மடல் - 12

 மடல் 12


வெய்யோயின் வெண்கரங்கள் அனைத்து உயிர்களையும் உரக்கத்திலிருந்து தட்டி எழுப்பிக் கொண்டிருந்தன. 


ஆனால் ஆதவனுக்கு முன்பாகவே எழுந்த விஷ்ணுவோ , அதிகாலை வேளையிலும் தன் வேலையை தொடங்கிருந்தான். 


' இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாம்... ' என்று நினைத்தாலும் மனமெனும் அலாரம் அண்ணனை நியாபகப் படுத்தி எழ வைத்து விட,


சலிப்பாக எழுந்து அமர்ந்த வர்ஷினியோ அருகே நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் அன்னையைக் கண்டாள்.


அவரோ மகன் இருக்கும் கர்வத்திலும் காரணத்தினாலும் கவலையின்றி நிம்மதி ரேகை முகத்தில் படர, உறங்கிக் கொண்டிருந்தார்.


"பச் ! மூணு பிள்ளைய பெத்திட்டு நீ நிம்மதியா தூங்குற மா ! மூணாவதா பிறந்த, நான் தான் நிம்மதியா தூங்க கூட முடியாம இருக்கேன். பேசாம நீ மதியோட நிறுத்தி இருக்கலாம். என்னையும் பெத்து போட்டு கஷ்டப்பட வைக்கிறீயே மா ! பாவமில்லையா உன் பொண்ணு, போற வீட்லயும் வேலை தான பார்க்க போறேன். இந்த வீட்லயாவது இளவரசி மாதிரி வச்சிருக்க கூடாதா? இங்கேயும் வேலையா சொல்லி கொல்றீங்களே !"என தூக்கத்தில் எழுந்து அமர்ந்து புலம்பிட, 


அவளது அன்னையோ வர்ஷினி எழுந்ததுமே அவரும் எழுந்து கொண்டவர், தினமும் அவள் புலம்புவதை கேட்டு உள்ளுக்குள் நகைத்துக் கொள்வார். பின் அவள் இல்லாத நேரம் மூத்தவனிடம் சொல்லி சிரிக்க, அவனும் தன் தங்கையின் புலம்பலை கேட்டு சிரிப்பான்.


'அவ பார்க்கிறது ஒரு வேலை ! அதுக்கு வருஷம் முழுக்க புலம்பறதுலாம் ஓவரா இல்லையாமா ! ஒரு வேலைக்கே இப்படி புலம்புறவ ! மொத்த வேலையும் அவ தலையில கட்டுனா என்ன செய்வாளோ?' என்க 


'இந்த வீடே வேணாம் ஓடியே போயிடுவா ப்பா ! பாவம் சின்னப் பொண்ணுப்பா கொஞ்சம் நேரம் தூங்கட்டுமே !'என மகளுக்காக பரிந்து பேச, 


"அந்தச் சலுகைய நாம கொடுக்கலாம் மா, ஆனா அதுவே அவளை  சோம்பேறியா ஆக்கிடக் கூடாது! அவ விஷயத்துல கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருக்கணும் மா ! அவ யாருக்காக செய்றாளோ இல்லையோ தனக்காக செய்யவாது தெரிஞ்சு இருக்கணும்... இல்லேனா ரொம்ப கஷ்டப்படுவா மா ! அவ எழுந்து பாக்கட்டும்... நீங்க அவளுக்காக பேசுறத அவ கிட்ட காட்டிக்காதீங்க... அப்புறம் ஏதாவது பேசி, உங்களையே என்கிட்ட பேச சொல்லி  தூது அனுப்புவா ! சரியான கேடி அவ ! ஜாக்கிறதை !" என்று  தங்கையிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி தாயிடம் சொன்னான்.


அதை நினைவு கூர்ந்தவர், அமைதியாக கண்ணை மூடிக் கொண்டு மகளின் புலம்பலை சிரிப்புடன் கேட்டிருந்தார்.


அவளும் எழுந்து காலை கடன்களை முடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள். பக்கத்திலே சமையலறையிலிருந்து  காப்பியின் மனம் அவளை இழுக்க, மெல்ல உள்ளே செல்ல, தங்கையின் வருகையை உணர்ந்தவன், அவள் கையில் காப்பியை கொடுத்தான்.


"தேங்க்ஸ் அண்ணா ! "என்றவள், காப்பியை பருகாமல் "ம்..."என்ற ராகத்தோடு  நுகர்ந்தாள். பின் ஒரு மிடறு பருகியவள், மீண்டும் ராகமிழுத்தாள். தங்கையின் இந்தச் சின்ன செயல் அவனுக்கு எப்போதும் பிடிக்கும்... அதற்காக,  அந்த வேளைக்காகவே காத்திருப்பான்.


