மடல் 13

 மடல் 13

கடையின் மையத்தில் வைகுண்டமும்  விஷ்ணு மட்டுமே இருந்தனர்.


தனது புத்தகங்களை வைத்திட, வாடிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் இடையூறு செய்யாமல் நின்று படித்திட  புத்தங்களை கூடுதலாக வாங்கி வைத்துக் கொள்ள இடம் என வாடிக்கையாளருக்கும் தங்களுக்குமான வசதியை ஒருவாறு மணக்கண்ணிலே போட்டு பார்த்தான் விஷ்ணு.


அவனது கணக்கிற்கும் அதிகமான இட வசதிகள் இருந்தன. அக்கடை அவனுக்கு திருப்தியாகவும் இருந்தது.


அன்று வந்து பார்த்த போது விஷ்ணுவிற்கு பிடித்து விட்டது. வாடகையும் அட்வான்ஸ்  எண்ணி வைத்ததை விட அதிகம் இல்லை. அதுவே அவனுக்கு ஆச்சர்யம் தான். அது ஒன்று மட்டும் தான் அவன் கணித்ததில்  தவறாகிப் போனது.


இன்று நல்ல நாள் என்று வசந்தி தேதி பார்த்துச் சொல்ல 'இன்னைக்கே பணத்தை கொடுத்து விடலாம் 'என்று வந்து விட்டான்.


வைகுண்டமும் அங்கு வந்து சேர்ந்தார்.


"ஐயா ! நான் கேக்குறேன் தப்பா எடுத்துக்காதீங்க...! இந்த ஏரியால நிலம் மதிப்பு அதிகம். அதுல நீங்க காம்ப்ளக்ஸ் கட்டி வாடகைக்கு வேற வச்சிருக்கீங்க... கண்டிப்பா ஏரியாவை பொறுத்து கடையோட வாடகையும் அட்வான்ஸ்ம் கூட தான் இருக்கும். அப்படி தான் நானும் ஒரு கணக்கு போட்டிருந்தேன். நீங்க என்ன இவ்வளவு கம்மியா வாங்குறீங்க ! இங்க இருக்க எல்லாருக்கும் இதே ரீதியில தான் வாடகை வாங்குறீங்களா?"


"தம்பி ! என்னைய நீங்க அப்பான்னே கூப்பிடலாம்... இங்க இருக்க எல்லாருக்கும் நானும் என் மனைவியும் அப்பா அம்மா தான்.  அப்படி தான் கூப்டுவாங்க "என்றவரை வியப்பாகப் பார்த்தான்.


"நாங்க இரண்டு பேரும் மட்டும் வசதியா வாழ, அடுத்தவன் உழைப்ப உறிஞ்சணுமா தம்பி !


இந்த காம்ப்ளக்ஸ் யாருக்கும் சத்திரமும் இல்ல, வணிகக் கடையும் இல்ல.. என்னால, உழைக்கணும் நினைச்சு வரவங்களுக்கு கொடுக்க முடிஞ்ச அடைக்களம். அதுக்கு அவங்களால தர முடிஞ்ச வாடகை போதும் எங்களுக்கு. உங்களுக்கு கடைய பிடிச்சதுல சந்தோஷம் வாடகை , அட்வான்ஸ் உங்களால கொடுக்க முடிஞ்சது தானே ?"என பரி வாகக் கேட்டார்.


"என்னை நீங்க விஷ்ணு  இல்ல வேந்தான்னு கூப்டுங்க ப்பா! கடையை பார்த்ததும் நான் போட்ட கணக்குல இருந்து நீங்க ரொம்ப கம்மியாவே அட்வான்ஸையும் வாடகையும் கேக்குறீங்க ! என்னால குடுக்க முடியும்ப்பா ! எனக்கு கடையை பார்த்ததும் திருப்திகரமாக இருந்தது  பிடிச்சும் இருக்கு..."என்றான் முகத்தில் அவன் கொண்ட திருப்தி பிரதிபலிக்க, அவருக்கும் அது பொதுமானதாக இருந்தது .


