இதயம் - 19

 

இதயம் 19

சரஸ்வதியைத் தவிர்த்து அனைவரும் கல்யாணப் பரபரப்பில் இருந்தனர். சைத்துவும் கூட  கல்யாண வேலையில் தன்னை ஒன்றிருந்தான். 


வஸ்தியின் மேல் சிறு கோபம் இருந்தாலும் உடன் பிறந்தவளின் திருமணம் போல, பிரபு தேவனோடு கொஞ்சம் பொறுப்பாக எடுத்து பார்த்தான். பிரதீப்பை தனக்கு துணையாக வைத்துக் கொண்டு அனைத்து வேலையையும் செய்தான்.


வஸ்தியைப் பெண் கேட்டு சென்ற  ஐந்தாம் நாளிலே ஸ்ருதிக்கு பிரசவ வலி வந்திருக்க, அவளை மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். நல்ல நேரத்தில் அழகான பூக்குவியலாக  பெண் மகவை பெற்றெடுத்தாள். அந்த வீட்டின் முதல் பேரப்பிள்ளை. 


சாய் எதிர்பார்த்தது போல பெண் மகவை தான்  அவனது மனைவியும் ஈன்றெடுத்திருக்கிறாள்.  ஆனால் சரஸ்வதி எதிர்பார்த்ததோ ஆண் மகவு. விஷயத்தை கேட்டதும் அவரது சந்தோசம் முற்றிலும் வடிந்து போனது.


இந்த விஷயத்திலும் தான் எண்ணியது நடக்காமல் போக, ஏதோ தொடர்ந்து அடிவாங்கியது போலொரு எண்ணம் அவருக்கு . அவர் முகமே சரியில்லாமல் போக,  ஸ்ருதிக்கு மாமியாரை நினைத்து அல்லு விட்டது. சிறு பயமும் உள்ளுக்குள் உறுத்தலாகவும் இருந்தது. 


இத்தனைக்கும்  அவள் அவருக்கு பிடித்த மருமகளாக தன் ஆசைகளை எல்லாம் மறந்து விட்டு அவரது விருப்பப்படியே வீட்டுவேலை எல்லாம் செய்து, புருசனுக்கும்  மாமியார் மாமனார்க்கும் பணிவிடை செய்து அக்மார்க்  வீட்டு மருமகளாகத் தான் இருந்திருக்கிறாள் ஸ்ருதி. 


திருமணத்துக்கு முன்பே 'பொட்டிக்'  வைக்க வேண்டும் 'ஆரி வொர்க்'  செய்து கொடுக்கும் வேலையையும் சேர்த்து அதனோடு செய்ய வேண்டும் என்ற தன் பெரும் கனவை கணவனிடம் கூற அவனோ  மனைவியின் கனவை ஆர்வமாகக் கேட்டாலும் அக்கனவை  நிறைவேற்ற முடியாத கையாலாகாத கணவனாக தான் இருந்தான். அவளது கனவை நிறைவேற்ற வேண்டிய எண்ணமிருந்தாலும், சரஸ்வதியை  நினைத்து அடக்கிக் கொண்டான். 


அவரை ஒத்துக் கொள்ள வைப்பதை விட மனைவிடம் சென்று அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லுவது அவனுக்கு எளிதாகிப் போய்விட்டது. அதில் அவளது அம்மா அப்பா அறிவுரையும் அதுவாக இருக்க தன் கனவை தனக்குள் புதைத்தாள்.


அப்படி எல்லாம் மாமியாருக்காக பார்த்து செய்த மருமகளை எங்கே பிடிக்காமல் போய்விடுமோ ! குழந்தையை வெறுத்து விடுவாரோ என்று அஞ்சினாள். அந்த அச்சத்தைக் கணவனிடமும் பகிர்ந்தாள்.


