மடல் 2

அல்லி மடல் மேனியிலே

மடல் - 2

"தப்பு தெரிஞ்சதும் உடனே மன்னிப்பு கேட்கிற காதலன் கிடைக்க உனக்கு கொடுத்து வைச்சிருக்கணும் ! அவன போய் நீ ஏமாத்தலாமா  சுருதி?"என பாவம் போல கேட்க

' அதானே ! தேவாவாது சேர்த்து வைக்கிறதாவது ! காதலுக்கு எமனில அவ !' என நினைத்துக் கொண்டு சுவாரஸ்யத்துடன் பார்த்தாள் திகழ்.

"ஏமாத்தினாளா? என்ன சொல்றீங்க நீங்க?" என வருண் பதற

"எஸ் ! சுருதிக்கு நாங்க டாட்டூ போட்டு விடல வருண் ! அவ எங்க கடைக்கு வரவே இல்ல !  கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் போன் பண்ணி டாட்டூ போட்டு விட்டதா சொல்ல சொன்னா ! "என்று உண்மையை உடைத்துச் சொல்ல, சற்று முன் கோர்த்த கைகளை உதறி தள்ளினான்.

"ஏன்டி மறச்ச? எனக்கு தெரியும்டி நீ இப்படி பண்ற ஆள் தான். உன் மேல சந்தேகப்பட்டு தான் ஷாப்ப காமினு நின்னேன். நான் நினைச்ச மாறி நீ பண்ணிட்டேல !"என அவன் ஆரம்பிக்க,

"நான் எங்க டாட்டூ போட்டா உனக்கு என்ன டா? நான் யார் கிட்ட போடணும் நீ  டிசைட் பண்ணக் கூடாது. நான் தான் பண்ணுவேன். நீ சொல்றத நான் செய்யணுமா?"

"அதுக்காக எவனோ ஒருத்தன் கிட்ட எல்லாத்தையும் காட்டுவீயா?"

"காட்டுவேன் டா !  யார் கிட்ட இந்த  டாட்டூ போட்டேனோ அவன் கிட்ட போய் கவர் அப் பண்ணுவேன் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க டா !"என அவளும் சட்டமாக பேசினாள்.

இருவரும் வாக்குவாதத்தில் மூழ்கிவிட, இருவரையும் அழைத்த தேவாவோ "ப்ளீஸ் கொஞ்சம் வெளியே போய் சண்டை போட்றீங்களா கஸ்டமர் வர நேரம் இது !"என்றாள்.

இருவரும் சண்டை போட்டுக் கொண்டே வெளியே செல்ல, தேவாவோ பெரிய வேலை செய்தது போல் உடலை முறித்தாள். திகழோ அவளை கட்டி அணைத்து கொண்டாள்.

"எங்க நீ அவங்களை சேர்த்து வச்சிடுவியோ உன்னை தப்பா நினைச்சிட்டேன் தேவா ! நல்ல வேள நீ அப்படி எதுவும் பண்ணாம என் வயித்துல பால வார்த்த ! "

"நமக்கு தான் அந்த மாதிரி நல்ல காரியமெல்லாம் அலர்ஜி , ஒவ்வாமை உனக்கு தெரியாதா பட்டி!"என்க , அவளை மீண்டும் அணைத்தாள் திகழ்.

"ம்  காதலர்களை பிரிச்சிட்டே இருங்க! அந்த பாவம்லாம் சேர்ந்து உங்க காதல் கதைக்கு பெரிய ஆப்பா வைக்க போகுது பாரு !"என்று வந்தான் கதிரேசன் என்கிற கதிரே. அவனுடன் அவனது காதல் மனைவி மஞ்சுளாவும் வந்தாள்.

இருவரும் காதலித்து வீட்டை விட்டு ஓடி சென்னைக்கு வந்து விட்டனர்.
நண்பர்கள் உதவி கரம் நீட்ட காபிக் கடை ஒன்றை ஆரம்பித்து, அதனோடு வாழ்க்கையையும் காதலுடன் சுவைத்து கொண்டிருக்கும் காதல் தம்பதியர்கள் அவர்கள்.

"அட கதிரே ! இப்போ  இருக்கற லவ்வர்ஸ் விட்ட சாபம்லாம் பழிக்க வாய்ப்பே இல்ல ! ஏன்னா எவனும் எவளும் உண்மையா எங்க காதலிக்கறாங்க? எல்லாருக்கும் டபுள் டிரிபிள் எக்ஸ் இருக்கு ! இதுல ஆப்ஷனல் வேற நிறைய இருக்கு இது தான் காதலாஆ?

