மடல் - 10

 மடல் 10


திகழ் , தேவா இருவரும் பள்ளியிலிருந்து கிளம்பியதும் நேராக காவல் நிலையத்திற்கு தான் வந்து சேர்ந்தனர்.


வண்டியை ஓரமாக நிறுத்தி, விட்டு  காவல் நிலையத்திற்குள் நுழையும் முன்னே அங்கே தனிஷ்ஷின் கார் வந்து நின்றது. அதிலிருந்து அவன் இறங்க, அவனை ஒரு பார்வை மட்டும் பார்த்து விட்டு இருவரும் உள்ளே நுழைந்தனர்.


அவர்களை தொடர்ந்து அவனும் உள்ளே நுழைந்தான்.


அவர்களை எதிர் பட்ட காவல் அதிகாரி மூவரையும் உள்ளே அனுப்பி வைத்தார்.


தனிஷ்ஷைக் கண்டதும் காவல் அதிகாரி எழுந்து நின்றார்.


"வணக்கம் சார் ! அதான் போன்ல சொல்லிட்டீங்களே ! எதுக்கு சார் நேர்ல வந்துட்டு" என்று தானொரு  காவல் அதிகாரி என்று மறந்து விட்டு, தனிஷ்ஷிற்கு கீழ் வேலை செய்யும் ஒரு வேலைக்காரன் போல நடந்துக் கொள்ள, தனிஷ்ஷிற்கு அது பிடிக்கவில்லை முகத்தை சுளித்தான்.


திகழ் அதை கவனிக்காமல் இல்லை. அவளுக்குள் ஒரு ஆச்சர்யம்.


காவல் அதிகாரி பணிந்து பேசினால் கர்வம் கொள்ளும் பணக்காரர்கள் மத்தியில் முகம் சுளிக்கும் இவன் வித்தியாசமாக தெரிந்தாலும், அடுத்த கணம், பெரியவரிடம் காசு கொடுத்து கடையை காலி செய்ய சொன்னது நினைவிற்கு வர, அவன் மேல் கொண்ட ஆச்சரியமும் கோபமா மாறியது.


"சார் ! கொஞ்சம் காவல் அதிகாரி போல நடந்துக்கங்க ! நான் கேஸ் வாபஸ் வாங்கிக்கிறேன். என்ன பார்மலிடீஸ் சொல்லுங்க"என்றான் பட்டென்று.


அதிகாரிக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. அதுவும் அந்த இரண்டு பெண்கள் முன் இப்படி பேசி வேறு விட்டான் அவமானமாகிப் போனது. அவன் மீது  வன்மமும் கோபமும் சேர்ந்தன. அதை தனக்குள் கட்டுப்படுத்திக் கொண்டான்.


"வெளியே கான்ஸ்டபிள் கிட்ட சொல்லி இருக்கேன். கையெழுத்து போட்டா போதும்"என்றதும் அவன் எழுந்துக் கொண்டு வெளியே செல்ல இவர்கள் இருவரும் அவன் பின்னே செல்ல எத்தனிக்க, அந்தக் காவல் அதிகாரி அவன் மீது கொண்ட வன்மத்தை இவர்கள் மீது காட்டி தீர்த்துக் கொண்டான்.


"ம்... போனதும் சரிகட்டி கூட்டிட்டு வந்ததுட்டீங்க ! என்ன சொல்லி சரி கட்டுனீங்க? என்ன கேட்டான் அவன்  பொன்னா? பொருளா? அதெல்லாம் கேட்க வாய்ப்பு  இல்ல... அவன் கிட்ட தான் அதெல்லாம் இருக்கே ! வேற என்ன கேட்டு இருப்பான்?" என யோசிப்பது போல முகத்தை வைத்தவன், முகத்தை மாற்றி  உதட்டை கடித்து விட்டு அவர்கள் இருவரையும் வக்கரமாகப் பார்த்தவன்


