விழியகல பார்த்தார்.


"ஏன்டா உன் அம்மா, நான் யோசிக்கிறதும் நான் சொல்றதும் புரியல, இன்னும் உன் வாழ்கைக்குள்ள வரல அதுக்குள்ள அவளுக்கு சாதகமாக பேசற நீ ?"என விசும்ப ஆரம்பித்தார். 


வைஷுவிற்கு தலை வலித்தது தலையை பற்றி அமர்ந்திருந்தாள். மற்றவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. விஷ்ணுவிற்கும் மகிழுக்கும் மகளை  விட்டுக் கொடுக்க மனமில்லை. அதேநேரம் இந்த சம்மதத்தை  இழக்கவும் விருப்பமில்லை. 


அவர்களுக்கு 'என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை???'அமைதியாக இருந்தனர்.


பெற்றோர்களின் எண்ணத்தை புரிந்து கொண்டவள், வதனாவின் கூற்றையும் புரிந்து  தான் கொண்டிருந்தாள். அவர் சொல்வதிலும் நியாயம் இருந்தது. அதனாலே அமைதியாக இருந்தாள். என்ன தீர்வு சொல்வதென்று அனைவரும் யோசிக்க, 


வைஷுவோ"ஆன்ட்டி, உங்களுக்கு தனியா இருக்கோம்ன்றது தானே பீல். நீங்க பேசாம என்னோட ஸ்டியோக்கு வந்துடுங்க... வீட்டுக்குள்ளே இருக்கறதுக்கு உங்களுக்கு ஒரு புது அனுபவமா இருக்கும். 


எனக்கும் ஒரு பெரிய சப்போர்ட்டா இருக்கும். உங்களுக்கு என் கூட தான் இருக்கணும் ஐ மீ உங்க மருமக கூட இருக்கணும் ஆசைனா தாராலமா இருங்க..." என்று அவள் ஒரு தீர்வை வதனா திடுக்கிட்டார்.


நவநீதனின் முகமும் நீலகண்டனின் முகம் பிரகாசித்தது. நீலகண்டன் தன் மருமகளை மெச்சினார்.


"நான் உன் கூட கடைக்கு வந்து வேலை பார்க்கணுமா??" முறைப்போடு கேட்டார். ஆனாலும் அவருக்கு அவள் கூறிய தீர்வு பிடித்திருந்தது. அவருக்கே புதுவிதமாக இருந்தது. இருந்தாலும் வதனாவின் மனதுக்குள் தவறான வைஷுவின் பிம்பமே அழிய மறுத்தது.


"வேலை பார்க்கணும் இல்ல ஆன்டி... நீங்க ரிசெப்ஷன்ல உட்காரலாம். என் கூட ஃபங்க்ஷன்ல போட்டோ எடுக்க வரலாம்... ஜாலியா ஊர் சுத்திட்டு பிடிச்சத போட்டோ எடுத்துட்டு, பிடிச்ச சாப்பாட சாப்பிட்டு வரலாம்... நாம ரெண்டு பேரும் சேர்ந்து டேட் பண்றது போல..."என்று கூறி அழகாகச் சிரிக்க, அவர் மயங்கியது என்னவோ உண்மைதான். 


ஆனாலும் அவளைப் பற்றி சரஸ்வதி சொன்னதே நினைவிற்கு வர, அவரால் அவளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் வேண்டாம் என்றே முடிவு செய்து வர அதை அவரால் மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.


'வைஷு இவ்வளவு  இறங்கி போகிற ஆல் இல்லையே...  இவ்வளவு தூரம் இறங்கி பேச என்ன காரணம்? ஒரு வேள வைஷு அவனை காதலிக்க ஆரம்பிச்சிட்டாளா? 'மூளையை குடைந்து கொண்டிருந்தான் எகா.


"எது ஊர் சுத்தணுமா? இதெல்லாம் பசங்களுக்கு தான் ஒத்து வரும் பொண்ணு உனக்கு எல்லாம் செட் ஆகாது . எனக்கு ஊருஊரா சுத்தற மருமக வேண்டாம். அடக்கமா வீட்ல இருந்தாலே போதும்"என்றிட, அவள் பிடித்து வைத்திருந்த பொறுமை எல்லாம் போனது.


"அம்மா என்ன பேசற நீ? வீட்லே அடங்கி இருக்கணும் சொல்ற, நீயும் பெண் தானே மா. உனக்கு எப்போ இருந்து மா பொண்ணுங்க வீட்டுக்குள்ள அடங்கி இருக்கணும் எண்ணம் வந்துச்சி? என் வாழ்க்கைய நினைச்சி பார்த்தியா மா நீ?"என்று பல்லைகடித்தான் நவி.


"உன் வாழ்க்கைய நினைச்சி பார்த்ததனால தான் பேசறேன்.  வேலை வேலைனு ஊர் ஊரா சுத்துனா, உன்னை எப்படிடா பார்த்துப்பா. ரெண்டு பெரும் வேலை வேலைனு சுத்துறதுக்கா உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம். அவ வேலைக்கு போக கூடாது. எனக்கு வேலைக்கு போகிற மருமக வேணாம்ங்க..."