கதிரே நீ சொல்லு ! கவர் அப் பண்ண வர ஆணோ பெண்ணோ  போட்ட டிசைன் பிடிக்கலைனு வர்றதில்ல! எக்ஸ் பெயரை மறைக்க தான் வருதுங்க !
இதுக்கு எதுக்கு காதலிக்கணும் சொல்லு...? "

"சரியா சொன்ன தேவா ! கதிரண்ணா ! இப்போ வந்த லவ்வர்ஸ் கூட உண்மையான காதலர்கள் இல்ல. அவன் இவள சந்தேகப்பட்றான். இவ அவன ஏமாத்துறா ! ரெண்டு சேர்ந்து என்ன பண்ண போதுங்க ! நாங்க காதலுக்கு எதிரி இல்ல உண்மையா காதலிக்கறவங்கள நாங்க கண்டிப்பா மதிப்போம். இப்படியும் ஆட்கள் வந்தா பிரிப்போம் என்னடி?"என கேட்டு திகழ்  தன் கையை உயர்த்த, உயர்த்திய கையில் தன் கையை அடித்து கண்ணடித்தாள் தேவா !

கதிரும் மஞ்சுளாவும் ஒரு சேர தலையை இருபுறம் ஆட்டி ' இதெல்லாம் எங்க முடிய போகுதோ ?' என எண்ணிக் கொண்டனர்.

***

"ஶ்ரீ தி"என தங்கள் கனவிற்கு(கடைக்கு) ஐந்து வருடங்களுக்கு முன்பே பெயரிட்டு, அதை இன்று வரை இருவரும் வெற்றிக்கரமாக கொண்டு செல்கிறார்கள்.

"ஶ்ரீ தி"பெண்கள் நடந்தும்  பச்சைக் குத்தும் கடை(டாட்டூ ஷாப்) மக்கள் மத்தியில் பிரபலமானது. பச்சைக்  குத்துவதில் வல்லுநர்களான (புரோபஷனிஸ்ட் டாட்டூ ஆர்டிஸ்டஸ்) தேவ ஶ்ரீ மற்றும் திகழ் பாரதியால் நடத்தப் படுகிறது.

கூகுள் விமர்சனத்திலிருந்து (ரிவ்யூஸ்) வலைஒளி  ஊடகங்கள் வரையில் பிரபலமான கடையிது.  ஊடகங்களிலிருந்து பலரும் வந்து அவர்களை பேட்டி எடுத்து தங்களது வலைஒளியில் பதிவு செய்தும் இருக்கிறார்கள்.

இருபது வயதில் பச்சைக் குத்துவது (டாட்டூ) மேல் வந்த மோகத்தால், அதைப் போட்டுக் கொள்ள, பச்சைக் குத்தும்  பெண் வல்லுநர்களை தேடி அலைந்து சலித்து போன தேவாவிற்கு தானே கற்றுக் கொள்ளும் ஆர்வம் பிறந்தது.

சென்னையிலே பச்சைக் குத்தும் பயிற்சி மையத்தில்( டாட்டூ டிரெய்னிங் சென்டர்) சேர்ந்து கற்றுக் கொண்டு சான்றிதழுடன் வெளியே வந்தவள், பச்சைக் குத்தும் கடையில் வேலைக்கு சேர்ந்தாள். அதே ஆசையோடு கற்றுக் கொண்ட திகழும் அங்கே  வேலை செய்தாள்.

மூன்று வருடங்களாக தொடர்ந்தன இவர்களது நட்பு. பின் வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட
வாய்க்கால் தகராறில் இருவரும் ஒரு சேர வெளியே வந்தனர்.

'அடுத்து என்ன செய்யலாம்?' என இருவரும் யோசித்து கொண்டிருந்த வேளையில்,  ஊரில் நிலம் விற்று  பணம் கிடைத்தது தேவாவின் தாய்க்கு.

விஷயமறிந்த தேவா, தாயின் கை காலில் விழுந்து பணத்தை வாங்கி , கடையை வாடகைக்கு பிடித்து பச்சைக் குத்தும் கடையை ஆரம்பித்தாள்.