"உங்கள்ல யார கேட்டான்? உன்னையா இல்ல இவளையா? இல்ல ரெண்டு பேரைமா? ம், ரெண்டு பேரையும் கேட்டு இருப்பான்... பார்க்க ரெண்டு பேரும்  தளதளன்னு தான் இருக்கீங்க விட்டு வைப்பானா என்ன?"என பெருமூச்சி விட்டவன்,


"எனக்கலாம் பங்கு கிடைக்குமா?" என மேசையில் கையை ஊன்றி அவர்கள் முன்னே முகத்தை கொண்டு வந்து மொத்த வன்மத்தை வார்த்தையில் கொட்டி தீர்த்திருந்தான்.


அவன் கேட்ட வார்த்தையில் உள்ளுக்குள் துடித்து போனவர்களுக்குள்  அவனை செவுலில் ஒன்னு விட தோன்றியது.


காவல் உடையிலும் வேலையிலும் இருப்பதால் அவனை ஒன்னும் சொல்லாமல் வெளியே வந்து விட்டனர்.


அவன் பேசுவது அவனுக்கும் கேட்டது தான். உள்ளே சென்று முகத்தில் குத்த வேண்டும் என்றிருந்தது. ஆனால் இடத்தை உணர்ந்தவன் கோபத்தை அடக்கி உள்ளே வைத்துக் கொண்டு நின்றான்.


வெளியே வந்தவர்களின்  கண்களும் செக்கரை பூசியது போல சிவந்திருந்தது. அதில் கோபமும்  அப்பேச்சை தாள முடியாமல் சூழ்ந்து நின்ற கண்ணீரையும் இவன் குற்றவுணர்வுடன் பார்த்தான்.


வலியுடன் அவர்களது விழிகள்  அவனை ஒரு தரம் குற்றம் சாட்டி விட்டு கடந்தன !


மூவரும் காவல் அதிகாரி காட்டின இடத்தில் கையெழுத்து போட்டனர். அவர்  சாவியை கொடுக்க, வாங்கிக் கொண்டவர்கள் அவனை பாராமல் வெளியே சென்று விட்டனர்.


இவனும் அவர்கள் பின் வேகமாக சென்றவன், வழி மறித்து நின்றான்.


"ஐ யம் ரியலி சாரி !!! நான்..."என ஆரம்பிக்கும் போதே கை நீட்டி தடுத்து விட்டாள் திகழ்.


"இந்த நிதானம் ஏன் சார் முன்னாடியே இல்ல...  அந்த பையனுக்கு நாங்க டாட்டூ போட்டு விடலைன்னு அன்னைக்கே உங்களுக்கு தெரியும் தான? உங்க ஈகோ டச் பண்ணினதுக்காக எங்களை எங்க கொண்டு வந்துட்டீங்க? பணக்காரனுக்கு ஒரு மரியாதை ஒன்னுமில்லாத எங்களுக்கு என்ன மரியாதை பார்த்தீங்கல ! இத விட அவன் கேட்ட கேள்வி..."என வார்த்தைகளுடன் வலியையும் விழுங்கிக் கொண்டாள்.


"திகழ்...!"என தேவா, அவள் தோளை பற்ற, தன்னை நிதானித்து கொண்டவள்" போதும்... இதுக்கு மேலே பேச எதுவும் இல்லை... ரொம்ப நன்றி இறங்கி வந்து வாபஸ் வாங்கினதுக்கு"என்று பெரிய கும்பிடு போட்டு விட்டு  தேவாவுடன் வண்டியில் ஏறி விட்டாள்.


அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும், அன்று நிதானத்தை தொலைத்து கோபத்தில் செய்ய காரியத்தை நினைவுக் கூர்ந்து நெஞ்சு மத்தியில் குத்தி குத்திக் வலியை தந்தன !


விறுவிறுவென உள்ளே சென்றவன்,  காவல் அதிகாரி  முன் நின்றான்.


