மடல் - 5

 மடல் 5


கருப்பு நிற அரை நிஜார் வெள்ளை நிற டீ - ஷர்ட்டில் இருந்தவன், காய்கறிகளை நறுக்கிய படி அடுப்பில் தக்காளி வெங்காயத்தை தாளித்துக் கொண்டிருந்தான்.

முகத்தில் வழியும் வியர்வை துளிகளை அவ்வப்போது துவலையில் துடைத்த படியே வேலை செய்தான்.

'பூண்டு குழம்பும் , பாசிப் பருப்பும் சௌவ்சௌவ் போட்டு கூட்டும் ' என அந்த நாளுக்குறிய உணவை தயார் செய்துக் கொண்டிருந்தான் விஷ்ணு வேந்தன்.

வீட்டில் மூன்று நாளில் சேர்ந்த துணிகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சலவை இயந்திரத்தில் போட்டு எடுத்தாள் வர்ஷா.

வாசலைப் பெருக்கி கோலம் போட்டு விட்டு வீட்டையும் பெருக்கி எடுத்தான் மதி வேந்தன்.

அந்த வீட்டின் மூன்று பிள்ளைகளும் தாய்க்கு  ஓய்வு தந்ததுமில்லாமல், வீட்டு வேலைகளை பிரித்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

முதுமையலிருக்கும்  தாயின் உடல்நலத்திற்காகவும், இளமையில் அவர் தந்த பாசத்திற்கும் , அன்பிற்கும் , அவர்கள் உயர, அவர் தந்த உழைப்பிற்கும் பலனாக,  முத்தான அம்மூன்று பிள்ளைகளும் தாயை தாங்கு தாங்கென்று தாங்குகின்றனர்.

தகப்பன் இல்லாத வீடு. தாய் தான் கஷ்டபட்டு உழைத்து அவர்களை ஓரளவு படிக்க வைத்து கை பிடித்து தூக்கி விட்டார்.

இப்போது நன்றாக சம்பாதித்து தாயைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மூத்தவன் விஷ்ணு வேந்தன், தகப்பன் இல்லாத வீட்டில் தாய்க்கு தாயாகவும், அதே நேரம் கண்டிக்கும் தகப்பனாகவும் இருக்கும் அண்ணன்.

மதி வேந்தன், வர்ஷா இருவரும் அண்ணனுக்கு பயந்தவர்கள் தான். அதையும் தாண்டி அவன் மீது அலாதி அன்பு கொண்டவர்கள்.

தாய் வேலைக்கு சென்ற நேரம் தாயாக இருந்து அவர்களின் பசியை போக்கி, அரவணைத்து பார்த்துக் கொண்டதால், அவன் மீதும் அன்னைக்கு நிகர் பாசம் கொண்டவர்கள். பாடம் சொல்லிக் கொடுத்து கண்டிப்புமாக அவர்கள் செய்யும் தவறை திருத்தி , மன்னித்து எடுத்து சொல்லும் தகப்பனாக மரியாதையும் வைத்திருந்தனர்.

கட்டுக் கோப்புடன் தன் குடும்பத்தை வழி நடத்தி வருகிறான் விஷ்ணு வேந்தன்.  அவனை மீறி எதையும் செய்ய எண்ண மாட்டார்கள்.

அதையும் மீறி தனது  ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டால்,அதில் எதுவும் நியாயக் கருத்துக்கள் இருந்தால் விட்டு விடுவான்.

இல்லையென்றால் பிடித்து வைத்து அரைமணி நேரத்தில் திட்டும், அறிவுரையும் சேர்ந்தே கொடுப்பான்.

ஆண்கள் , பெண்கள் பேதம் பார்க்கவே மாட்டான். வேலை என்றால் இருவரும் தான் செய்ய வேண்டும் என்று வீட்டு வேலைகளை பிரித்துக் கொடுத்து விட்டான்.

வீட்டின் முக்கிய வேலையான சமையல் வேலையை கையில் எடுத்துக் கொண்டு துணி துவைக்கும் வேலையை வர்ஷாவிடமும்  வீட்டை சுத்தம் செய்யும் வேலையை மதியிடம் கொடுத்தான்.

