மடல் - 8

 வழக்கம் போலவே  விடியலை எதிர்கொண்டு, ஆற்ற வேண்டிய கடமைகளை முடித்து விட்டு, மறு வீட்டிற்கு (கடைக்கு ) வந்த சேர்ந்தனர் தேவாவும் திகழும்.


கடைக்குள் நுழைந்த தேவா ! முருகனை ஏக்கமாகப் பார்த்து விட்டு  சென்றாள். அவள் முருகனை ஏக்கமாகப் பார்த்து  விட்டு செல்வதை திகழும் கவனிக்க தான் செய்தாள்.


இன்னும் மூன்று நாட்களுக்கு முருகனுக்கு எந்தப் பூஜையும் இருக்க போவதில்லை. 


சுவரில் மாட்டிருக்கும்  புகைப்படங்களை போல அவரும் காய்ந்த பூவுடன் வாடி கிடக்க வேண்டியது தான்.


முருகனுக்கு பூ வாங்கி போடுவதும் பூஜை செய்வதும் தேவா மட்டும் தான். திகழ் செய்வே மாட்டாள். அந்த மூன்று நாட்களில் தேவா அவளை செய்ய சொல்வாள்,


"மக்கூம்...  போடி "என்று போய் விடுவாள். தன் அன்னை இறந்த பின் குறைந்து போன கடவுள் பக்தி, சிற்றன்னையின் கொடுமையில் கொஞ்சம் குறைய, தந்தை இறந்த பின் கடவுள் மேல் பற்று இல்லாமல் போனது திகழுக்கு.


அவள் கடவுளை தரிசிக்க மாட்டாள். கோவிலுக்கும் செல்ல மாட்டாள், தேவா வீம்பாக  அழைத்துச் சென்றாலும், பொங்கல் புளியோதரையுடன் முடித்துக் கொள்வாள். மேற்படி வேண்டுதலும் வைக்க மாட்டாள்... அவளை அவள் போக்கில் விட்டு விட்டாள் தேவா.




உள்ளே நுழைந்த தேவாவிற்குப் புதிதாக கடைக்குள் மணிச் சத்தம்  கேட்டதும் வேகமாக வெளியே வந்து பார்த்தாள்.


குமஞ்சனம் போட்டு  மணியடித்து சூடங்காட்டி முருகனுக்கு பூஜை செய்தாள் திகழ். தேவாவிற்கு விழிகள் வெளியே வந்து தெரித்து விழுமளவிற்கு அதிர்ச்சி. 


'திகழ் இவ்வாறு செய்ததில்லை...  திடீரென அவள் கடவுளை வணங்க அவசியம் என்ன?' என உள்ளுக்குள் கேட்டுக் கொண்ட தேவா ! வாயைப் பிளந்து கொண்டு நின்றாள்.



வெளியே இருந்து கதிரும், அவனது மனைவியும் மஞ்சுளாவும் கூட வாயைப் பிளந்த படி பார்த்து நின்றிருந்தனர்.


கையில் சூடத்தட்டுடன் திரும்பியவள் தன்னை ஈயின் மொத்த குடும்பம் உள்ளே செல்லும் அளவிற்கு வாயை பிளந்து பார்க்கும் மூவரையும் கண்டு பெருமூச்சு விட்டவள், கதிரிடம் வந்து  சூடத்தட்டை காட்ட, அவனும் தொட்டு வணங்கி அதிலிருந்த விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டான்.


மஞ்சுளாவும் தான். தேவாவை கடந்தவள், அவள் நெற்றியில் பூசி விட்டு முருகன் பாதத்தில் வைத்தாள்.


விபூதியை அவளும் பூசிக் கொண்டு, கண்கள் மூடி வணங்கி விட்டு திரும்பினாள்.


மூவரும் அதிர்ச்சியிலிருந்து வெளி வரவில்லை.


"ப்ச்..."சலிப்புடன் அவர்களை பார்த்தவள் "இப்போ என்ன உலக அதிசயமா சாமி கும்பிட்டேன். அதுக்கு என்ன இப்போ? வாய பொழந்துட்டு பாக்கற விஷயம் இல்ல இது ! ச்சீ நார்மலா இருங்க !"என்றாள் மூவரிடம்.