"சார் !"என எழுந்து நின்றான் அந்தக் காவல் அதிகாரி.


"என் சைட்ல இருந்து யாரு கம்பளைண்ட் கொடுத்தா?"


"உங்க அப்பா சார்?"


"கம்பளைண்ட் மட்டும் கொடுத்தாரா இல்ல...!"என அவனிழுக்க, "பணமும் கொடுத்தார் சார். கம்பளைண்ட் போல எடுத்துக்க சொல்லி ஆக்சன் எடுக்க சொன்னார் சார். கடைய காலி பண்றேன் எழுதி வாங்கி காலி பண்ண சொன்னார்..."


"கொடுத்த பணம் பத்துச்சா?"


"அதிகம் சார். அதிகமாவே குடுத்தார் சார். காலி பண்ண வச்சிட்டா இன்னும் கொடுக்கிறேன் சொன்னார் சார்"என்றான்.


"ஓ...!" என்றவன் வெளியே எட்டிப் பார்த்தவன் மீண்டும் அவனை பார்த்தான்.


தனது கைகளை பரபரவென தேய்த்தவன்,  பளார் பளார் என்று இரண்டு அடிகளை கொடுத்தான்.


கன்னத்தில் கை வைத்தபடி அதிர்ச்சியில் நின்றிருந்தான் அந்தக் காவல் அதிகாரி.


"அதிகமா பணம் வாங்கினேன் சொன்னேல... இதுக்கும் சேர்த்து வச்சுக்கோ "என்றவன் "பங்கு கேட்டல ! தரட்டுமா?" என்றதும் அவனது தலை அனிச்சையாக வேண்டாம் என்று ஆடியது.

"இனி எந்தப் பொண்ணுங்க கிட்டயும் அசிங்கமா பேசக் கூடாது மீறி பேசனும் நினைச்ச இந்த அறை உனக்கு நியாபகத்து வரும்... 


அவனை ஒரு விரல் நீட்டி எச்சரிக்கை செய்து விட்டு,


வேகமாக வெளியெறியவன், இன்னும் கோபம் அடங்காமல் இருக்க,  அலைபேசி எடுத்து எண்ணை அழுத்தி அழைப்பை விடுத்தான். அழைப்பு எடுக்கப் பட்டது. இவன் விஷயத்தை சொல்ல ' பார்த்துக் கொள்வதாக' அந்தப் பக்கம் கூறி வைத்து விட, இவனும் வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.


தனது அறைக்குள் வந்தவன் கதவை அடைத்த விதமே அவன் கோபத்தை பறைசாற்றியது ! "அலெக்ஸ் " என சத்தமாக அழைக்க, வேகமாக கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.


"கொஞ்ச நேரத்துக்கு யாரையும் உள்ள விடாதே? இப்போ யாரையும் பார்க்க முடியாது என்னால ! நான் கூப்பிடும் போது நீங்க வந்தா போதும்"என்றான் கட்டளையாக அவனும் தலையை ஆட்டி விட்டு சென்றான்.


தலையை தேய்த்த படி அமர்ந்தவனுக்கு வைகுண்டம் பேசியது தான் நினைவுக்கு வந்தது.


அலெக்ஸ் அன்று காம்ப்ளக்ஸ் உரிமையாளரின் மொத்த விவரத்தை  தனிஷ்ஷிடம் சொல்ல, அவனும்  வைகுண்டத்தை அழைப்பேசி வழியே அணுகினான்.


அழைப்பு எடுக்கப்பட்டு  வைகுண்டம் பேச ஆரம்பித்தார். "ஹலோ யாரு?" என்றவர் குரலே அவரது வயதை எடுத்து சொல்லியது.


"சார் !!! நான் தனிஷ். தியாகராஜர் வித்யாலயா ஸ்கூலோட   கரஸ்பொண்டர். உங்க காம்ப்ளக்ஸ் இருக்க ஏரியால என் ஸ்கூல் இருக்கு...  உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் !"என்றான்..