பாத்திரம் கழுவும் வேலையை விஷ்ணு பார்த்துக் கொள்வான், சில நேரம் வர்ஷா , மதி  என இருவரும் செய்வார்கள். சிறு சிறு வேலைகளை வசந்தி பார்த்துக் கொள்வார்..

விஷ்ணு, நூலகம் மற்றும் தகவல் அறிவியல் படிப்பை படித்து விட்டு சென்னையில் மிகப் பெரிய கல்லூரியில் நூலகராக வேலை பார்த்தான்.

வேலைக்கு சென்று  குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு இருவரையும் படிக்க வைத்தான். தாயும் அவனுக்கு உதவியாக வேலைக்குச் சென்றார்.

மதி, தகவல் தொழில்நுட்பப் படிப்பை படித்து முடித்து இப்போது ஐடி துறையில் நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கிறான். வர்ஷா, பி.ஏ ஆங்கிலம் படித்துக் கொண்டிருக்கிறாள்.

மதி படித்து முடித்து வேலைக்கு சென்று கடன்களை அடைத்து முடிக்கும் வரை வேலைக்கு சென்ற விஷ்ணு வாடகைக்கு கடையை எடுத்து அதில் தமிழ் , ஆங்கில எழுத்தாளர்களின் புத்தகத்தை விற்க ஆரம்பித்தான்.

சிறு வயதிலிருந்தே புத்தகம் என்றால் அவனுக்கு உயிர். அதிலும் அவன் தீவிர ஜெயகாந்தனின் ரசிகன்.

அவரது கதைகளை விடாமல் படித்தவன், அவரை தொடர்ந்து சுஜாதா, ராஜேஷ்குமார், பால குமார் என அனைத்து எழுத்தாளர்களின் கதையை, புது படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பது போல தந்தையிடம் கேட்டு புத்தகத்தை வாங்கிப் படித்து விடுவான்.

அவன் புத்தகத்தின் மேல் கொண்ட அலாதி ஆர்வத்தை கண்டு வியந்து போவார் அவனது தந்தை சத்ய மூர்த்தி.

தனது தந்தையைப் போல அவனை எண்ணியவர், தன்னால் முடிந்த அளவு அவன் கேட்கும் புத்தகத்தை வாங்கி கொடுத்தார்.

அவர் இறந்த பின்னே வறுமையில் தவித்தவனுக்கு கடனாக சில புத்தகங்கள் கிடைக்க வாங்கி படித்து விட்டு திருப்பித் தருவான்.

புத்தகத்தின் வாசனை அவனுக்கு ஒர் போதை... அது பழையதுவோ புதியதுவோ, ருசிக்காமல் விட்டதில்லை அவன்.

அதுவே அவன் நூகலப் படிப்பையும் புத்தகக் கடையை வைக்கவும் உதவியது.

**

காலை உணவையும் மதிய  உணவையும் செய்து முடித்தவன், மதிய உணவை இருவருக்கும் கொள்கலனில் தனியாகக் கட்டி வைத்து விட்டு குளிக்கச் சென்றான்.

மற்ற இருவரும் நேரமாக எழுந்து வேலையை செய்து விட்டு குளித்து விட்டு தயாராக வந்து உணவு மேசையில் அமர்ந்து விட்டனர். அவனும் வந்து விட்டான்.
வசந்தியும் வந்து விட, நால்வரும் அமர்ந்து சேர்ந்து சாப்பிட்டனர்.

"அண்ணா ! "என்றாள் தங்கை வர்ஷா,

"ம்..."என்றான் தட்டில் சட்னியை போட்டுக் கொண்டு.

"அது வந்து அண்ணா ! நாம ஏன்  வேலைக்கு ஆள் வைக்க கூடாது?"என தயங்கிக் கொண்டே கேட்டாள்.

மதியோ ' மாட்னா ' என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான்.

