மடல் - 6

 மடல் - 6


மதியின் குறுகுறு பார்வைக்கு வர்ஷாவின் திருட்டு பார்வை தான் காரணம்.


தன்னை கல்லூரியில் இறக்கி விட்டு வேலைக்கு  செல்ல இருந்த அண்ணனை தடுத்து ' உதவி 'என்று கேட்டுவிட, அவள் மீது சந்தேகப் பார்வை வீச, காரணகர்த்தாவாக நிற்கிறாள் வர்ஷா !


"இன்னைக்கி அண்ணன் கிட்ட வேலைக்கு ஆள் வைக்கலாமானு? கேட்ட தானே! அது போல இதையும் கேக்க வேண்டியது தான? என் கிட்ட ஏன் கேக்குற?"


"வேலைக்கு ஆள் வைக்கலாமானு கேட்டதெல்லாம் அவர் மூடை டெஸ்ட் பண்ண தான். விளையாட்டுக்கு கேட்டதுக்கே என் தமிழ் வாத்தியார் மாதிரி  பெருசா  குடுத்தாரே  ஒரு விளக்கம்.


இந்த உதவியும் கேட்டா, அண்ணனின்  அறிவுரைகள்னு ஒரு புத்தகம் போட்டு அவர் கடையில சேல்ஸ்க்கு வைச்சு விக்கலாம் போல ! வர வர புக்ஸ் கூட இருந்து அவரும் புக்ஸ் புத்தனா மாறிட்டார் அண்ணா ! கொஞ்ச நாள்ல நம்மலையும் மாத்திடுவாருணா கொஞ்சம் அண்ணன் கிட்ட இருந்து கேர் ஃபுல் இரு என்ன !"என அறிவுரை என்ற பெயரில் விஷ்ணுவை கேலி செய்தாள்.


அவளது கேலியை கைகளை கட்டிக் கொண்டு  இதழை  மடக்கி சிரித்தப்படி நின்றிருந்தவன், அவளது கடைசியில் கேலியில் அவளது காதை பிடித்து செல்லமாக திருகினான்.


"வாய் வாய் வாய்... எவ்வளவு வாய் பேசற நீ என்ட்ட மட்டும். இதுவே அண்ணன் முன்ன நின்னா மட்டும் பம்புவ, அவர்ட்ட மட்டும் அமைதியான பொண்ணு மாதிரி காட்டிகிறது, சரியான கேடி டி நீ !"என்றான் காதை மேலும் திருகியபடி.


"ஆஆஆ..."என அலறியபடி துள்ளினாள். அவர்களை கடந்து செல்லும் மாணவர்கள் அவர்கள் இருவரையும் பார்த்தபடி செல்வதை கண்டு அவள் காதை விட்டான்.


"சொல்லுடி ! என்ன ஆசை அது?"


"அது அண்ணா ! நான் கையில டாட்டூ குத்திக்கவா ! ரொம்ப ஆசையாஆ இருக்கு மதி ! ப்ளீஸ் டா அண்ணா " என கெஞ்சி நிற்க, அதிர்ந்து போனான் அவன்.


"எதே டாட்டூ குத்தனுமா? என்ன விளையாட்றீயா நீ? அண்ணனுக்கு இதெல்லாம் பிடிக்காது தெரியும்ல ! "


"அண்ணனுக்கு தான பிடிக்காது ! எனக்கு பிடிக்கும் அண்ணா ! ப்ளீஸ் 

சின்ன தா 'வரு'னு போட்டுக்கிறேனே ப்ளீஸ்...ப்ளீஸ்... ப்ளீஸ்..."



"போடிங்கு... ஆசையாம் ஆசை...! அன்னிக்கி கையில பேனால வரைஞ்சதுக்கு கேட்டீயே பத்து பக்கத்துக்கு வாங்கினியே பேச்சும் திட்டும்... திருந்தலையா நீ??? இதெல்லாம் அண்ணனுக்கு பிடிக்காது. உன் ஆசைக்கு துணை போய், என்னால அண்ணாட்ட வாங்கி கட்டிக்க முடியாது. போய் படிக்கிற வழிய பாரு !"என அவள் ஆசைக்கு மறுப்பு சொல்லி விட்டு வண்டியில் ஏறி அமர்ந்தவன், தங்கையின் முகம் பார்க்க, மறுப்பு தெரிவித்ததால் முகம் சுருங்கிப் போனது, அதை கண்டு மனம் கேட்கவில்லை. அங்கிருந்து வீம்பாக கிளம்பவும் முடியவில்லை... 


" பாத்தா திட்டு வார்டி...!"


