வரன் 1






கையில் அணிந்த கடிகாரத்தை பார்த்த வண்ணம் வேக வேக எட்டுகளை வைத்து, மாணவர்கள் கூறும் காலை வணக்கங்களை சிறு தலையசைப்போடு கடந்தவள், பள்ளிக்கு வரும் மாணவர்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த முதல்வரின்  அருகே சென்று "குட்மார்னிங் மேம்" என்றாள் தனக்கே உரிதான சாரீரத்தில். 

அவரும் "குட் மார்னிங் மேகா !" என்றார் சிறு புன்னகையுடன்.  நேராக அலுவலகத்துக்குள் நுழைந்து பதிவேட்டில் தன் காலை வருகையை கையெழுத்திட்டு பதிவு செய்தவள். மீண்டும் முதல்வரை காணச் சென்றாள். மேற்பார்வைப் பார்த்து கொண்டிருந்தவரிடம் "மேம்" என்று நெருங்கினாள். " எஸ் மேகா ! வாட் யூ வான்ட்?" 


"மேம்... ஐ  நீட்  பெர்மிஷன் அட் திரியோ கிளாக்"என்று தயங்கிய படி கேட்டாள். "எதுக்கு மேகா?" எனக் கேட்டதும் தயங்கிய அவள் வதனம்  வெட்கத்தை சூடிக்கொள்ள, அவளது வதன மாற்றத்தை புரியாமல் பார்த்துக்கொண்டு  நின்றார். "இன்னைக்கு ஈவினிங் என்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்க மேம்.  'பைவ்வோ கிளாக்'  வர்றதா சொல்லிருக்காங்க. கொஞ்சம் முன்னாடி போனால் அம்மாக்கு ஹெல்ப் பண்ணலாம்னு தான்" என்று பெர்மிஷனுக்கும் வெட்கத்திற்கு   காரணத்தை சொன்னாள்.


"ஓ... இதான் மேகாவோட  வெட்கத்துக்கு காரணமா? ஒ .கே போயிட்டுவா ! ஆல்  தி பெஸ்ட் !" என்றார். " தேங்கஸ் மேம்" என்று வெளியே வந்தாள். பள்ளியில் காலை பிராத்தனையோடு  முதல் இரண்டு வகுப்புகள் முடிந்து இடைவேளை விட, ஸ்டாப் டேபிளில் பதற்றத்தோடு அமர்ந்திருந்தாள்  மேகா.


"உன் கடமை உணர்ச்சியைக் கண்டு  எனக்கு உடலெல்லாம் சிலிர்க்குது

சில்வண்டு !" தன் இரு கைகளை தேய்த்துக் கொண்டு சொன்னாள் நேகா  மேகாவின் சித்தி மகள்,  தோழியும் கூட,. தன்னை கேலி செய்தவளை முறைத்துவிட்டு பதிலேதும்  பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள் மேகா. 


அவள் தாடையை பற்றிக் கொண்டு தான் புறம் திருப்பியவள், "மேகா மேடமுக்கு  என் மேலே ஏன் இவ்வளவு கோபம்னு தெரிஞ்சிக்கலாமா?" என்றவளை  மூன்றாவது கண் இருந்தாள் எரித்திருப்பாள். அத்தனை கோபம் அவள் மேல் . 


"அம்மோ !!!  சாந்தி சாந்தி சாந்தி சக்தியே !  தங்களின் கோபத்திற்கான காரணம் தான் என்னவோ? சொல்லும் கேட்டு தங்களை கூல் படுத்துகிறேன்" என்றவளை அடிக்க எதையோ தேட எச்சரிக்கையாக எட்டி நின்றாள் நேகா.


"கோபமா  உன் மேலயா? கொலைவெறியில இருக்கேன் டி.  இன்னைக்கு என்னை பொண்ணுப் பார்க்க வர்றாங்க  நியாபகம் இருக்கா மேடம் உங்களுக்கு?" 