விஷ்ணுவோ "ம் வைக்கலாம் வரு !"என்றான் சாதாரணமாக,

அவளுக்கோ, தான் சொன்னதும் அண்ணன் சரியென்றதை நினைத்து குதூகலம். மதியிடம் காலரை தூக்கி விட்டுக் கொண்டாள்.

அதற்கு மதியோ ' அட மக்கு!
கேப்சன பார்த்து ஏமாகறாதடி வரு ! அவர் கருத்தே வேறையா இருக்க போகுது?' என்று வெளியே சொல்லாமல் எண்ணிக் கொண்டான்.

"சரி எந்த வேலைக்கு ஆள் வைக்கணும் வரு? சமைக்கவா? துவைக்கவா? பெருக்கவா?"

"மூனுத்துக்கும் தான் அண்ணா !"

"ஒ... அப்போ நீ என்ன பண்ணுவ?"

"நான் ஒன்னும் பண்ண மாட்டேன் அண்ணா ! "

"நீயும் எதுவும் பண்ணலைன்னா எப்ப நீ இந்த வேலை எல்லாம் செய்யவ? இப்போ உனக்காக அண்ணன் நான் வேலைக்கு ஆள் வைக்கிறேன். நாளைக்கு போற வீட்ல குடும்ப செலவு காரணமா வேலைக்காரி வைக்க முடியாது, நீ தான் செய்யணும் சொன்னா என்ன பண்ணுவ?"என்றதும் அவள் திரு திருவென முழித்தாள்.

' ஐயோ!! ஐயோ !!  மடக்கிட்டாரே தேவையாடி உனக்கு இது !' என மீண்டும் மனதுடன் பேசினான் மதி.

"நம்ம அம்மா, அவங்க நாற்பது வயசுலையும் எல்லா வேலையும் பார்த்தாங்க! இந்த வயசுல உன்னால ஒரு வேலைய பார்க்க முடியலையா? நீ போற வீட்டிலே எல்லா வேலையும் நீ தான் செய்யணும். அதுக்கு நீ பழகிக்கணும் தான் ஆகனும் நான் சொல்லல...

ஏற்கெனவே மனுஷங்களோட அடிப்படை வேலையை செய்ய கூட அலுப்பு பட்டுட்டு வேலைக்கு ஆள் வச்சுக்கிறாங்க,  அடுத்து  இயந்தரம் வேற வந்து பாதி வேலைய அதுவே செய்து,  இதுல மனுஷங்களோட வேலை தான் என்ன? ஒண்ணுமில்ல சோம்பேறியாவே ஆகிட்டான்!

இப்படியே போனா மனுஷன் இயந்திரம் போல உட்கார வேண்டியது தான். இயந்திரம் மனுஷன போல வேலை செய்ய வேண்டியது தான்.

அடிப்படை வேலை பார்க்க கூட முடியாதளவுக்கு உனக்கும் உடம்புக்கும் என்ன பிரச்சனை?"என்றான்

அவளோ "இல்லன்னா ஃப்ரெண்ட்ஸ் வீட்ல வேலைக்கு ஆள் வச்சிருக்காங்க ! அதான் உன் வீட்ல ஆள் வைக்க வேண்டியது தானே சொன்னாங்க. நானும்  உங்கட்ட கேட்டேன்"என்றாள் குரல் மெலிந்து.

"ஆடம்பரச் செலவு செய்றவங்க! இயலாதவங்க தான் வேலைக்கு ஆள் வைப்பாங்க ! நாம ஏன் வைக்கணும் வருமா? உனக்கு உன் வேலை கஷ்டமா இருந்தா சொல்லு, நாங்க பார்க்கற வேலைய உனக்கு தர்றோம்"என்றதும் வேகமாக தலையை  ' வேண்டாம் ' என ஆட்டியவள் " நான் என் வேலையை பார்த்துக்கிறேன் அண்ணா !"என்றாள்.