"சரி விஷ்ணு ! உன்னை பத்தி சொல்லு !" என இயல்பாகப் பேசினார். தன் குடும்பத்தை பத்தி மேலோட்டமாகச் சொன்னான்.


"இத்தன வருஷமா, வாடகைக்கு இருந்த கடைய விட்டு இப்ப காலி பண்ணி வர அளவுக்கு என்ன விஷயம் விஷ்ணு ?!"எனக் கேட்கவும்,  கதிரும் இருவருக்கும் காப்பி கொண்டு வரவும் சரியாக இருந்தது.


இருவரிடமும் அவன் காப்பியை நீட்ட, எடுத்துக் கொண்டனர்.


"எனக்கு என்னை சுத்தியும் என் கடைய சுத்தியும் அமைதி மட்டுமே இருக்கணும் நினைக்கிற ஆள் நான் ! அதுக்காக என்னை சுத்தி சத்தமே இருக்கக் கூடாது சொல்ல  வரல.  அந்தச் சத்தம் என்னை பாதிக்கக் கூடாது ! முன்னாடி இருந்த கடையிலும் அப்படி தான் இருந்தது. தொந்தரவு எதுவும் இல்லாம  கடைய நிம்மதியா நடத்திட்டு வந்தேன். ஆனால் போன மாசம்..."என்று அவன் நடந்ததை சொல்ல,  அப்போது தான் சுடச்சுட ஒரு மிடறு காப்பியை குடித்த வைகுண்டத்திற்கும் புரையேறியது.


"ஒன்னுமில்ல! ஒன்னுமில்ல! பொறுமையா குடிங்க ! தம்பி எங்க போயிட போகுது ?!"என்று அவர் முதுகை தடவிக் கொடுத்தவன், கண்களால் அமைதியாக இருக்கும் படி சைகை செய்தான்.


விஷ்ணுவின் அலைபேசி ஒலிக்க, "ஒரு நிமிஷம் ப்பா !" என்று  விலகிச் சென்றான்.


வைகுண்டம் கதிரிடம் "என்ன டா இந்த தம்பி இப்படி சொல்லுது ?! பாட்டு சத்தம் அதிகமா கேட்டதால கடையவே காலி பண்ணிட்டு வந்திருக்கு. இங்க அந்தத் தேவா கழுத கடையவே அலற விடுவாளே! பேசாம உண்மைய சொல்லி அட்வான்ஸ் திருப்பி கொடுத்திடவா கதிரு ?"என்றார்


"வந்த மகா லட்சுமிய வேணாம் அவர் கையிலே கொடுக்க போறீங்களா?


ஹரிச்சந்திரன் பரம்பரைலாம் நீங்க இல்ல ! வாங்கிட்டீங்கல வச்சுக்கங்க ! தேவா ஒன்னும் பொழுதன்னைக்கும் பாட்டு போடாது. காலையிலும் மாலையிலும் சாமிக் கும்பிடும் போது போடும் சும்மா இருக்க நேரத்துல போடாது... நான் தேவா கிட்ட சொல்லி வைக்கிறேன். நீங்க அமைதியா இருக்கங்க !"


"இருந்தாலும் மறைச்சு அட்வான்ஸ்,  வாடகைன்னு வாங்கறது தப்பு இல்லையா டா ! அந்த தம்பி வேற கடைய பார்த்துக்கட்டுமே ! தேவா கழுதைய அடக்க முடியாது ! காசுக்காண்டி இந்த தம்பி ஏமாத்தனுமா கதிரு?"என்ற  பெரியவரை முறைத்தான் அவன்.


"இல்ல... இங்க தேவா பொண்ணு சத்தமா பாட்டுப் போடும்! உங்களால் நிம்மதியா இருக்க முடியாது வேற கடைய பாருங்க தம்பி  ! கையில இருக்க பணத்தை குடுத்தா, அவன் என்ன நினைப்பான் உங்களை? உங்களை மதிப்பானா அவன்? "


"அதுக்காக ஏமாத்தனுமா  டா?"


"என்ன ஏமாத்தினீங்க நீங்க?"