"ஏங்க உங்க அம்மாஆ..."என்று இழுத்தாள்."தெரியும் ஸ்ருதி, பேத்தி பிறந்த சந்தோசம் அவங்க முகத்துல இல்லைனு தெரியும். அதுக்காக நம்ம என்ன பண்ண முடியும்.  பெண் குழந்தை வேணாம் ஆண் குழந்தை தான் வேணும் திருப்பி கொடுத்து வேற வாங்க முடியுமா??? அவங்க இவளை பேத்தினு அக்சப்ட் பண்ணி தான் ஆகணும். இல்ல எதுவும் சொன்னாங்கனா நாம தனியா போயிடலாம்"என்று கையிலிருந்த குழந்தையை தூங்க வைத்தபடி சொன்னான். 


"இத்தனை நாள் வராத ஞானம் உங்க பொண்ணு வந்ததும் கிடைச்சிடுச்சா?? மனைவிக்கு பேசாத நாக்கு மகளுக்காகப் பேசுதோ !"அவனை கேலி செய்ய, 


"ஹாஹா ! என்ன பண்ண பொண்டாட்டி மட்டும்  இருந்தவரை  அம்மா ஒசத்தி. மக  வந்ததும் அவ ஒசத்தி..." என்று அவளை வெறுப்பேற்றினான்.


"நாங்க மட்டும் உங்களுக்கு என்னைக்கும் வேலைக்காரி இல்ல"என உதட்டை சுழித்து முகத்தை திருப்ப, அவளை சமாதானம் செய்ய முயன்றான். 

ஆனாலும் அவளது கூற்று  தான் உண்மை. ஆண்களுக்கு தாயும், பின் மகளும் ஒசத்தி தான் என்றும் மனைவியை விட, 


பிள்ளைப் பிறந்து முப்பது முடிந்ததும் திருமணம் பேச்சை எடுத்தனர்.  திருமணம் நாளும் நெருங்க, மண்டபத்தை தேர்வு செய்து முன் பணம் கொடுத்துவிட்டு அப்படியே சமையலுக்கு ஆளைப் பிடித்து பெரிய வேலையை முடித்தனர். 


அடுத்ததாகப் பத்திரிக்கையை, எகாவும் வஸ்தியும் தான் தேர்வு செய்தனர். எத்தனை வேண்டும் சொல்லி அச்சடிக்கக் கொடுத்தனர். 


அச்சடிக்கப் பட்ட பத்திரிக்கையும் வர, இருவீட்டினரும் பிரித்து கொண்டனர். அதில் எகா, வைஷுவும் கொஞ்சம்  வாங்கிக் கொண்டனர். வைஷுவும் எகாவும் பள்ளித் தோழர்களுக்கு சேர்ந்து சென்று கொடுத்துவிட்டு வந்தனர். 


பின் வஸ்தியை அழைத்துக் கொண்டு அவளது  நண்பர்களுக்கும் தனது கல்லூரி நண்பர்களுக்கும் மதிமாக்கும்  கொடுத்து ஆசிர்வாதம் வாங்கி விட்டு வந்தனர். 


அடுத்து ஆடைகளும் தாலியும் தேர்வு செய்ய வேண்டிய வேலை  இருந்தது.  ஒரு நல்ல நாளில் குடும்பமாகச் சென்று ஆடைகளை எடுக்கச் சென்றனர். 


சரஸ்வதி வருவதால்  வைஷு வரவில்லை என்று சொல்லி விட்டாள். சரஸ்வதிக்கு அது நல்லதாகப் பட்டது. சைத்துவும் வர மறுத்துவிட்டான். குறிப்பிட்ட நபரே ஆடை எடுக்க சென்றனர்.


மகிழ், வஸ்திக்கு பிடித்த பட்டு புடவையே நிச்சயத்திற்க்கும் முகூர்த்திற்கும் எடுத்தார். விலையை பார்க்காமல் அவளுக்கு எடுத்து கொடுத்தார். மகளுக்கும் சேர்த்து அவரே எடுத்தார். பெண் வீட்டார்களும் எகாவிற்கு, துணியை எடுத்தனர் . 


பின் மாப்பிள்ளை தாலியும் எடுத்தனர்.வஸ்திக்கு நகைகளும் சேர்ந்து எடுத்தனர். சரஸ்வதி அமைதியாக இருந்தாலும் அனைத்தையும் நோட்டம் விட்டபடி தான் இருந்தார். 