"திட்டு வாங்கிறேன்... ஆனா உன்னை மாட்டி விட மாட்டேன் பிராமிஸ் !"என்று கழுத்தில் கை வைத்தாள்.


"வலிக்கும்டி"


"சின்ன தா !' V ' ஆவது போட்றேன் அண்ணா. பெரிசா போட மாட்டேன் ப்ளீஸ்ணா !" அவனிடம் கெஞ்சி அவனை கரைத்தாள்.


அவள் கெஞ்சலில் மனம் இறங்கி வந்தவன், "சரி ! நான் லேடி டாட்டூ ஆர்டிஸ்ட் எங்க இருக்காங்க விசாரிக்கிறேன்..."என்றான்.


"எனக்கு அட்ரஸ் தெரியும் அண்ணா ! அங்கப் போகலாம்..."என்றாள் வேகமாக, அவளை முறைக்க முயன்று முடியாமல் போக சிரித்து விட்டான்.


"என் செல்ல அண்ணா ! நீ தான் என்னோட கம்ஃபோர்ட் ஜோன்"என்க, 


"ஏன் சொல்ல மாட்ட நீ, உன்னை சின்ன பிள்ளைனு ஒதுக்கி வச்சிட்டு , உனக்கும் சேர்த்து என்னைல  கிழிப்பாரு  !"


"எனக்கா இதக்கூட  வாங்கிக்க மாட்டியா?"என தாடையை பிடித்து கொஞ்ச , தட்டிவிட்டவன்  வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றான்.. அவளும் குதூகலத்துடன்  கல்லூரிக்குள் நுழைந்தாள்.


***


வழக்கம் போல கந்தனை வணங்கி விட்டு வேலையைத் தொடர்ந்தனர் தேவா , திகழ் இருவரும்.


அதே நேரம் அந்த காம்ப்ளக்ஸின் உரிமையாளர் வைகுண்டமும் அவர்கள் இருவரையும் பார்க்க  வந்திருந்தார்.


உலக நடப்பு அத்தனையும் தெரிந்து வைத்துக் கொண்டாலும் எதுவும் தெரியாத வெள்ளந்தி மனிதனைப் போல தோற்றம் கொண்டிருப்பார். 


பணம் நிறைய இருந்தும் பகட்டில்லாத மனிதர். மனைவியின் பேரன்பில் காலங்களை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.  


பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு சொத்தை பிரித்துக் கொடுத்து விட்டார். இந்த காம்ப்ளக்ஸை மட்டும் தமக்கென வைத்துக் கொண்டு அதில் வரும் வாடகையை  தங்கள் செலவுக்கு போக மீதம் இல்லாத இயலாதவர்களுக்கு உணவு, உடையென உதவி செய்வார். தங்கமான மனசு கொண்ட  மனிதர்.  


வைகுண்டமும் ராஜாத்தியும் காம்ப்ளக்ஸில் கடை வைத்திருக்கும் அனைவருக்கும் தாய் தந்தை போல தான். அவர்கள் இருவரையும் ' அம்மா அப்பா 'என்று தான் அழைப்பார்கள். அவர்களும் அனைவரையும் பிள்ளைகளாக தான் பார்க்கின்றனர். இருவருமே இரக்க குணம் கொண்டவர்கள்.



"தேவா !!! திகழு...!!"என அழைத்த படியே வெளியே வந்து நின்றார். சட்டென உள்ளே நுழைந்திடும் கடை அது இல்லை என்று அவருக்கு தெரியும்.


பெண்களும் ஆண்களும் கண்ட கண்ட இடங்களில் இப்போதெல்லாம் பச்சை குத்திக் கொள்வது அவருக்கு தெரியும். 


அதனாலே கடைக்குள் நுழையும் முன் சற்று நிதானித்து தான் உள்ளே செல்வார். முதலில் கடையில்  வெறும் கண்ணாடி தடுப்பு மட்டும் தான் இருந்தது. 


கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி உள்ளே பெரிய பெரிய திரைகளிட்டு அதற்குள் பச்சை குத்துவதை  வைத்துக் கொண்டனர். 


கடை கொஞ்சம் பெரியதாக தான் இருந்தது. முன்பு இவர்களுக்கு அதிக படியாக இருந்தது. காலி செய்கிறோம் என பல முறை வறுமையின் காரணமாக  அவரிடம் சொல்லி இருக்கிறார்கள் தேவாவும்  திகழும்.


அப்போதெல்லாம் அவர்களிடம் வாடகையை வாங்காமல்  தாய் தந்தையாக அந்த இரு பெண்களை அரவணைத்து  முன்னேற உதவியது இவர்கள் தான். கடையைப் பற்றி புறம் பேச்சோ முகசுளிப்போ எதுவும் அவர்களிடம் இருக்காது.