விஷ்ணுவும் சிரித்துக் கொண்டே "
வேற ஒரு ஆள் வந்து நம்ம வீட்டை கவனிச்சிக்கனுமா? அதுக்கு நாம பணம் வேற கொடுக்கணுமா? சொல்லு ! நம்ம வேலையை நாம தான பார்க்கனும் ... இன்னொருத்தர் கையில கொடுக்கிறது எனக்கு ஒப்பல வருமா ! நம்ம வேலையை நாம பாத்தா தான் திருப்தி புரியுதா?" என்றான் அவளும் ' புரியுது 'என்றாள் தலையை ஆட்டி .

"அப்போ அண்ணி வந்து பார்த்தாலும் ஒப்பாதா அண்ணா உனக்கு?"என மதி தன் சந்தேகத்தை கேட்க,

இதுவரை மகனது பேச்சை ஆதூரமாக கேட்டுக் கொண்டிருந்த வசந்தி இப்போது அதில் ஆர்வம் கொண்டார். ' மகன் தனக்கு வரப் போகும் மனைவியை பற்றி என்ன நினைக்கிறான்? ' என்று அறிந்துக் கொள்ள ஆவலோடு இருந்தார்.

"வர போற பொண்ணு வாழ தான் வருது, வேலை பார்க்க இல்லை... அதுக்காக வேலை செய்யாமல் ராணி மாதிரி இருக்கவும் கூடாது. வேலைகள் பிரிக்கப் படும். அவளை என்னோட சரிபாதியாக ஏத்துக்கும் போது அவ செய்ற வேலைகள் எப்படி எனக்கு ஒப்பலனு சொல்லமுடியும்...?அவளும் நமக்கு சொந்தம் தான்... ஆனா வேலைக்கு வர ஆள அப்படி பார்க்க முடியாது. அதுக்காக அவங்களை தாழ்வாகவும் பார்க்க  கூடாது. சக உயிரா இருக்கட்டும் வேலைக்கு ஆள் வச்சி நம்ம பார்வையை மாத்திக்க வேண்டாம்"என்று தங்கைக்கும் தம்பிக்கும் தெளிவாக விளக்கம் கொடுக்க, கசப்பாக நினைக்காமல் நல்லதாக எடுத்துக் கொண்டனர் இருவரும்.

மகனை மெச்சுதலாக பார்த்தார் வசந்தி.

மூவரும் கிளம்பும் தருணம் வர, தாயிடம் வந்த விஷ்ணு, " நீங்க பார்க்க , இங்க எந்த வேலையும் இல்ல...  ரெஸ்ட் எடுங்க மா !"என்றான்.

"சரி பா ! ஆனா  எனக்கு தலைக்கு மேலே ஒரு பெரிய வேலை இருக்கு அதை எப்படி பார்க்க தான் தெரியல ?"என்றார்.

"என்ன பெரிய வேலை மா?

"வேற என்ன உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது தான் முதல் வேலை தான்... பொண்ணு பார்க்க ஆரம்பிக்க வா ?"என்று லேசாக தூண்டில் போட,

அவனும் அலட்டிக் கொள்ளாமல் " பாருங்க மா " என்று சொல்லி விட்டு செல்ல, மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தான்.

****

கல்லூரியில்  வாசலில்  வண்டியை நிறுத்திய மதி , வருஷா இறங்கியதும் வண்டியை எடுக்க, அவனை  தடுத்த வருவோ "அண்ணா  ! எனக்கு ஒரு ஆசை நிறைவேத்தி வைப்பீயா?"

"ம்... அண்ணன் கிட்ட கேட்காம என் கிட்ட கேக்குறன்னா அப்போ அது வில்லங்கமான ஆசையா தான் இருக்கும் என்ன அது?"என்றான்.

அவள் தன் ஆசையை சொல்ல "என்ன? "என அதிர்ந்து போனான் சின்னவன்

****

"திகழு மா, உனக்கும் அந்த ஸ்கூல் தாளாளருக்கும்  எதுவும் பிரச்சனையா? இந்தக் கடைய காலி பண்ண சொல்லிப் பணம் தர்றேன் சொல்றான் மா "என்றார் கடையின் உரிமையாளர்.

"தாளாளரா? "என தேவா வாயை பிளக்க, திகழோ நுதலை தேய்த்த வண்ணம் தேவாவை பார்த்தாள்.


Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2