"எப்படி இதெல்லாம் பாத்திட்டு நார்மலா இருக்க சொல்ற ? நீ செஞ்சது உலக அதிசயம் இல்ல உலக அதிர்ச்சி! என்ன திடீர்னு சாமியெல்லாம் கும்புட்ற? எதுக்காம்?"

என்றாள் தேவா !.


"ஏன் சாமி கும்பிட கூடாதா?"


"நாங்க சொல்லும் போது செய்யாம, நீயா திடீர்னு செய்யும் போது ! எங்களுக்கு பேரதிர்ச்சி இல்லையா திகழு ! சின்ன இதயத்துக்கு இத்தனை பேரதிர்ச்சி தேவை தானா சொல்லு? எதுக்கு  இந்த திடீர் பக்தை வேஷம்?"என கதிரும் நெஞ்சை பிடிக்காத குறையாக கேட்க,


"என்ன கல்யாண ஆசை எதுவும் வந்திடுச்சா? முருகனை புரோக்கர் ஆக்கப் போறீயா?" மஞ்சுளா தன் மூளைக்குள் எழும்பிய கேள்வியை கேட்க, மூவரையும் வேற்று கிரக வாசியை போல பார்த்தாள் திகழ்.



"மஞ்சு !!! அதுங்க பேச்சு கூட ஓரளவு ஏத்துக்கலாம்... ஆனா நீ சொன்னதை தான் ஏத்துக்க முடியலடி . எனக்கு கல்யாண ஆசை வேற வருது போடி... "என சலித்து கொண்டவள், 



தன் பதிலை எதிர்பார்த்து நிற்பவர்களிடம் மேலும் தொடர்ந்தாள் "அதெல்லாம் எதுவும் இல்ல... தினமும் இதெல்லாம் இவ செய்யும் போது,  உள்ளுக்குள் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். மனசு அமைதியா இருக்கும். 


ஆனா இன்னைக்கி இல்ல... ஏற்கெனவே தெளிவில்லாத மனசு இருள்ல அடைஞ்சது போல இருக்கு, அதான் இதெல்லாம் நானே செஞ்சேன். கடவுள்ல நினைக்கல ஒரு நம்பிக்கையா நினைச்சி கும்பிட்டேன் போதுமா?"என விளக்கம் கொடுத்தாள். 


அவள் தோளை அழுதிய தேவா "எது நடந்தாலும் பார்த்துக்கலாம் திகழு... முன்ன சொன்னது நாம தெளிவா இருந்தால் என்ன நடந்தாலும் அதுல இருந்து போராடி வெளிய வர முடியும்... எதையும் போட்டு குழப்பிக்காத ! வா வேலைய பாக்கலாம்"என்றாள்.


அவளும் தலையை அசைத்து அமோதிக்க,  " திகழு ! எவ்வளவு போராட்டத்தை பாத்த நீ கலங்கலாமா? பணங்காரன் சொல்றத நாம செய்யணும் என்ன அவசியம் இருக்கு ? அவ தயவுல நம்ம பொழப்பு ஓடல ! நாங்க இருக்கோம் என்ன பண்றான் தான் பாப்போம்... உன் முகம் தெளிவில்லாம இருக்கு என் கடை காப்பிய குடி எல்லாம் சரியா போயிடும்..."என்ற கதிரை மூவரும் முறைக்க,


"என்ன சொல்லிட்டேன் மூனு பேரும் பாசமா பாக்கிறீங்க?"


"இதான் சாக்கு உன் காப்பிய எங்க தலையில கட்டிறீயே கதிரே! உன் வியாபார தந்தரத்த எங்க கிட்டயே காட்ற பாத்தீயா?"என்ற தேவாவை கண்டு வழிந்தான் கதிரேசன்.


"ஏன்யா மானத்த வாங்குற?"என தலையில் அடித்துக் கொண்டாள் மஞ்சுளா !


"விடு மஞ்சு !!! கதிரண்ணா காப்பிக்கு உண்மையிலே அப்படி ஒரு சக்தி இருக்கு ! நீ கொண்டு வாண்ணா !"என்ற திகழை பாசத்துடன் பார்த்தவன், மற்றவர்களிடம் காலரை தூக்கிவிட்டு காப்பி கொண்டு வர சென்றான். உடன் மஞ்சுவும் தலையில் அடித்துக் கொண்டு சென்றாள்.