மகள்கள் போல இருவரையும் உற்சாகம் செய்ய பச்சை குத்துவதை ஆர்வத்தோடு சிறு குழந்தைகளிடம் கதை கேட்பது போல கேட்பார்கள் அந்த பெரியவர்கள். சிறு குழந்தைகளை போல அவர்கள் இருவரிடமும் ஆர்வமாக  பகிர்ந்து கொள்வார்கள். 


மூத்தவர்களாக இருந்தாலும் இந்தக் காலத்துடன் இசைந்து  தான் வாழ்கிறார்கள். அவர்கள் கால நினைவுகளோடு.


வைகுண்டத்தின் குரலை கேட்டதும் வேலையை போட்டு விட்டு உள்ளிருந்து இருவரும் வந்தனர்.



" ப்பா ! "என அவர்களது அழைப்பிற்காகவே அவர்கள் கடைக்கு தினமும் வர வேண்டும் என்று அவருக்கு தோன்றும்.


உடல் ஒத்துழைக்க மறுப்பதால் மாதம் இரண்டு முறை கடைக்கு வருவார். ஆனால் இவர்கள் இருவரும் வாரத்துக்கு ஒரு முறை வீட்டிற்கு சென்று நலம் விசாரித்து நேரம் கடத்தி சாப்பிட்டு விட்டு  தான் வருவார்கள்.


"என்னப்பா திடீர்னு வந்திருக்க?  நீ போன்  பண்ணினா வீட்டுக்கே வந்திருப்பேன்ல ! எதுக்கு உடம்ப வருத்திட்டு வர !" என தேவா செல்லமாக கடித்தாலும் கைகள் என்னவோ அவருக்கான சேவையை செய்தது.


உள்ளே சென்ற திகழ் தண்ணீர் பொத்தலுடன் வந்தவள் அவரிடம் கொடுத்து விட்டு, காலடியில் தேவாவுடன் அமர்ந்து விட்டாள்


"ஏ கழுதைகளா? மேல எழுந்து உட்காருங்க..."


"ப்ச்... எங்களுக்கு இங்க ஒட்கார  தான் பிடிக்கும் நீ சொல்லு "என்றாள் திகழ்.


"ம்..." என இருவரையும் குறுகுறுவென பார்த்தவர், "இந்த முறை பிரச்சனைக்கு யார் காரணம்? தேவாவா? திகழா? "


"பிரச்சினையா? எங்களுக்குள்ள வா? அது எப்போ வந்தது ப்பா ? நாங்க எதுக்கு சண்டை போட போறோம்?"என திகழைப் பார்த்து நுதல் சுருங்க  கேட்டாள் தேவா.


"கழுத ! உங்களுக்குள்ள பிரச்சனை நான் எப்போ சொன்னேன்?.  நீங்க எப்பவும் வெளியாட்கள் கிட்ட தான பிரச்சனைய வண்டி வண்டியா வாங்குவீங்க !  அதான் இந்த முறை நீயா? இல்ல திகழா? யார் வாங்கினது கேட்டேன்?"என்றார்.


இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தோளை குலுக்கி கொண்டவர்கள் வைகுண்டத்திடம் திரும்பி"  என்ன பிரச்சனை சொல்லு ! அது யாரால சொல்றோம்... "என ஒரு சேர சொல்ல, 


இருவரும் சேர்ந்து சொல்வதை கேட்டு சிரித்தவர், "பக்கத்துல இருக்க பள்ளி, தாளாளர் கிட்ட பிரச்சனை பண்ணது யாரு?" என அவரே கம்பு இல்லாத ஆசிரியர் போல கேட்டார்.


"தாளாளரா? இவ டீச்சர்னு தான என்ட்ட சொன்னா? என்னடி பெரிய இடத்தில பிரச்சனை பண்ணிருக்க? "தேவா அவளை விசாரிக்க, 



"என்னடி பெரிய இடம் சிறிய இடம் சொல்லிட்டு இருக்க? நமக்கு எல்லாம் ஒரே இடம் தான ! அன்னிக்கி வந்தவன் டீச்சரை தான் டி...  அந்த ஸ்கூல் தாளாளர்ட்ட நான் ஏன் பிரச்சனை பண்ண போறேன்?"என சலித்து கொண்டாள்.



"அவர் டீச்சர் இல்லடி கழுத ! அவர் தான் ஸ்கூல் தாளாளரராம் . நான் அந்த ஸ்கூல் வாட்ச் மேன் கிட்ட விசாரிச்சிட்டு தான் வர்றேன்"என்றதும் திகழின் பார்வை மாறியது.