"அந்த தம்பி உண்மையான காரணத்தை சொல்லியும் இங்க அந்த பிரச்சனை இருக்குனு தெரிஞ்சும் அட்வான்ஸ், வாடகை வாங்கிட்டு இருக்கறது சரினு படலை டா கதிரு !"என வருத்ததுடன்.


"சரி குடுங்க ! பெரிய மனுஷரு ! மனசு கேக்கல உண்மைய சொல்லி குடுத்துடுங்க ! ஆனா , கடை அட்வான்ஸ் வந்ததும் உன் பொண்ணுக்கு காலேஜ் பீஸ் கட்ட பணம் தர்றேன் சொன்னீங்களே பெரியவரே கீழ ஜெராக்ஸ் கடைக்காரனுக்கு.


அவன் கிட்ட போய் நீ வேற எங்கயாவது வட்டிக்கு வாங்கிக்கனு சொல்லிடுங்க...! பாவம் அவனே உங்களை நம்பி தான் இருக்கான். அவனை ஏமாத்தறதுலாம் கணக்குல இல்லேல... நீங்க உண்மைய சொல்லிடுங்க பா !"என்றான்.


வைக்குண்டத்திடம் எப்பவும் கொஞ்சம் சேமிப்பு இருக்கும். அதை யாரேனும் கடனுக்கு கேட்டால் கொடுப்பார் வட்டி  இல்லாமல். கடன் வாங்கியவர்களும்


ஏமாத்தாமல் கொடுத்து விடுவார்கள். சில நேரம் இப்படி தான் அவர் சேமிப்பை தேவையோர்களுக்கு கொடுத்து வாங்கிக் கொள்வது வழக்கம்.


இந்த முறை தன் மனையாளி ராஜாத்தியின் உடல் நிலை சரியில்லாமல் போக மருத்துவமனையில் சேமிப்பை கொட்டி விட்டு மனைவியை காப்பாற்றி கூட்டிக்கொண்டு வந்து விட்டார்.


மகன் , மகளை எதிர்பார்க்காது, யாரையும் தொங்காமல் தன் உழைப்பில்


தன் மனைவிக்கு மருத்துவம் பார்த்திருந்தார்.


அதே நேரம் , காம்ப்ளக்ஸில் கடை ஜெராக்ஸ் வைத்திருக்கும் பழனி என்பவரின் மகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்க, அவளுக்கு பணம் கட்ட, இரு மாதங்கள் முன்னே வைகுண்டத்திடம் கேட்டு வைத்திருந்தார்.


அப்போதே தருகிறேன் என்றவரை தடுத்து  ' கையிலிருந்தால் செலவாகி விடும் கேட்கும் போது குடுங்க பா ' என்று சொல்லியும் விட, வைகுண்டம் ' சரி ' என்றார்.


ஆனால்  அடுத்த இரண்டு மாதம் வைகுண்டம் எதிர்பாராதது நடந்து விட, கையிலிருந்த பணம் கரைந்தும் போக, வைகுண்டம் பழனியிடம்


" காலியா இருக்க கடைக்கு ஆள் வந்து, வாடகை , அட்வான்ஸ் கொடுத்ததும் தர்றேன்" என்று வாக்கு கொடுத்திருக்க, இப்போது  கையிலிருந்த பணம் , பழனி மகளின் படிப்பிற்கு தேவைப் படுகிறது.


இவனை விட்டால், வேற ஒருவன் வருவானோ, எத்தனை நாட்கள் ஆகுமோ ? கடையை பிடித்து போய்  வாடகை, அட்வான்ஸ் எப்போது தருவார்களோ ! அதே நேரம் விஷ்ணுவை  ஏமாற்றுவது போலவும் இருந்தது.


முடிவெடுக்க தயங்கி இருந்தார் , பக்கத்தில் நின்ற கதிரோ ! "நல்லது செய்ய பொய் சொல்றது தப்பு இல்ல பா ! இதுக்கு மேலே உங்க விருப்பம்"என்றான்.