அகல்யாவிற்கு மகிழ் வஸ்தியை தாங்குவது  மனத்திருப்தியாக இருந்தது. தான் தேர்வு செய்த சைத்துவை விட, அவளை தாங்கென்று தாங்கும் எகாவின் குடும்பத்தார்கள் எல்லாம் தங்கம் என்றிடலாம்.


சரஸ்வதி தன் மகளை இப்படி தாங்குவராஎன்று கேட்டால் சந்தேகம் தான் ஆனால் சாந்தி அப்படி இல்லை தன் மகளென்றால் அவருக்கு உயிர் தான்.


' சைத்து , எகாந்த்தை போல  வஸ்தியின் விருப்பம் அறிந்து நடப்பவனா ?'என்று கேட்டால் பதில் நிச்சயம் இல்லை என்று தான். அகல்யாவின் மனம் இருவரை வைத்து  ஒப்பிட்டு பார்க்க, தன் மகளின் தேர்வே சரியானதாக இருந்தது. மகள்  சந்தோஷமா வாழ போகிறாள் என்ற மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும் அவள் பேசாது இருப்பது அவரை தினமும் வதைத்தது. 


தம்பி, தங்கையுடன் மட்டுமே பேசுவாள், தன் தேவை எல்லாம் அவளாகவே பார்த்துக் கொண்டாள். எவ்வளவு மன்னிப்பு கேட்டும் அவள் மனம் இறங்கவில்லை. அவரும் மகள் பேசுவாள் என்று காத்துக் கொண்டிருக்கிறார். 


நிச்சய நாளும் வர இன்னும் மூன்று நாட்கள் இருக்க,  அதற்குள் ப்ரீ வெட்டிங் சூட் எடுத்துக் கொள்ளலாம் என்று வைஷு சொல்ல எகா குடும்பத்தினர் சரியென்று ஒத்துக் கொண்டனர். 


வஸ்தி சாந்தியிடம் சொல்ல, அவரோ தயங்கி சரஸ்வதியிடம் சொன்னார்.


"எல்லாம் உங்க இஷ்டப்படி தான நடக்குது இதையும் அப்படியே பண்ணுங்க" என்று சென்று விட்டார்.


சாந்தி வஸ்தியின் துணைக்கு சனாவையும் சைத்துவையும் அனுப்பி வைத்தார். பக்கத்திலுள்ள தேனிக்கு சென்று எடுக்கலாம் என்று தீர்மானித்திருந்தனர்.


எகா, வஸ்தி, வைஷு, சனா, சைத்து, பரணி அகிலா, சூட்டிங்க்கு தேவையான  பொருட்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். 


எகா , வஸ்தி , சனா மூவரும் தான் பேசிய படி வந்தனர். சைத்துவும்  வைஷுவும் செல்லில் தலையைத் கொடுத்திருந்தனர்.


சைத்துவின் திருட்டு பார்வை வைஷுவை வட்டமடித்தது. ஆனால் அவள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. 


சாந்தி முதலில் சொல்லும் போது சலிப்பாக முடியாது என்றவன் அவர் வைஷுவின் பேரைச் சொன்னதும் மனது ஏனோ' போகலாம் 'என ஊந்த, 'சரி' என விருப்பமில்லாமல் பேருக்கு ஒப்புக் கொண்டவன் உள்ளுக்குள் ஏன் என்று தெரியாமல் போட்டான் குத்தாட்டம்.


அவர்கள் தேர்வு செய்த இடமும் வர , முதலில் சுத்தி பார்த்தவர்கள்,அவர்களை  வைத்து போட்டோ எடுக்க  சரியான இடத்தை  கண்டு விட்டு, செல்லில் சில போஸ் 'களை தேர்வு செய்து வைத்தனர்.


சனா வஸ்திக்கு மேக்கப் போட்டு விட, எகாவை பரணி பார்த்து கொண்டான்.