"போய் உட்கார்ந்து குடி வரு மா"என்று அனுப்பி வைத்தான். அவளும் சோபாவில் நன்றாக அமர்ந்து காப்பியை ரசித்துப் பருகினாள்.


வெளியே துப்புரவு வேலையை முடித்துக் கொண்டு உள்ளே வந்த மதியோ, தங்கையை புன்னகையுடன் பார்த்து விட்டு, அவனும் சமையலறைக்குள் சென்று அண்ணனிடம் காப்பியை வாங்கி விட்டு, அவளுடன் அமர்ந்தான்.


"மதிஇஇ"என இழுவையுடன் தன் அண்ணனை அழைக்க, அவனோ காப்பியை ரசித்தபடி இருந்தான்.


தலையில் அடித்துக் கொண்டவள், ஷார்ட்ஸ் அணிந்திருந்தவனின் வெற்று தொடையில் சூடு  நிறைந்த குவளையை வைக்க "ஸ்ஆஆ...!"என்று அலறினான்.


வாயை பொத்தி விட்டு, சமையலறையை பார்த்தாள். விஷ்ணு வேலை செய்து கொண்டிருந்தான்.


தொடையை தேய்த்த படி"என்னடி வேணும் உனக்கு? எதுக்கு இப்போ சூடு வச்ச?"என பல்லை கடித்தான் மதி.


"மதின்னு உன்னை கூப்டேன் ! நீ காதுல வாங்காம காப்பி குடிச்சிட்டு இருந்த அதான் இப்படி பண்ணினேன். சாரிஇ...!"என இழுத்தாள்.


"செய்றதை செஞ்சிட்டு சாரியாம். சொல்லு என்ன வேணும் உனக்கு?!"


"இன்னைக்கி போலாமா? "


"எங்க?"


"ப்ச் ! டாட்டூ குத்த !" என்றதுமே அவனுக்கு அல்லை விட்டது. அவளை சமாளிக்கும் பொருட்டு"நாளைக்கு போவோமா?"என்றான்.


"எத்தனை நாளைக்கு ' நாளைக்கு போவோம் சொல்லிட்டே இருப்ப !' இன்னைக்கி போறோம் அவ்வளவு தான் டாட்."என்றாள்.


"உனக்கு கொஞ்சம் கூட பயமில்லையா? எனக்கு பயமா இருக்குடி !"என்று அண்ணனை நினைத்து பயந்தான்.


"நான் பார்த்துக்கிறேன் மதி ! நீ கூட வந்தா போதும்... ப்ளீஸ்"என்று கண்களை சுருக்கி கெஞ்ச,  அவனால் தான் என்ன செய்ய முடியும்.


"வந்து தொலைக்கிறேன்..."என்று பல்லை அரைக்க, அவன் கன்னத்தை பிடித்திழுத்து கொஞ்சினாள் "என் செல்ல அண்ணா !"என்று. "ம்க்கூம்"என்று நொடித்துக் கொண்டான். அவள் சிரிக்க, "ரெண்டும் பேரும் வேலைய ஆரம்பிக்கலையா?"என சமையலறையிலிருந்து குரல் வர"இதோ அண்ணா" என்று வேகமாக வேலையை ஆரம்பித்தனர்.


மதிய உணவிற்கு வெஜிடபிள் புலாவ் ரைட்டா, எக் கிரேவி என தங்கை சொன்ன மெனுவை சமைத்து அசத்தியிருந்தான் விஷ்ணு.


காலை உணவிலும் தன் கை வரிசையை காட்டிட, இருவரும் உச்சு கொட்டி தின்றனர்.


"அண்ணா கடைய எப்போ ஷிப்ட் பண்ண போறீங்க? எப்போ சொன்னீங்கன்னா நான் ஹெல்ப் பண்ண வருவேன் "என்றான் மதி.


"சொல்றேன் மதி !  இன்னும் கடை கன்பார்ம் பண்ணல. பேசி முடிச்சிட்டா ஷிப்ட் பண்றது தான்"என்றான்.


"சரி"என்றான். பாவம் இடமும் முகவரியும் கூடுதலாக கேட்டு இருந்தால் இருவரும் விஷ்ணுவிடம் மாட்டாமல் இருந்திருப்பார்கள். பாவம் விதி அவர்களை விட்டு வைக்கவில்லையே.


"நேரமா வந்துட்றேன். கண்டிப்பா மறக்க மாட்டேன்"என்று நூறு முறை தங்கையிடம் ஜெபித்த பின்னே 

அவனை விட்டாள் வர்ஷினி.


****


வழக்கம் போல  குமஞ்சனம் போட்டு கடையை புகை மண்டலத்துக்குள் மாற்றிருந்தாள் தேவா, முருகனின் திருப்பாடல் ஒன்று அந்த கட்டிடமே அதிர ஒலிக்க, 


காலையில் ' இதே வேலை தான் ' என்று அனைவரும் தேவா செய்யும் அனைத்தையும் சகித்துக் கொண்டு இருக்கிறார்கள்.