"எனக்கும் வேலைக்கு போக வேணாம் சொல்ற மாமியார் வேணாம்ங்க... ப்ளீஸ்"என்றாள் தன் இருக்கை விட்டு எழுந்து. இது தானே தனக்கு வேண்டும் என்று உள்ளே குதூகலித்தார்.


"ப்ளீஸ் வைஷு , அவங்க கிட்ட நான் பேசி நான் புரிய வைக்கிறேன். அவசர பட்டு எந்த முடிவையும் எடுக்காதீங்க..." என்றவன் கெஞ்ச, 


"ஸாரி மிஸ்டர் நவநீதன், உங்களுக்காக தான் இவ்வளவு தூரம் பொறுமையா பேசினேன். இனி முடியாது. உங்க அம்மாவுக்கு என்னை பிடிக்கல... என் மேல் ஒரு தவறான இமேஜ் கிரியேட் பண்ணி வச்சிட்டு அதை தாண்டி வர மாட்டீகிறாங்க... இப்போ நீங்க பேசி புரிய வச்சாலும்... இது இங்கே முடியும் சொல்ல முடியாது. அஃபடர் மேரேஜ் தொடரலாம். உங்களுக்கு தான் அம்மாவா பொண்டாட்டியா யார் பக்கம் பேசனு கான்ஃப்யூசன் வரும் உங்க நிம்மதி போகும். ஸோ பெட்டர் இங்க ஸ்டாப் பண்ணிடலாம்.


அண்ட் ஆன்டி நான் ஒன்னு கோயில்ல மியூசத்துல  வைக்கிற சிலை இல்ல,பொண்ணு. ஆசை கனவு, லட்சியம் இருக்கற பொண்ணு. என்னை வீட்டுக்குள்ளே உங்கள போல இருக்க சொல்றது என்ன நியாயம்?


என்னால அது முடியாது. உங்களுக்கு ஏத்த மருமகள தேடிக்கோங்க... அப்பா எனக்கு இந்தக் கல்யாணத்துல  விருப்பம் இல்ல."என்று முடிவாக சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்று விட்டாள்.


"அதான் விருப்பம் இல்லைனு சொல்லிட்டாளே. இன்னும் ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க வாங்க?" என்று சிடுசிடுத்தார் வதனா.


"உனக்கு உன் மகனோட விருப்பம் முக்கியம் இல்லேலமா ! அவனுக்கு ஆசை, காதல் , உணர்வு  எல்லாம் இருக்கும்ன்ற மறந்துட்டேல.. இனியும் அப்படியே இரு. இதான் நான் பார்க்கிற கடைசி பொண்ணு. இனி எந்த பொண்ணையும் காட்டி கல்யாணம் பண்ணி வைக்கிறேன் சொல்லி என் முன்னாடி வந்திடாத"என்று சீற்றத்துடன் சொல்லிவிட்டுச் செல்ல, அவருக்கு தூக்கி வாரி போட்டது. 


தவறு செய்து விட்டோமோ என்று எண்ணி கணவனைப் பார்க்க, நீலகண்டனின் விழிகள் சிவக்க, அவரை கொலவெறியோடு பார்த்தார்.


"ஸாரி விஷ்ணு, எல்லாம் எங்க தப்பு  தான். எங்களுக்கு கொடுத்து வைக்கல உன் பொண்ண மருமகளாக்க..."என்று அவர் கையை அழுத்தி தர்மசங்கடத்துடன் அங்கிருந்து செல்ல, ஏதோ குற்றவுணர்வுடனே அங்கிருந்து சென்றார்.


*****


"பொண்ணு பார்க்க வந்தவங்க உங்க பொண்ண வேணாம் சொல்லிட்டு போயிட்டாங்கலாமே ! உண்மையாவா? இப்படி வர வரனெல்லாம் தட்டி தட்டி போகுதே ஜாதகத்தில எதுவும் தோஷம் இருக்கானு பார்த்திங்களா??? தோஷம் இருந்தா பரிகாரம் பண்ணுங்க போயிடும். நல்ல வரனா அமையும்"என்று அக்கறையாக  சொல்வது போல மகிழ் , விஷ்ணுவிடம் குத்தலாகவும் நக்கலாகவும் சொன்னார் சரஸ்வதி.


சைத்துவின் கல்யாணத்திற்கு  பத்திரிக்கைக் கொடுக்க வைஷுவ்வின் வீட்டிற்கு வந்தவர் தன் வன்மத்தை தீர்த்துக்கொண்டிருந்தார். 


வைஷு, "  ஆமா அத்தை எனக்கு வன்ம தோஷம் இருக்காம். என் மேல் நிறைய பேர் வன்மம்  வச்சிருக்காங்கலாம். அவங்க கால் மண்ணை எடுத்து பூஜை செய்தால், அந்த வன்மம் அவங்க மேலே அப்படியே திரும்பிடுமா... அதான் அவங்க காலடி மண்ணை எல்லாம் சேகரித்துத் பூஜை பண்ணனும் நினைச்சிட்டு இருக்கேன்."என்றதும் வெளியே நீட்டிக் கொண்டிருந்தவர் தன் காலை 'லப்'கென்று உள்ளித்து கொள்ள, அதை கண்ட வைஷு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2