புகைப்படங்கள் வீடியோக்கள் என எடுக்க ஆரம்பித்தனர்.  வைஷுவின் கையிலுள்ள நிக்கான் கேமிரா  எகாவை வஸ்தியையும் அழகாகப் படம் பிடித்தது.


எகாவின் கண்கள் காதல் சொட்ட சொட்ட வஸ்தியைப் பார்க்க, அவன் காதல் துளியில் நனைந்து போனாள் பெண்ணவள்.  இருவரும் காதல் அடைமழையில்  தொப்பலாக நனைந்தனர். விதமாக  விதமாக நிற்க வைத்து புகைப்படமாக எடுத்து  தள்ளினாள் வைஷு.


தான் பார்க்கும் தொழில் மேல்  அவளுக்கு இருக்கும் ஆர்வத்தை கண்டு மெய்சிலிர்த்தான் சைத்து.


போட்டோகிராபியின் மேல்  அவளுக்கு இருக்கும் ஆசை அவனை கவர்ந்தது. அப்போ அப்போ அவள் கேமராவை முத்தமிடும் போது அவனுக்கு ஏக்கம் சின்னதாக வந்து போனது.

ஏனென்று  இதெல்லாம் என்ற யோசனை வர்றாமலும்  இல்லை ஆனாலும் அவனுக்கு பிடித்திருக்கிறது.


கொஞ்சம் மணமக்கள் இருவருக்கும் இடைவேளை கொடுத்து விட்டு இவளும் தனியாக அமர்ந்த வாக்கில்  போட்டோக்களை பார்த்து  கொண்டிருந்தாள்.


அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தான்  சைத்து. அவளும் எதுவும் சொல்லவில்லை. புகைப்படத்தை பார்த்த படி தான் இருந்தாள். 


"நீ ரொம்ப அழகா இருக்க?"  அவன் உள்ளத்திலிருந்து  சொன்னான். அவன் சொன்னதும் சட்டென அவனை பார்த்து, "என்ன திடீர்னு?" என்றாள்.


"ஒருத்தர் அழகா இல்லனாலும் அவங்க திறமை அவங்களை அழகா காட்டுமாம். அதான் உன் திறமை உன்னை ரொம்ப அழகா காட்டுது. போட்டோகிராபினா அவ்வளவு இஷ்டமா???"


"உயிர், முதல் காதலன். யாருக்காகவும்  விட்டுக்கு கொடுக்க மாட்டேன்" என்றாள்.


"ம்... பத்து முத்தம் கொடுக்கும் போதே தெரிஞ்சு கிட்டேன்" அவன் பொறாமையில் சொல்ல, அவள் வாய்விட்டே சிரித்து விட்டாள்.


அவள் சிரிக்கும் போதும் இன்னும் அழகாக இருந்தாள். இழுத்து இதழை பதம் பார்க்க தோன்றிய எண்ணம் அவனுக்குள் பேரதிர்வை உண்டாக்கியது. ' நானா இதை யோசித்தேன்??'  என்பது போல தன்னை ஒருதரம்  கேட்டுக் கொண்டான்.


"சைக்கோ, இந்த நேரத்துல உன்கிட்ட  ஒன்னு சொல்லணும் சொல்லட்டுமா???" என தயக்கமாக கேட்க, " ம்ம்.. சொல்"என்று ஆர்வமாகச் சொன்னான்.


"வாழ்க்கை ஒரு வட்டம் சைத்து. அதுல ஜெயிக்கிறவன் தோப்பான் தோக்கிறவன் ஜெயிப்பான்" என்றதும் ஏமாந்து போனவன்'ங்கே' என முழித்தான்.


"முதல் தடவ எகாக்காக  நான் வஸ்திய போட்டோ எடுக்கும் போது நீ எங்கிட்ட சண்டை போட்ட, ஏன் போட்டோவை கூட கிழிச்ச.  ஆனா, இப்போ எகா வஸ்தி சேர்ந்து ஒட்டி நிக்க வச்சு  போட்டோ எடுக்கிறேன் உன்னால எதுவும் சொல்ல முடிஞ்சதா??? நீ ஆரம்பிச்சது தான் எங்ககொண்டு வந்து நிறுத்திருக்க பார்த்தியா???"எனக் கேட்டு கலகலவென்று சிரித்தாள்.