திகழ் பாரதிக்கு சொல்லிக் கொள்ள சொந்தம் இல்லை எல்லாமே சுயச்சை தான்.

அதனால் தேவாவிடம் 'நீயே முதல் போட்டு தொழிலை ஆரம்பி. நான் உனக்கு உதவியாக, உன்னுடன் வேலை செய்கிறேன். சம்பளம் கொடு ' என்றாள் முதலில். 

தேவாவும் திகழ் உடன் இருந்தாலே போதும் என்கிற ரீதியில் ஒத்துக் கொண்டாள்.

முதல் சிறு சிறு தடுமாற்றம்... நிறைய அடிகளும் வீழ்ச்சிகளையும் சந்தித்து புயலிலும் சாயாத மரம் போல எவ்வளவு வீழ்ச்சிகளையும் சந்தித்தும் கடையை மூடவில்லை... எவ்வித போர்களத்திலும் வீழாது போரிட்டு இன்று வெற்றியுடன் பயணிக்கின்றனர் இருவரும்.

ஐந்து வருடத்தில் ஏற்பட்ட கடன்களை அடைத்து ஊரில் அம்மாவிடம் பணத்தையும் வட்டியோடு கொடுத்து விட்டு , லேடிஸ் ஹாஸ்டலில் இருந்தவர்கள் அபார்மெண்ட்டில் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து இருவரும் ஒன்றாக வசிக்கின்றனர்

தேவ ஶ்ரீக்கு மதுரை பக்கம், தந்தை இல்லை. சின்னதாக அவர்கள் ஒதுங்கச் சொந்தமாக  ஒரு வீடு அவர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

தாய் வத்சலா, தம்பி தேவப்பிரியனுடன் சிறு கூட்டில் வசித்து வந்தவளின் தலையில் பொறுப்புகள் வந்து விழ, பிழைப்புக்காகச்  சென்னைக்கு வந்தாள்.

படிப்பு வாசம் பிடிக்காத தேவா பள்ளி பருவத்தோடு  படிப்பை மூட்டை கட்டி வைத்து விட்டு கல்லூரி பக்கம் ஒதுங்காமல் வேலைப் பார்க்க வந்து விட்டாள்.

சென்னையில் தெரிந்த  பாட்டி வீட்டில் தஞ்சம் கொண்டாள்.  தனியாக இருக்கும் அவருக்கும் அவள் துணையாகிப் போனாள்.

அவர் வீட்டிலே தங்கி வேலைக்குச் சென்று குடும்ப பாரத்தை குறைத்தவளுக்கு இடையில் வந்த  ஆசை தான் பச்சைக் குத்துவது (டாட்டூ).
அந்த ஆசை தான் அவளை  உயர்த்தில் கொண்டு  நிறுத்தியது.

முதலில் 'இதெல்லாம் வேண்டாம் ஊர்காரங்க சொந்தபந்தங்க என்ன சொல்லுவாங்க?  அவங்க முன் குடும்ப மானமே போயிடும்  எல்லாரும் தப்பா பேசுவாங்க !'  என்று முட்டு கட்டை போட்ட தாய்,  அவள் வேலைக்கு சென்று கிடைத்த வருமானத்தை  வைத்து அதனை ஏற்றுக் கொண்டார்.

பின் கடை வைக்கப் போவதாக வந்து நின்ற மகளுக்கு பணம் தர மறுத்தார். எடுத்து சொல்லச் சொல்ல  அரை மனதுடன் பணத்தை கொடுத்தார்.

வரவு இல்லாத நாளில் கடையை பூட்டிக் கொண்டு வந்து விட சொல்வார். தலையில் அடித்துக் கொண்டு அழுவார். தேவாவிற்கும் கூட விட்டு விடலாம் என்று கூட தோன்றும். ஆனாலும் வைராக்கியத்துடன் எழுந்து நின்று விட்டாள்.

ஆனாலும் வத்சலாவிற்கு இந்த பச்சை குத்துவது, உடம்பில் படம் வரைவது சுத்தமாக பிடிக்கவில்லை.

"நீ போட்டு விட்றதோட நிறுத்திக்கோ ! நீயும் போட்டுகிட்ட வெளக்கமாறு பிஞ்சு போயிடும் ! உடம்பு முழுக்க போட்டு விஹாரமா இருந்தா எவண்டி உன்னை கட்டிப்பான்?

இந்த வேலலாம் வச்சிக்காத ! முதல்ல நீ பொண்ணு போல இருக்கியா?