ஆவி பறக்க, மூக்கை துளைக்க வாசனையுடன் காப்பியை கொடுத்து விட்டு போனான். இருவரும் ரசித்து பருகியவர்களுக்கு இனம் புரியாத புத்துணர்ச்சி மனதில் தோன்ற, முகத்தில் மூரலுடன் வேலையை தொடர்ந்தனர்.


காலை நேரமாக ஆண் கஸ்டமர் கடைக்குள் நுழைந்தான்.


வந்தவனை எதிர்கொண்டது திகழ் தான்"என்ன வேணும் சார்?"என்றாள்.


"கவர் அப் பண்ணனும் "என்று கையில் பெரிய பெரிய எழுத்துக்களாக தன் காதலியின் பெயரை பச்சை குத்தி இருந்ததை காட்டி, "இங்க கவர் அப் பண்ணனும் முடியுமா?"என்றான்.


"ம்... பண்ணிடலாம் டிசைன்ஸ் பாருங்க!"என காட்ட , அவனும் மறுத்துக் கொண்டே வந்தவன், அங்கிருந்த முருகன் படத்தை பார்த்து விட்டு, "எனக்கு இந்த முருகன கையில வரைங்க !"என்றான்.


திகழ் அவனை கேள்வியாக பார்க்க"நான் முருகன் பக்தங்க ! அவர் தான் என்னை அந்த பொண்ண கிட்ட இருந்து காப்பாத்தினார். அவர் படத்தையே வரைஞ்சுடுங்க !"என்றான்.


உடனே அவளும்"முருகன் தான் காப்பாத்தினார் சொல்றீங்க! பின்ன ஏன் உங்களை அந்தப் பொண்ணு கிட்ட மாட்ட வச்சார்? கண்ணுல காட்டாம உங்களை முன்னாடியே காப்பாத்திருக்கலாம்ல !"என்றதும் அவனால் பதில் சொல்ல முடியவில்லை ஆனால் மழுப்ப நினைத்தான்"என்னவோ என் நேரம்... அதுக்காக முருகனை தப்பா பேசாதீங்க ! வேல வச்சி கண்ணுல குத்திட போராருங்க !"என்றான்.


"என்னையவா ? சரி தான்"என்று சலித்து கொண்டு அவன் கையில் இருந்த அவள் காதலியின் பெயரை மறைத்து அழகான முருகனை ஓவியமாக பச்சை குத்தி முடித்தாள்.



குறுக்கை பிடித்துக் கொண்டு அவள் எழ, கையில் முருகனை தத்துரூபமாக வரைந்ததை பார்த்து ஆச்சர்யம் கொண்டு அவரை வணங்கி விட்டு பணம் கொடுத்தவன், " சூப்பருங்க உங்க கையில உங்க திறமை விளையாடுது ! எல்லாம் என் அப்பன் முருகன் கொடுத்த கலை தான். அவரை தப்பா பேசாதீங்க  ! நான் வர்றேன்!"என அவன் சென்று விட, தலையை இரு புறமும் அசைத்து விட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றாள்.


அரை மணி நேரம் கழித்து இரு பெண் காவல் அதிகாரிகள் கடைக்குள் நுழைந்தனர். அதில் ஒரு காவலதிகாரி அவர்களுக்கு தெரிந்தவர்கள் என்பதால், வந்தவர்களை பெரிதாக எடுத்துக்க கொள்ளவில்லை திகழும் , தேவாவும்,


"வா சுந்தரிக்கா எப்படி இருக்க? என்ன புதுசா இந்தப் பக்கம்?"என வரவேற்று அவர்கள் இருவருக்கும் அமர நாற்காலியை நகர்த்தி வைத்தாள்.


சுந்தரிக்கு அவர்களை பாத்துப் பேச சங்கட்டமாக இருந்தது. பக்கத்திலிருந்த இன்னொரு பெண் காவல் அதிகாரியை பார்த்தாள்.


"என்னக்கா உன் முகமே சரியில்ல !? மறுபடியும் பாப்பாக்கு உடம்பு முடியாம போச்சா? "என திகழின் சிறு பதட்டத்தை கண்டவருக்கு மேலும் சங்கட்டம் கூட பக்கத்திலிருந்த பெண் அதிகாரி தான் சொன்னார்.