'சண்டாளி ரொமான்டிக் எதாவது  சொல்வானு பார்த்த பஞ்சு டையலாக் பேசி கொல்றாளே!!! உன் பாடு கஷ்டம் தான்' உள்ளுக்குள் முணங்கி விட்டு அவனும் அவளோடு சிரித்தான்


இருவரும் சிரித்து பேசுவதை பார்த்த சனா, "வஸ்தி சைக்கோ சிரிக்கிது பாரேன்"என்றதும் எகா வஸ்தி அவர்களை தான் பார்த்தனர். வஸ்தி ஆச்சர்யமாக பார்த்தாள் எகா கடுப்புடன் பார்த்தான்.


"அடுத்த காதல் ஜோடி உருவாகுதோ !" சனா சொல்ல, " சும்மா இரு சனா அவங்க சும்மா பிரண்டிலியா பேசிட்டு இருப்பாங்க அதை போய் தப்பா பார்த்துட்டு" என்று அடக்கினாள் வஸ்தி.


"ஓ... நீங்களும் அப்படி தான  ஆரம்பிச்சிருப்பீங்க"சனா கேட்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து வெட்கம் கொண்டனர்.


"அண்ணா ! நீங்க வஸ்திக்கு நிகரா வெட்கப் படுறீங்க... சும்மா சொல்லுங்க நீங்க அப்படி தான ஆரம்பிச்சிங்க?"


"ஆமா டா சனா!! பிரண்ட்லியா இப்படி ஆரம்பிச்சது தான். லவ் வரைக்கும் வந்தது. ஆனா அவங்க பேச்சு பிரண்ஷிப் போட முடிஞ்சிடணும் காதல் வரைக்கும் போகக் கூடாது" என்றான் சன்னமாக,


சனாவும் வஸ்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"ஏன் அப்படி சொல்ற காந்த்??"


"எனக்கு சைத்துவையும் பிடிக்கல அவன் கேரக்டரையும் பிடிக்கல... எப்போ என்ன செய்வான்  தெரியாது வைஷுக்கு அவன் வேணாம். அவ சந்தோசம் நிம்மதி எல்லாம் போயிடும்"என்றான்.


அவன் கூற்று இருவருக்கும் சரியென தான் பட்டது. அண்ணனை நினைத்து கோபமும் வருத்தமுமாக இருந்தது சனாவிற்கு. மீதி எடுக்க வேண்டிய போட்டோவை எடுத்து  மதுரைக்கு வந்தனர்.


****


"அவன் யாரு உன் பிரண்டா ??? " உள்ளுக்குள் எழுந்த தவிப்பும் கடுப்பையும் மறைத்து வைத்துக் கொண்டு கேட்டான் சைத்து.


"அப்பாவோட பிரண்டோட சன். அவனும் என் இனம் தானாம்... போட்டோகிராபில நிறைய பேசினோம் அப்ப தான் சொன்னான் அவன் எனக்கு பார்த்த மாப்பிள்ளைனு. அவன் எனக்கு செட் ஆவான் தோணுது. என் ப்ரோஃபஷன் பத்தி நான் எக்ஸ்பிளைன் பண்ண தேவையில்லேல. என் பியூசர்  கனவுக்கு   அவனால் எந்த தடையும் இருக்காது ரொம்ப ஹெல்ப்ஃபுல் இருப்பான் நினைக்கிறேன்" என்று வைஷு சொல்ல


சைத்துவிற்கோ, அவளைப் பற்றியிழுத்து " நான் தான் உனக்கு சரியானவன்" என்று கத்தணும் போல இருந்தது . ஆனாலும் அவனது ஈகோ தடுக்க, கோபமாக வந்தவன் சரஸ்வதி காட்டிய பெண்ணை" பிடித்திருக்கிறது"  என்று சொல்லி கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டான். பின்னால் அவன் படப்போகும் பாட்டை அறியாமல்.

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2