ஆம்பள போட்ற சட்டையும் பேண்ட்டுமா போட்டு !

முடிய வேற ஆம்பள பிள்ள போல வெட்டி வச்சிருக்க!
உன்னை பாத்தா எனக்கே பொண்ணுன்ற நினைப்பே வரல டி  ! நாள பின்ன உன்னை பொண்ணு பாக்க வரவனுக்கு எப்படி டி தோணும்? திகழு நீயாவது சொல்ல கூடாதா இவ கிட்ட ?"என்பார் வத்சலா

சென்னைக்கு வந்தாலே  இந்த சுப்ரபாதத்தை தான் பாடுவார். அவளும் அமைதியாக கேட்டுக் கொண்டு அதை அப்படியே காற்றில் பறக்க விட்டு விடுவாள்.

பள்ளி பருவத்தில் நடந்த சிறு கசப்பினால்  தன்னை பெண்ணென்று  காட்டிக் கொள்ள
அவளுக்கு விருப்பமில்லை.

ஆணை போல முடியை வெட்டிக் கொண்டு அவர்களை போல உடை அணிந்து கொண்டு திமிராகவே இருப்பாள்,  பேசுவாள் , நடந்துக் கொள்வாள்.

அதுவே அவளுக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறது. கல்யாணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை இன்று வரை.

காதல் மேல் கல்யாணத்தில் மேல் வந்த வெறுப்பே  அவளை அதிலிருந்து எட்ட வைத்திருக்கிறது.

வத்சலாவின்  பெரும் கவலையும் அது தான். தாயின் கவலை,  புலம்பலை  அழுகையை பார்த்த பின்பும்  கூட மனம் இறங்கி  வரவில்லை... அதில் அவளுக்கு பெரிதாக நாட்டம் இல்லை. இதுவே தேவாவின்  கதையாகும்.

****

திகழ் பாரதியின் தாய் இறந்து விட, தந்தையையும் அவர் மணந்து கொண்டு சிற்றன்னையை சார்ந்து வாழ்ந்து வந்தாள்.

பள்ளியிலும், கல்லூரியிலும் தகப்பன் இருக்கும் வரை படிக்க முடிந்தாலும் அது சிற்றன்னைக்கு பிடிக்கவில்லை, அவருக்கு அவள் எது செய்தாலும் எரிச்சலாக தான் இருக்கும் .

சிற்றன்னையின் சூழ்ச்சியால் கல்லூரி படிப்பை பாதியோடு நிறுத்தி விட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள்.

பச்சைக் குத்தும் இடத்தில் வரவேற்பு பெண்ணாக வேலை செய்தாள். அங்கு பச்சைக் குத்துவதை கண்டு ஆசை வந்து சிற்றன்னைக்கு தெரியாமல் கற்றுக் கொண்டு தேர்ச்சி பெற்று அதை வைத்து வேலைக்கு சென்று பணம் கொண்டு வந்து கொடுத்தாள். தந்தைக்கு பிடிக்கவில்லை என்றாலும் சிற்றன்னையின் ஆதிக்கம் அவர் வாயை மூடி விட்டது.

தந்தை நோய் வாய் பட்டு இறந்து விட்டார். சிற்றன்னையிடம் ' அண்டி இருக்க வேண்டுமா? 'என்ற யோசனையில் அவளிருக்க , அவ்வளவு கஷ்டம் வேண்டாம் என்று வேறொருவருடன் அவர் வாழ்க்கையை இணைத்துக் கொள்ள, விலகி வந்தவளுக்கு ஆறுதல் தேவா தான்.

இருவர் மட்டுமே குடும்பமாக வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் கூட்டில் இணைய போகும் பறவைகள் எதுவோ ?

******

பன்னிரெண்டாம் வகுப்பு  மாணவன் கையில் பச்சைக் குத்தி  இருப்பதை கண்ட தனிஷ், அதனை வருடி, நிமிர்ந்து  கோபத்துடன் பார்த்தான்.

தலை குனிந்து நின்றவனிடம் ஏதோ கேட்க, பதிலுக்கு அவன் ஶ்ரீ தி கடையின் பெயரைச் சொல்ல, பல்லைக் கடித்துக் கொண்டு  கோபத்துடன் ஆசிரியர்களை பிடித்து விலாசத் தொடங்கினான்.



Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2