"எனக்கு நியாபகத்தில இருக்கறது இருக்கட்டும், மொதல்ல உங்களுக்கு  நியாபகம் இருக்கா மிஸ் மேகவர்ஷினி?" என்ற அமர்த்தலாக கேட்டாள். அவள் அமைதியாக இருக்க இவளே தொடர்ந்தாள். " இன்னைக்கு உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்க டி, வீட்ல ரெஸ்ட் எடுத்திருக்கலாம் பார்லர்  போயிருக்கலாம்..  அத விட்டுட்டு கடமை கண்ணியம்  லொட்டு   லொசுக்கணு சொல்லி ஸ்கூலுக்கு வந்திருக்க? அறிவு இருக்கா டி  உனக்கு ?" என  மேகாவை  திட்டினாள்.


"நேகா ! கொஞ்சம் நேர்வஸ் இருக்கு டி.  அது மட்டுமில்ல, பயமாவும் இருக்கு டி. நான் பாட்டுக்கு மாப்பிள்ளையோட போட்டோவ கூட  பார்க்காம, அப்பா கிட்ட வர சொல்லுங்கப்பானு சொல்லிட்டேன் மாப்பிள்ளை மட்டும் எனக்கு பிடிச்ச மாதிரி இல்லேனா என்னடி பண்றது? பிடிக்கல சொன்னால், அப்போ எதுக்கு வர சொன்னன்னு அப்பா கேட்பாரே, இப்போ என்ன டி பண்றது? அந்த பயத்தோட வீட்ல இருக்க முடியாம தான் இங்க வந்தேன்" என்றாள் பதற்றத்தோடு.


"நேர்வஸ்ஸா, இருக்குனு சொன்ன ஓகே. ஆல்மோஸ்ட் எல்லா பொண்ணுங்களுக்கு  இந்த நேர்வஸ் இருக்கும். எதுக்கு நீ சம்மந்தமில்லாம பயப்படுற நீ? போட்டோ பார்த்து வர சொல்லுங்க தான சொன்ன? பிடிச்சிருக்கு சொல்லலயே ! போட்டோ பார்த்து ஓகேனு சொல்லிட முடியுமா? பேசி பார்க்கணும் அவர் கேரக்டர் எப்படினு தெரிஞ்சிக்க வேண்டாமா?" என்றவளை  ஆயாசமாக பார்த்தாள் மேகா.


"இங்க பாரு மேகா ! பெரியப்பாவை பார்த்து பயப்படாத. மாப்பிள்ளை உனக்கு பிடிக்கலேன்னா பிடிக்கலனு சொல்லு ! பெரியப்பா, ஏன் வர சொன்னனு கேட்டால், சொல்லு அவர் கேரக்டர்  தெரிஞ்சிக்கனு.வாயில கொழுக்கட்டை  இருக்கற மாதிரி அமைதியா இருந்து அவர் கிட்ட திட்டுவாங்காத என்ன !" என்றவளை மீண்டும் கொலவெறியாக பார்த்தாள்.


"இப்போ என்னடி ?"


"இதுக்கெல்லாம் யாரு டி காரணம்?" என்றாள் கோபமாக, " ஆமா, யாரு டி காரணம்?"அதே கேள்வியை நேகா அவளிடம் மீண்டும் கேட்க, "கொப்பமவளே ! எல்லாம் உன்னால தான் டி. அக்கா புருசனை பார்க்கறேன் என் வருங்கால மாமனை பார்க்கறேன், என்னையும் பார்க்க விடாம மொத்தம்மா கிழிச்சி புட்டு இப்ப வந்து அட்வைஸ் பண்றீயா?" என்று அவள் மேல் சிவப்பு நிற இங்க ஊத்த செல்ல, "வேணா மேகி !! அது ஏதோ ஆர்வத்துல பார்க்கறேன் சொல்லி பிடிச்சி இழுத்ததுல கிழிச்சிருச்சி அதுக்கு இப்படி எல்லாம்  இங்கை ஊத்தி ஹோலி பண்டிகைய இப்ப கொண்டாட கூடாது. இப்போ நாம டீச்சர்ஸ் மறந்திடாத !" என்றவளை  பாவம் பார்த்தவள்,  கதற கதற கிள்ளி தன் கோபத்தை ஆற்றிக் கொண்டாள் 'மேகா என்கிற மேகவர்ஷினி'.