பேசி முடித்து விட்டு, விஷ்ணுவும் அவர்கள் அருகே வந்தார் "அப்புறம் அப்பா நாளைக்கு திங்கஸ் ஷிப்ட் பண்ணிடலாம் இருக்கேன். நாளைக்கும் நல்ல நாள் தானாம், அம்மா சொன்னாங்க... நாளைக்கே நான் திங்கஸ் கொண்டு வந்திட்றேன்" என்றான். அவரும் மனசு இல்லாமல் "சரி "என்றார்.


அவனும்"என்ன ப்பா எதுவும் சொல்லனுமா? ஏதோ குழப்பத்தில் இருக்கறது போல இருக்கீங்க?"என முக பாவனை வைத்து கேட்டு விட்டான்.


இவரும் "அதெல்லாம் இல்ல விஷ்ணு ! நாளைக்கு நல்ல நேரம் பார்த்து வந்திடு பா ! எனக்கு ஒரு வேலை இருக்கு நான் வர்றேன் ! வா கதிரு போலாம்"என்றார் சுரமின்றி.


விஷ்ணுவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டார்கள் இருவரும்.


அவர்கள் இருவரும் சென்றதும், இந்த நற்செய்தியை தம்பியிடம் சொல்ல அலைபேசியில் மதிக்கு அழைக்க ' பிசி ' என் வந்தது.


அதே நேரம் அலைபேசியில் ஶ்ரீ தி டாட்டூ கடை முன் நின்று தான் மதி பேசிக் கொண்டிருந்தான்.


இவனும்  தாமதமாக எடுத்து பேசுவோம் என்று எண்ணியவன், கடையை பூட்டிவிட்டு வெளியே வர,


எதிரே மதி நின்று  அலைபேசியில் பேசுவதை கண்டு கொண்டான்.


தன் அண்ணனை கவனிக்காது, பேசி விட்டு கடையினுள் நுழைந்து கொண்டான். இவன் அந்தக் கடையில் நுழைவதை கண்டு வேகமாக அவனும் நுழைய,  அங்கே மதியையும், கையை நீட்டி பச்சை குத்திக் கொண்டிருக்கும் வர்ஷினியையும் கண்டான்.


அதிரடியாக உள்ளே வந்த விஷ்ணுவை மிரட்சியுடன் பார்த்தனர் அண்ணன் தங்கை இருவரும்.


உள்ளே வந்த விஷ்ணுவிடம் தேவா வாய்க்கு வந்தபடி கேட்டு வைக்க, அதற்கு வர்ஷினி


"இது எங்க அண்ணன் மேம்"என்றாள், தேவாவிற்கு கேட்கும் மட்டும் சொல்ல, "போச்சுடா ! உனக்கு மொத்தம் எத்தனை அண்ணங்க மா ?"என்றாள்.


"இரண்டு தான்..."என்றாள்.


"யாரை கேட்டு இங்க வந்த? எத்தனை முறை கையில கிறுக்கினதுக்கே திட்டி இருக்கேன் உன்னை... இருந்தும் துணிச்சலோடு இங்க வந்திருக்க உனக்கு இவ்வளவு தைரியம்?"என்று கோபத்தில் கையை ஓங்கிட,  இருவருக்கும் இடையில் வந்து நின்றாள் தேவா.


அந்தரத்தில் நிற்கும் அவனது கையையும் அவனையும் மாறி மாறி சிறு பயம் கூட கண்களில் காட்டாது திமிராய் பார்த்தாள்.


"நீங்க ரெண்டு பேரும் அண்ணன்,  தங்கச்சி தான். உங்க ரெண்டு பேருக்குள்ள வரது அநாகரீகம் தான். ஆனா ஒரு பொண்ண பொது இடத்தில அடிக்கிறது தப்பு  ! கைய ஓங்கற அளவுக்கு தப்பு பண்ணிடல அவங்க, கையை இறக்குங்க " என்றதும் அவனது கை அனிச்சையாக இறங்கிட, தேவா சொன்னதும் கையை இறக்கிய விஷ்ணுவை ஆவென பார்த்தான் மதி.