"சரி யார்ரா இருந்தா என்ன?அவன் பேசின விதம் தப்பு ! எங்க மேலே தப்பு இல்லனு தெரிஞ்சும் கடையை காலி பண்ண சொல்றது எப்படி சரியா இருக்கும்?  ஸ்கூல் பக்கம் எந்தக் கடையும் இருக்க கூடாதுன்னா அந்தாள காட்டுல கட்ட சொல்லுங்க... அங்க தான் யாரும் கடை போட மாட்டாங்க...!"என்றாள் சலித்து கொண்டு.


"சரி ! இங்க நடந்த பிரச்சனை உனக்கு எப்படி தெரியும் பா !" என்று தேவா வினவ, 


"அந்த தாளாளர் எனக்கு போன் பண்ணி, எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றேன், அந்தக் கடைய காலி பண்ண சொல்லுங்கன்னு சொன்னான்..."என்றதும் இருவரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டனர்.


"அதுக்கு நீ என்ன சொன்னப்பா?"


"நான் என்ன சொல்லி இருப்பேன்?"என இருவருக்கும் புதிர் போட, அவர்களோ நகைச்சுவை கேட்டது போல வாய் விட்டு சிரித்தனர்.



"நீ என்ன சொல்லி இருப்ப எனக்கு தெரியாதா? நீயும் உன் காசும் என் பொண்ணுங்க  அங்க தான் கடை போட்டிருப்பாங்க நீ என்ன வேணா பண்ணிக்கன்னு சொல்லிருப்ப. உன்னை பத்தி எனக்கு தெரியாதா?" என்றதும் இப்போது இவர் வாய் விட்டு சிரித்தார்.


இருவருக்கும் அவரது சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை" நீ எதுக்குப்பா சிரிக்கிற? "திகழ் கேட்க,


"பின்ன ! இந்த கழுத பேசறது நகைச்சுவையால இருக்கு !"என மீண்டும் சிரிக்க, இருவரும் அமைதியாக அவரை வெறித்தனர்.


"அப்போ நீ காச வாங்கிட்டு எங்களை துரத்தி விடப் போறீயா? "அப்பாவியாக கேட்டாள் தேவா,


"பின்ன காசு வருதுல கழுத ! என் பொண்டாட்டிக்கு வைர நெக்லஸ் வாங்கி குடுக்கலாம் நினைக்கிறேன்"என்றதும் இருவருக்கும் உலகமே நின்றது போல இருந்தது.


"என்னப்பா சொல்ற? கடைய காலி பண்ண சொல்ல போறீயா?"இருவர் முகத்திலும் கலவரம் தெரிந்தது.


அவர் சொன்னதை இருவராலும் ஜீரணிக்க முடியவில்லை... அரண்டு போனது போல அமர்ந்திருந்தனர்.

கண்களோ கண்ணீரை கொட்ட காத்திருந்தது. அவர்கள் இருவரையும் பார்க்க, 


ஐந்து வருடத்திற்கு முன் யாருமில்லாதவர்கள், பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு வாசலில் வந்து நின்றது இன்றும் நிழலாடியது.



அவர்கள் ஒருவர் தலையை அழுத்தி வைகுண்டம்

"அட கழுத! அப்பாவுக்கு உங்கள விட பணம் காசு முக்கியம் போயிடுவேனாக்கும் !"என்றதும் இருவரும் அவரதும் புஜத்தில் தஞ்சம் கொண்டனர்.


"கழுதைகளா ! எதுக்கு  அழறீங்க? அப்பா, உங்களை யாருக்கும் விட்டுக் கொடுத்திடுவேனா?"என்றார்.


"அப்போ என்ன தான் அவர் கிட்ட சொன்ன?"


"என் பொண்ணுங்க கடைய காலி பண்ண சொல்ல நீ யார்? காசு இருந்தா, உன் பேச்சை நான் கேட்கணுமா? அது என் கடை யாரு இருக்கணும் இருக்கக் கூடாது நான் தான் முடிவு பண்ணுவேன்... நீ இல்ல வை போன சொல்லி வச்சிட்டேன் "என்றவரை நன்றியாகப் பார்த்த இருவரும் அவரது மீசை ஆளுக்கொரு பக்கத்தில் இழுத்து தோளில் சாய்ந்து கொண்டனர். 



"ஏன்ப்பா காசு வாங்கல ? உனக்கு தேவை பட்டு இருக்கும்ல !"