கோவிலுக்கு கடும் போட்டி கொடுக்கும் அளவிற்கு பச்சை குத்தும் கடையை கோவிலாக மாற்றினாள் தேவா !


அவளது இந்த அலும்பலை ரசித்த படி ஓரமாக அமர்ந்திருந்தாள் திகழ். இரண்டு நாள் மறைந்திருந்த அவளது அடாவடி தனமும் , குறும்பு தனமும், எப்பவும் உதட்டில் ஒட்டியே இருக்கும் சிரிப்பும், இன்று தான் வெளிப்பட்டன. அவள் முகத்தில் நிம்மதி சாயல் தென்பட, திகழுக்கு வேறென்ன வேண்டும்... அவளை ஆதுரமாக பார்த்தாள்.


"அவனுங்க வானவில்லு சொன்னது சரி தான் போலையே! இப்படி திங்கற மாதிரி சைட் அடிக்கிறீயே திகழு ! தேவா அம்முட்டு அழகா இருக்கேன் ல"என முடியை ஸ்டைலாக கோதி விட்டு சொல்ல,


"ஏய்! ச்சீ ! ரெண்டு நாளைக்கு அப்புறம் தேவா முகத்துல சிரிப்பு தெரியுதேன்னு பார்த்தா... நீ சொல்லுவ மா  உன்னை நான் சைட் அடிக்கிறேன்னு... உன்னை சைட் அடிக்க நான் பொறக்கல மா ! அதுக்குன்னு எவனாவது இழிச்ச வாயன் பொறந்திருப்பான். நான் அந்த துர்திஷ்டாசாலி இல்ல மா நான்"என்றாள்.


"உன்னை தவிர ! என்னை சைட் அடிக்க ஒரு ஆள் வேற பொறந்திருப்பானா? இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு... என்னை பார்த்தா பையன் நினைச்சி தள்ளி போற ஆம்பளைங்க கூட்டத்துல என்னை ரசிக்க ஒருத்தன் பிறந்திருப்பான் நினைக்கற வாய்ப்பே இல்ல ராணி வாய்ப்பே இல்ல ! நானா என்னை பொண்ணுனு காட்டிக்கிட்டா தான் உண்டு. இல்ல... டேய் தம்பி ! தான்...!"என்றவள் பார்த்து அருகே வந்தவள்,


"ஒன்னு கேட்கட்டா  தேவா ! உன் மனசுக்கு பிடிச்ச ஒருத்தன், நீ பொண்ணு போல முடிய வளர்த்து, நகை போட்டு சேலை கட்டு சொன்னா, என்ன செய்வ?"


"நிச்சயம் செய்ய மாட்டேன்.  ஆனா அதுவே அவனுக்காக மாறனும் எனக்கு தோணுச்சின்னா மாறுவேன். என்னை   மாத்தணும் நினைக்காம அப்படியே ஏத்துக்குறவன் தான் எனக்கு வேணும். அப்படி ஒருத்தன் இல்லன்னா எனக்கு எவனும் வேணாம் திகழு. நான் நானா இருந்துக்கிறேன்"என்று விளக்கம் சொல்ல, அவளுக்கு வெளியே பதில் சொல்லா விட்டாலும் உள்ளுக்குள் வேண்டிக் கொண்டாள். அவளுக்கு ஏற்றப் பையனை கொண்டு வரச் சொல்லி, அவனோ கடையில் புத்தகங்களுடன் உறவாடிக் கொண்டிருந்தான்.


மாலையில் நேரம் வர, வைகுண்டம் அவ்விடம் வந்தார். விஷ்ணு தான் கடைக்கு அட்வான்ஸ் கொடுக்க வர சொல்லி இருந்தான்.


அவரைக் கண்டதும் வரவேற்று எப்போது போல தந்தை மகள் போல உறவாக பேசினார்கள்.


"கழுதைகளா உங்களை இப்படி பார்க்க தான் சந்தோஷமா இருக்கு ! எங்க பெரிய பிரச்சனையில மாட்டி கடைய காலி பண்ற முடிவு வந்திடுவீங்களோ பயந்தேன். போராடி வெற்றியோட வந்த என் மக்கள பார்க்க சந்தோஷமா இருக்கு... ஆனா அந்த தம்பி தலைக்கணம் பிடிச்ச ஆள் இல்லைனு தான் தோணுது"என்றவரை முறைத்த திகழ்


"ஓ... அதுனால தான் போலீஸ் கம்பளைண்ட் கொடுத்து எங்களை அலைய வச்சார்ல ! அவரே கொடுப்பாராம். அப்புறம் அவரே வாபஸ் வாங்குவாராம் அவரு  நல்லவரா ப்பா ! அவனை என் முன்னாடி புகழாத கடுப்பாகிடுவேன் "


"எனக்கு என்னமோ அந்த மனுஷன் கேஸ் கொடுத்ததா தெரியல வேற யாரோ கொடுத்தது போல தெரியிது"எனவும் "வைகுண்டம்"என பல்லை கடிக்க, "சரிடி  கழுத வாயை மூடிக்கிறேன்"என்றதும் இருவரும் சிரித்தனர்.