"சொல்லுங்க தம்பி !!!"


"உங்க காம்ப்ளக்ஸ்ல இருக்க டாட்டூ கடைய நீங்க காலி பண்ண சொல்லணும். அந்தக் கடையால மாணவர்கள் அதிகம் பாதிக்கப் பட்றாங்க ! ஸ்கூல் பக்கத்துல இருக்கறனால பசங்களுக்கு டாட்டூ போடணும்ன்ற நினைப்பு வருது ! அவங்க காலி பண்ண சொல்லுங்க..."என்றான்.


"அந்தக் கடையால எத்தனை மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருக்காங்க தம்பி?"என்றார்.


அவனால் அவரது கேள்விக்கு பதிக் சொல்ல முடியவில்லை... அப்படி ஒன்று தான் நடக்கவில்லையே "அது.. அது வந்து இப்போதைக்கு இல்ல ! ஆனா...


அந்தக் கடை பெயர் சொல்லி என் ஸ்டூடண்ட் டாட்டூ குத்தி வந்திருக்கான். அதே போல நடக்காது என்ன நிச்சயம்? அதான் காலி பண்ண சொல்றேன்"என்றவனுக்கு புரிந்தது தன் கோபத்தால் வந்த வினை.


"சரி தம்பி  ! அந்த பையன் ஒன்னும் அந்த கடையில பச்சக் குத்திக்கலையே !  வெளியே குத்திட்டு பெயரை மட்டும் தான  யூஸ் பண்ணிருக்கான்... அப்போ தப்பு பொய் சொன்ன அந்தப் பையன் மேலே தான ! அந்த கடை மேலே குற்றம் சாட்றது என்ன நியாயம் தம்பி?!"


"இன்னைக்கி பெயரை யூஸ் பண்றவங்க ! நாளைக்கு அங்க போய் போட்டுக்க மாட்டாங்க என்ன நிச்சயம்?"


"ஆனா என் பொண்ணுங்க மனசு வைக்க மாட்டாளுகளே ! நீ சொல்றதுல நியாயமே இல்ல தம்பி. உங்க ஸ்கூல் பையன் பச்சை குத்திட்டு அதை எம் பொண்ணுங்க தான் போட்டாங்க பொய் சொன்னதுக்கு எல்லாம் நான் எப்படி அவங்களை காலி பண்ண சொல்ல முடியும்?"


"அந்தக் கடை இருக்கிறது, பசங்களுக்கு கவனக் குறைவும் பச்சை குத்தனும்ன்ற ஈர்ப்பும்  வரும் போட்டுக்க ஆசையும் ஆர்வமும் வரும்... படிக்கற பசங்களுக்கு இந்தக் கவனச் சிதறல் தேவையா?"


"இந்த வயசு குழந்தைகளுக்கு ஆசையும் ஆர்வமும் பாக்கற எல்லாத்துக்கு மேலே வரும் தம்பி ! அதுக்காக எதையும் அவங்க கண்ணுல படாம மறைச்சி வைப்பீங்களா? ஐஞ்சு வருஷம் வராத ஈர்ப்பு இப்போ வந்திடுமா? உங்க ஸ்டூடண்ட்ஸ்  எண்ணத்தை நீங்க மாத்துங்க ! பொழப்புக்காக கடை போட்டு இருக்க அவங்களை ஏன் காலி பண்ணனும் ! இதெல்லாம் தப்பு தம்பி !"என்றார்.


"முடிவா என்ன சொல்றீங்க, காலி பண்ண சொல்ல மாட்டீங்க !!! அப்படி தான",


"தம்பி..."என அவர் ஆரம்பிக்க, "எனக்கு அந்தக் கடை அங்க இருக்க கூடாது. எவ்வளவு பணம் வேணும் சொல்லுங்க தர்றேன். அவங்களை காலி பண்ண சொல்லுங்க"பிடிச்ச பிடியிலே இருக்க,


"காசு எல்லாம் வேணாம் தம்பி ! நான் அவங்களை காலி பண்ண சொல்றேன். ஆனா எனக்கு நீங்க அவங்க போல ரெண்டு பொண்ணுங்கள என் கடையில வாடகைக்கு இருக்க அனுப்பனும்... முடியுமா உங்களால?"என்றான்.