அவன் கையை இறக்கியதும் ஓரமாக சென்று நின்றுக் கொண்டாள் தேவா ! தனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல,


அவள் வர்ஷினிக்கு ஆதரவாக பேசுவாள், அவளை திட்டி விட நினைத்தான். ஆனால் மாறாக நாகரீகம் கருதி விலகி நின்றாள். அதுவே அவனது கோபத்தை கொஞ்சம் மட்டுப் படுத்தியிருந்தது.


"அண்ணா சாரி ! எனக்கு டாட்டூ போடறது ரொம்ப பிடிக்கும். உன் கிட்ட சொன்னா, அதெல்லாம் செய்ய கூடாது சொல்லிடுவியோ பயத்துல தான் உன் கிட்ட சொல்லாமல் வீட்டுல யார்கிட்ட சொல்லாமல் போட்டுக்கலாம் நினைச்சேன். ஆனால் இவங்க பேமிலி மெம்பர்ஸ் கூட வந்ததான் போடுவேன் சொல்லிட்டாங்க, அதான் மதியை கண்வீன்ஸ் பண்ணி கூட்டிட்டு வந்தேன். மதி வேணாம், உங்களுக்கு பிடிக்காது  தான் சொன்னான், நான் தான் கெஞ்சி இங்க அவனை கூட்டிட்டு வந்திருக்கேன் அண்ணா ! சாரி "என்றாள்.


"அம்மாக்கும் எனக்கும் இதெல்லாம் சுத்தமா பிடிக்காது தெரிஞ்சும் நீ போட்டிருக்க வரு! எங்களுக்கு என்ன மரியாதை வீட்ல? இன்னொரு வீட்டுக்கு மருமகளா போக போற நீ ! நாளைக்கு இதுனால உனக்கு பிரச்சனை வந்தா என்ன பண்ணுவ? எதுக்கு வேண்டாததெல்லாம் பண்ணிட்டு இருக்க நீ?"என அவன் கடிந்து கொள்ள,


"அவன் கெஞ்சினா, உடனே ஒத்துக்கிட்டு நீயும் வந்திடுவீயா? அதெல்லாம் பண்ணக் கூடாது சொல்லி அதட்டாம நீயும் கூட்டிட்டு வந்திருக்க...! இது சரியில்ல மதி ! எனக்கு பிடிக்கலன்னு தெரிஞ்சும் பண்ணிருக்கீங்க... இதுனால அவளுக்கு எதுவும் பாதிப்பு ஏற்பட்டா  என்ன பண்றது ?  கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா நீ ?"என தம்பியையும் விடாமல் கடிந்து கொள்ள ,


"அண்ணா அது...!"என சொல்ல தயங்க, விஷ்ணுவின் கோபப் பார்வையில் தலை குனிந்தான். அவன் செயலில் மீண்டும் கோபம் கொண்டான் விஷ்ணு


ஆனால் தேவாவால் அமைதி காத்திட, முடியவில்லை. அவன் பழங்காலத்து மனிதர்களை போல பேசிக் கொண்டு போக, இவளுக்கு கடுப்பாகிப் போனது. 'பேச கூடாது' என்று  அமைதியாக தான் இருந்தாள். ஆனால் விஷ்ணுவின் பேச்சு இவளது அமைதியை உடைக்கும் படி வந்து விட்டது.


"உங்களுக்கு பிடிக்கல ! அந்தப் பொண்ணுக்கு பிடிச்சி இருந்தாலும் உங்களுக்கு பிடிக்கலனா அதை செய்ய கூடாது அப்படி தான? போற வீட்டலையும் இந்தக் கண்டிசனை போட்டால்,  அவளுக்கு பிடிச்சதை எப்போ தான் செய்வா? போற  வீடுன்னு சொல்லி இருக்குற வீட்டை நரகமாக்கிடாதீங்க சார்...! அப்புறம் இன்னொரு விஷயம் , டாட்டூ போட்றதால  உயிருக்கு எதுவும் ஆகிடாது. நானும் டாட்டூ போட்டு இருக்கேன் தான். எனக்கு எதுவும் ஆகலையே !"என கைகளை விரித்து  சொன்னாள்.