 

***

அளந்துப் பார்த்து  கட்டின வீட்டை தான் பல முறை அளந்து பார்த்து கொண்டிருந்தான் நம் நாயகன் ஆரன். இருபத்தியேழு வயது கொண்ட அந்த இளந்தாரி, பதின்ம வயது இளைஞனைப் போல, உள்ளுக்குள் பரபரப்பாகவும் துடிப்பாகவும்,  காலையில் தந்தையிடம் தனக்கு வேண்டியதை சொல்லி விட்டு மாலையிலே தந்தையை எதிர்பார்த்து இருக்கும் குழந்தையை போல அவனது மனம் எதிர்பார்த்தது.'எல்லாமே இப்பொழுதே நடந்தாக வேண்டும்' என்ற துடிப்பும் இருக்க, 'அதற்கு  எல்லாம் காலம் நேரம் இருக்கிறது ' என்று அவனை அடக்கி வைத்திருக்கின்றனர் அவர்களது வீட்டார்கள்.


வீட்டுக்குள்ளே வளைய வந்தவனை ஒரு மாதிரியாகத் தான் பார்த்துச் சென்றனர்  வீட்டிலுள்ளவர்கள். அவனது தவிப்பெல்லாம் அவர்களுக்கு  எங்கே புரிய போகுது. அவனை அனைவரும் பைத்தியக்காரனை போல பார்த்தனர்

கூடத்தையே நூறு முறை சுற்றி வந்து விட்டான். சின்ன முள் நகன்ற பாடு  இல்லை. 'நீ தலைகீழாக நின்று  தண்ணீயே குடித்தாலும் நான் மெல்ல தான் நகருவேன்' என்ற வீம்பாக, மெல்ல மெல்ல நகர, அதனைக் கண்டு கொல வெறியானான்.


" டேய் அண்ணா !  இந்தக் கிளாக்  ஸ்லோவா  சுத்துனு நினைக்கறேன். கரெட்டான டைம் என்னானு பாரு !" என்றான்.  டிவியை பார்த்து  கொண்டிருந்தவன் நகராது அருகே  இருந்த அலைபேசியையும் கடிகாரத்தையும் பார்த்து அசட்டையாக, "அதெல்லாம்  சரியா தான் ஓடுது !" என்றான்.


'சரியா ஓடுதாஆ?' 


"பச்... அம்மா !  உன் வீட்டுக்கு கடிகாரம் என்ன ஓடவே மாட்டிகிது?" சலிப்பாக கேட்டான். " எதே உன் வீட்டு கடிகாரமா? யாமோய் ! பொண்ணு வீட்ல,  மாப்பிள்ளை வீட்டோட  தான் இருக்கணும் கண்டிஷன் எதுவும் போட்டங்களா? இப்பவே இவன் உங்க வீடு பிரிச்சி பேசுறான். டேய் ஆரா ! உனக்கு என்ன டா ஆச்சி?"


"பச்... பொண்ணு பார்க்கற சாங்கியத்த சாய்ந்தரம் தான் வைக்கணும்னு எவன் ரூல்ஸ் போட்டான்? காலையில் பார்த்தால்  கொலகுத்தமாகிடுமா என்ன? சாய்ந்திரம் வரைக்கும் வெயிட் பண்ண வைக்கறீங்களே டா என்னை !" என்று கடுப்பில் புலம்பினான்.