"என் தேவை என்ன? நிம்மதி, பொண்டாட்டியோட காதல், உங்க அன்பு... இதெல்லாம் அந்த பணத்துல வாங்கிட முடியுமா என்ன? அந்த பணத்தை வாங்கி உள்ள அடுக்கி வச்சி, அதுக்கு நான் காவல் இருக்கணுமா? என் நிம்மதிய பறிக்கற பணத்தை விட,  இயலாத நாலு பேருக்கு உதவி செய்றதுல கிடைக்கற நிம்மதியே வேற ! கண் மூடினா தூக்கம் வருது கழுத , இந்த பணத்தை பாதுக்காத்து என் சொற்ப காலத்தை இழக்க சொல்றியா?"என்று அவர்கள் தலையை அழுத்தினார். 



"நீ மனுஷனே இல்ல பா ! நீ ஒரு தேவதை. உதவி செய்ற உண்மையான கடவுள். சரியான ஆள் நீ, உன்னை  தப்பான இடத்தில படைச்சுட்டான் அந்த முருகன்..."என்றாள். 

அவரோ சத்தமாக சிரித்தார்.


"நான் கடவுள்ன்னா நீ என் போட்டோவையும் சேர்த்து வச்சுலடி கும்பிடனும் அந்த முருகனை மட்டும் கும்பிட்ற!"


" நீ நடமாடும் கடவுள்... உன் போட்டோ இங்க இல்லைனு நினைக்கறீயா? நீயும் ராஜாத்தியும் ரொமான்ஸ் பண்ணப்ப எடுத்த போட்டோ வீட்லயும் இருக்கு கடையிலும் இருக்கு...  ஆனா உன்னை முருகன் பக்கத்துல வச்சி கும்பிட மாட்டேன்... எனக்கு வேற மாதிரி தோணும். அதான் தனியா வச்சிருக்கேன்.."என்று விளக்கம் கொடுக்க,


" சேர்த்துச்சு வச்சி கும்பிட போகும் நாளும் வரும்டி கழுத !"விளையாட்டாக சொல்ல,


"ப்பா அப்படி சொல்லாத சும்மா இரு "திகழ் பொங்க, 


"முருகன் இறங்கி வர முடியாதுனு உன்னையும் அம்மாவையும் எங்களுக்காக அனுப்பி இருக்கார். அவ்வளவு சீக்கிரம் உன்னை திருப்பி அனுப்ப முடியாது ! இருக்கிற காலம் முழுக்க இந்த இரண்டு இம்சை உன்னையும் அம்மாவையும் விடாது !"என்றாள் தேவா,


இரு பெண் குழந்தைகளையும் ஆதுரமாக பார்த்தவர்," சரி தான். அந்த முருகன் இம்சைய மட்டுமா கொடுத்தார் கூடவே அந்த இம்சைகளை கரை சேக்கற பொறுப்பையும் கொடுத்திருக்கார்... அதையும் முடிக்கணும்ல"என்றார் இருவரும் பேசவில்லை.


"சரி , இரண்டு பேரும் கவனமா இருங்க ! பணம் இருக்குனு அந்த பள்ளி தாளாளார் என்ன வேணாம் பண்ண கூடியவனா இருப்பான் போல பார்த்து இருந்துக்கங்க " என எச்சரிக்க செய்தவர், எழுந்து வாசல் வரை சென்றவர் திரும்பி


"தேவா ! எதிர்த்த கடைசி சாவி உன்ட்ட தான இருக்கு. இன்னிக்கி கடைய பார்க்க  விஷ்ணு ஒரு பையன் வருவான் , கடைய காட்டு "என்று சொல்லி விட்டுச் செல்ல,..


இரு பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதற்கான அர்த்தம் அடுத்த போருக்கு மனதை தயாராக்கு என்பது தான். ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை இது வாழ்நாள் முழுக்க நீண்டு வரும் போகும் போரென்று.



****



"தம்பி எதிர்த்த கடையோட சாவி வேணும்" என்று திரும்பி நின்று காதில் காதொலிப்பானை மாட்டிக் கொண்டு அலைபேசி மூழ்கி இருந்தவளிடம் கேட்டான்.


தேவாவிடமிருந்து பதில் வரவில்லை என்றதும், அவள் முதுகை தட்டி "தம்பி !!! சாவி குடுப்பா !"



சட்டென திரும்பி அவனிடம்  விலகியவள் "அறிவில்ல உனக்கு ஒரு பொண்ண முதுகை தட்டி தான் கூப்பிடுவியா?"என்க


அவனோ அதிர்ந்து "எதே பொண்ணா?  நீயா?"என அவளை கீழிருந்து மேலாக சந்தேகமாக பார்த்தான்.


Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2