அவள் அவ்வாறு சொன்னதும்  விஷ்ணுவின் கண்கள் அவளை ஆராய்ச்சியாகப் பார்த்தன.  அவள் சொன்னது  போல  அவளது கைகளில் பச்சை குத்தி இருக்க வில்லை தாய்க்கு பயந்து ஆடைகள் மறைக்கப்படாத


பாகங்களில்  பச்சை குத்திக் கொள்ளவில்லை


அவன் பார்வையிலிருந்த கேள்விக்கு பதிலாக,"உள்ள இருக்கு"என்று அவனை பாராமல் சொல்ல, அவனும் பார்வையை திருப்பிக் கொண்டான்.


"அண்ணா சாரி  ! இனி உனக்கு பிடிக்காததை செய்ய மாட்டேன். ப்ளீஸ் அண்ணா பேசாம மட்டும் இருந்திடாத !"என  அவன் கையை பிடித்துக் கெஞ்ச,


"ம்... மதி இவளை கூட்டிட்டு போ "என்றதும் அவள் அழுது கொண்டே கிளம்பிவிட, மதியும் உடன் சென்றான்.


அவர்கள் கிளம்பியதும் "எவ்வளவு ஆச்சி?"என்றான் தனது பர்சை திறந்து கொண்டு. அவள் விலையை சொல்ல 'அவ்வளவா? ' என்று பார்த்தான்.


" அவ்வளவு தான் சார் ஆகும்... வெளியே விசாரிச்சிட்டு கூட பணத்தை குடுங்க ! நம்பிக்கை இல்லாமல் குடுக்க வேணாம் "என்றாள், அவன் எதிர் கடைக்கு வர  போகிற தைரியத்தில்.


அவனும் எதுவும் சொல்லாமல் பணத்தை கொடுத்து விட்டு சென்றான். இவளோ மூச்சை இழுத்து விட்டாள்.


மீண்டும் அவன் வந்திருக்க, ' என்ன?' என்பது போல பார்த்தாள்.


தங்கைக்காக இறங்கி வந்திருந்தான். அவள் மேல் கொண்ட அக்கறையில் தேவாவிடம்


"ரொம்ப வலிக்குமா? காய்ச்சல் வந்திடாதே ! பச்சை குத்தின இடத்தில  வீங்குமா? அதுக்கு ஆயின்மெண்ட் எதுவும் போடணுமா? எதுவும்..."என சற்று முன் பேசியவனா என்பது இருந்தது அவளுக்கு.


தங்கை மீது கொண்ட பாசம் மிளிர்ந்தது.


"அதெல்லாம் எதுவும் ஆகாது. வீங்கினா, இந்த ஆயின் மெண்ட் மட்டும் போட சொல்லுங்க..." என்று கொடுக்க, வாங்கிக் கொண்டு அவன் கிளம்பி விட்டான்.


விஷ்ணுவி

ன் அக்கறை  கண்டு இவளை மெய் சிலிர்த்தாள்.



வீட்டிற்கு வந்த விஷ்ணு , தங்கையின் கைப் பிடித்து, அமர வைத்து அதை தேய்த்து விட்டான்.


வர்ஷினிக்கு பேரதிர்ச்சி. வசந்திக்கும் தான்.   அவளை திட்டிக் கொண்டிருந்த வாய் மகனின் அழைப்பில் மூடியது


"விடு மா அவளுக்கு பிடிச்சதை செஞ்சிருக்கா ! நம்ம கிட்ட இருக்கும் போது தான் அவளால் செய்துக்க முடியும்... அவன் இங்க இருக்கற வரைக்கும் அவ பிடிச்சதை செய்யட்டும்"என்றிட, அதன் பிறகு அவர் வாயை திறக்கவில்லை.


தன் அண்ணனை அணைத்துக் கொண்டாள்.. அவனோ தலையை தடவிக் கொடுத்தான். வர்ஷினி தேவாவிற்கு மனதோடு நன்றி உரைத்தாள்.


Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2