அவர் கேட்டதும் திகைத்து விட்டான்", அதெப்படி முடியும்? அவங்க யார் எப்படின்னு எனக்கு  தெரியாது. இதுல அவங்களை போல பொண்ணுங்கள வாடகை வைக்க என்கிட்ட சொல்றீங்க !  இது எப்படி என்னால முடியும்?" என்றான்.


"அவங்களை பத்தி உங்களுக்கு தெரியாது ! அவங்க மேலே எந்தப் தப்பும் இல்ல. அப்புறம் ஏன் இந்த வனமம் தம்பி உங்களுக்கு?


ஊர் விட்டு ஊர் வந்து குடும்பத்தை பிரிஞ்சி, நேர்மையா உழைச்சு சாப்பிட்ற பொண்ணுங்க தம்பி அதுங்க !


அதுங்க வயித்துல வாயில ஏன் அடிக்கணும் ? தப்பான காரியம் பண்ணிட்டு தவறான வழியில சம்பாதிக்கல ! அவங்களுக்கு கிடைச்ச திறமைய பயன் படுத்தி பொழைக்குதுங்க, அதை ஏன் கெடுக்கணும்?


இந்த மனுஷ பிறவி பொண்ணுங்களுக்கு பாதுகாப்பா தான் இருக்கணும்... பயம் காட்டி ஓட வைக்கக் கூடாது. அந்தப் பொண்ணுங்களுக்கு என் கடை ஒரு பாதுகாப்பு என்னால கொடுக்க முடிஞ்சதும் அது தான். உங்களால அவங்களுக்கு ஏதும் செய்ய முடியலைன்னாலும் அவங்க பக்கம் போகாம இருக்கிறது நல்லது ! புரிஞ்சி இருக்கும் நினைக்கிறேன் தம்பி ! நான் வைக்கிறேன்"என்று வைத்து விட்டதும் இல்லாமல் அவனுக்கு நல்லதொரு பாடத்தை கத்து கொடுத்திருந்தார்.


அதுவரை கோபத்தில் மறைந்து போன அறிவுக்கண்ணை திறந்து வைத்தார். முட்டாள் தனமாக, கண்ணை மூடிய கோபத்தால் இரு பெண்களுக்கு இடையூறு தர நினைத்ததை நினைத்து தன்னை தான் எண்ணி வெட்கிப் போனான்.

இதற்கு மேல் தனக்குள் இருக்கும் வன்மத்தை  கோபத்தையும்  வளர விடக் கூடாது என்று தன் ஆழ் மனதில் புதைக்க முயன்று அதில் வெற்றியும் கண்டு அந்த விஷயத்தை மறந்து போக,


அதை கிளறி விடவே  மனிதர்களும் சூழ்நிலைகளும் இருக்கத் தான் செய்கின்றன.


***


வீட்டிற்கு கோபமாக வந்த தனிஷ் , சோபாவில அமர்ந்து அலைபேசி பார்த்துக் கொண்டிருந்த தந்தையிடம்


"என் பதவிய வச்சி உங்களை யார் கம்பிளைண்ட் கொடுக்க சொன்னது? தைய தக்கா குதிச்ச நானே அடிங்கி போயிருக்கேன். உங்களுக்கு என்னப்பா வந்தது? என்னை கேட்காம எதுக்கு பா ! அவங்க மேலே கம்பளைண்டு கொடுத்தீங்க? " என கத்தியவனை மெட்டாகச் சிரித்த படி 


பார்த்திருந்தார் பிரபாகரன்.

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2