வைகுண்டத்தின் அலைபேசி அலற, விஷ்ணுவின் எண்ணைக் கண்டதும் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டார் . விஷ்ணு கடைக்கு வந்துவிட, இருவரும் கடைக்குள் நின்று பேசிக் கொண்டிருக்க, சரியாக மதியும், வர்ஷினியும் உள்ளே நுழைந்தனர்.



வர்ஷினியையும் அவளது உடன் வந்தவனையும் மாறி மாறி பார்த்தாள்.


"என்னோட மதி அண்ணா !"என்றாள். இருவரின் சிரிப்பே உடன்பிறந்தவர்கள் என்று எடுத்துக் காட்டியது.


"தெரியுது ! எப்படியோ சாதிச்சி வீட்டுல இருந்து ஆள் கூட்டு வந்தாச்சி !"எனவும் மதியோ"அப்போ முன்னாடியே வந்திருக்கீயா நீ !"


வேகமாக ஆமாமென்று தலையை ஆட்டியவள்"வீட்டுக்கு தெரியாம போடலாம் நினைச்சேன். ஆனா இவங்க பேமிலில இருந்து யாராவது வந்தா தான் போடுவேன் சொல்லிட்டாங்க ! அதான் உன்னை கூட்டிட்டு வந்தேன்"என்று சிரித்தாள்.


"கேடி " என்றான். 


வர்ஷினியின் கள்ள கபடம் இல்லாத சிரிப்பை ரசித்த தேவா "ஆரம்பிக்கலாமா?"என்றாள். அவளும் தலையை ஆட்டினாள்.


இருவரும் டிசைன் பார்த்து  தேர்வு செய்து விட , தேவா அவளது கையிலிருந்த சிறு சிறு முடிகளை அகற்றி, தேர்வு செய்த டிசைனை அதில் ஒட்டி தாளை உரித்தாள். அது நன்றாக ஒட்டிக் கொள்ள, அதன் மேலே வரைய ஆரம்பித்தாள்.


இடையில் மதிக்கு அழைப்பு வர வெளியே சென்று பேசினான். கடைக்குள் நின்றிருந்த விஷ்ணு மதியை கண்டுக் கொண்டான் அதுவும் பச்சை குத்தும் கடைக்கு முன் நிற்பதை கண்டு, புருவத்தை சுருக்கி யோசித்தவன் வைகுண்டத்திடம் பேசி அட்வான்ஸ் கொடுத்து விட்டு தம்பியை தேடி வந்தான். அவனோ கடைக்குள் நுழைந்திருந்தான்.


கடைக்குள் சென்ற தம்பியை கண்டதும் அவனும் விறுவிறுவென கடைக்குள் அனுமதி கேட்காமல் நுழைந்திருக்க, மூவரும் அவனது வருகையில் அதிர்ந்து போனார்கள்.


"இங்க என்ன பண்றீங்க?"என்று அதிகாரமாக இருவரையும் பார்த்து கேட்க அவர்களோ அஞ்சி நடுங்கிப் போனார்கள்.


"அவங்க என்ன பண்ணா உங்களுக்கு என்ன ?! திறந்து இருந்தா உடனே உள்ளே நுழைஞ்சிடனுமா? கேட்டு உள்ளே வர தெரியாதா? உன் கடையில இருக்க புத்தக்கத்துல சொல்லலையா?"என கேட்டு விஷ்ணுவை கடுப்பாகினாள் தேவா !


"ஐயோ ! மேம் இது என் அண்ணன் "என்றாள் பயந்து படி, "அப்போ இது?"


"அவனும் தான்... இவருக்கு தெரியாம தான் வந்தோம் " என்று தலை குனிய, "போச்சுடா"என்றாள். 


"யாரை கேட்டு டாட்டூ போட வந்த, நீ? யாரு உனக்கு தைரியம் குடுத்தா? டாட்டூ போட என்னை கேட்காம வர உனக்கு அவ்வளவு துணிச்சலா

 !"என கையை ஓங்க குறுக்கே வந்து நின்றாள் தேவா !


அவனது கை அந்தரத்தில் நின்றது... இருவரும் பார்வையாலே மோதிய படி  நின்றிருந்தனர் .


Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2