"உங்க கடை மேலே கம்பளைண்ட் வந்திருக்கு மா ! ஸ்கூல் பக்கத்துல பச்சை குத்துற கடை இருக்குறதால படிக்கற பசங்க பச்சை குத்திக்கிறாங்க ! பதினெட்டு வயசு நிறைவு செய்யாத பசங்களுக்கு நீங்க பச்சை குத்தி விட்றதா புகார் வந்திருக்கு ! இன்ஸ்பெக்டர் எங்களை அனுப்பி கடையை பூட்டி சாவி வாங்கிட்டு வர சொல்லி இருக்கார் அதுக்கு தாங்க வந்திருக்கோம்..."என்று அனைத்தையும் கூறி முடிக்க, இருவரும் சிலை போல அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.


"எனக்கு என்ன சொல்றதுனு தெரியல பாப்பா ! புதுசா வந்த இன்ஸ்பெக்டர்ட்ட உங்களை பத்தி சொன்னேன். ஆனா அவர் கேட்கல ! கம்பளைண்ட்ட வந்திருக்கு ஆக்சன் எடுக்கலன்ன பிரச்சனை ஆகிடும் சொல்லிட்டார். நீங்க வந்து ஸ்டேஷன்ல பேசுங்க !!! இப்போ நாங்க கடையை அடச்சிட்டு  சாவி கொண்டு போகணும் பாப்பா !"என்றார் தயங்கி.


திகழ் குற்றவுணர்வுடன் தேவாவை பார்க்க, தேவாவோ தன் உலகமே இருண்டு போனது போல இருந்தது.


இருவரும் வேறு வழியின்றி வெளியே வந்து நின்றனர். பெண் காவலதிகாரி கடையை பூட்டி சாவி எடுத்துக் கொண்டாள்.


"உங்க மேலே எந்த தப்பு இல்ல ! சீக்கிரமா இந்தக் கடைய திறப்பீங்க. பாப்பா ! ஸ்டேஷன்  வந்துடுங்க !"அவர்கள் இருவரும் சென்று விட, திகழும் தேவாவும் செய்வதறியாது தவித்தனர் .


"எல்லாம் அந்த பணக்கார நாயி தான்

கம்பளைண்ட் குடுத்து இருக்கணும்... அவன ஒரு வழி பண்ணாம விடக் கூடாது தேவா "என எகிறியவனை தடுத்த தேவா " என் கடைய மூடினது போல உன் கடையையும் மூடனும்மா? அமைதியா இரு கதிரே! இதை நான் பாத்துக்கிறேன்"என்றாள்.


"இரு ! நானும் போலீஸ் ஸ்டேஷன் வர்றேன்"என்று அவனும் கிளம்ப, வேண்டாம் என்று மறுத்த  தேவா "வேணாம் கதிரே ! நீ கடைய பாரு ! இந்த விஷயத்தை நாங்க பாத்துக்கிறோம்"என்று அவனை மறுத்து விட்டு இருவரும் காவல் நிலையத்திற்குச் சென்று விட்டனர்.



***


அடுத்த அத்தியாத்திலிருந்து சில வரிகள்


"வாட்?! நான் கம்பளைண்ட்ட குடுத்தேனா? வாட் ரப்பிஸ் ! நான் கடைய காலி பண்ண சொல்லி மிரட்டனது உண்மை தான். வாடகைக்கு இருக்கற உங்களை காலி பண்ண சொல்லி பணம் குடுக்கறதா சொன்னதும் உண்மை தான். 


ஆனா அந்த பெரிய மனுஷன் கிட்ட பேசினதுல இருந்து உங்க கடைய பத்தி யோசிக்கிறதே நான் மறந்துட்டேன்... இதுல நான் ஏன் மெனகெட்டு போலீஸ் கம்பளைண்ட் குடுக்கணும்? நான் குடுக்கல !


உங்களுக்கு தப்பா யாரும் தகவல் குடுத்திருக்கலாம்... மே பீ உங்களால் பாதிக்கப் பட்டவங்க கூட உங்க கடை மேல புகா

ர் குடுத்திருக்கலாம்... ஆனா நான் குடுக்கல !"என தீர்க்கமாக சொல்லி விட, இருவரும் குழப்பமாக ஒருவரை ஒருவர் பாத்தனர்.


Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2