அவன் முதுகில் ஒன்று வைத்தார் தேவகி அவனது தாய்."  உனக்கு என்ன டா அவ்வளவு அவசரம்? காலையிலே ஏழு டூ எட்டே நல்ல நேரம்  முடிஞ்சிருச்சி. சாய்ந்தரம் ஐந்து மணிக்கு மேலே தான் நல்ல நேரம் இருக்கு. அதான் அப்பா ஐஞ்சு மணிக்கு மேல போலாம் சொன்னார்" 


"அதான் காலையிலே  ஏழு டூ எட்டு நல்ல நேரம் தான, அப்போ போயிருக்கலாம்ல" என்றவனை கண்டு கடுப்பானவர், " ஆமா டா முறை வாசல் செய்றதுக்கு  முன்னாடியே அவங்க வீட்டுக்கு தட்டோட போயி நின்னு அம்மா தாயே  பொண்ணு குடுங்க கேட்கணுமா? மாப்பிள்ளை வீட்டுக்காரனுங்க  கெத்தா இருக்க வேணாமா? ஐஞ்சு மணிக்கு வரேன்  சொல்லிட்டு ஆறு மணிக்குப் போய் நிக்கணும், இல்லேன்னா மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள என்னனு நினைப்பாங்க !" பையனை பெத்தவர் என்று  கர்வமாக மொழிய, " எதே ! ஆறு மணிக்கு  போகணுமா? கொல விழுகும், ஐஞ்சு மணிக்கு அங்க இருக்கணும். எதுக்கு இவனை, பப்புவ எல்லாம் லீவ் போட சொன்னேன் லேட் ஆகிட கூடாதுனு தான ! நாலு நாலறைக்கு  எல்லாம் இங்க இருந்து கிளம்பறோம் சம்ஜே !"  என்றவனைக் கண்டு தலையில் அடித்து கொண்டனர்.


"தம்பி ஆரா ! பொண்ணு பார்க்க போறது, நிச்சயம் பண்றது, பொண்ணு கிட்ட கடலைப் போடுறது, கல்யாணம் பண்றது வரைக்கும் நல்லா தான் இருக்கும். அதுக்கு மேல தான்  ஏன்டா இதெல்லாம்  பண்ணினோம்னு ஆயிடும் பார்த்துக்கடா ! அனுபவஸ்தன்  சொல்றேன் " என்று அறிவுரை சொல்ல,


"ஓ.. அண்ணா நீ அனுபவஸ்தனா ? இரு அண்ணி கிட்ட  உண்மையானு கேட்டுடுவோம், அண்ணிணி..." எனக் கத்தவும் உள்ளிருந்து வந்தாள் பிரதியூஷா. 

"என்ன தம்பி கூப்பிட்டீங்க?" என்று ஆர்வமாக வந்தாள். 'சொல்லாத'  என்று  சைகைக் காட்டும் அண்ணனை நமட்டுச் சிரிப்புடன் பார்த்தவன்" அண்ணி, அனுபவஸ்தன் கல்யாண வாழ்க்கை பத்தி சொல்றான் என்னானு கேளுங்க"தீரனை மாட்டிவிட்டு பழிப்புக் காட்டினான்.


" அப்படி என்ன அனுபவத்தை  உங்க தம்பிக்கு சொன்னீங்க தீரா?"என அவள் சாதாரணமாக கேட்டாளும் அவனுக்கு  மிரட்டவது போல தெரிய,  கொஞ்சம் ஜெர்க்கானவன்." இல்ல பிரதிமா,  கல்யாணம் பண்ணா வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும், நம்ம வாழ்க்கையில நமக்கு வர ஒயிப்  தான் இரண்டாவது தேவதைனு,  அவங்க நம்மல நல்லா பார்த்துப்பாங்கனு சொன்னேன் மா" என்று சமாளித்தவனை ஆரனும் தேவகியும்  கண்டுப் பொங்கி வந்த  சிரிப்பை அடக்க அரும்பாடு பட்டனர்.


"நீங்களாங்க அப்படி சொன்னீங்க? என்னால நம்ப முடியலயே ! "தாடையில் கைவைத்து ஆச்சரியப்பட்டவள், அவனது இறைஞ்சும் பார்வையை கண்டு"  இருந்தாலும் என்னை தேவதைனு சொன்னதுக்காக உங்களை நம்புறேன் தீரா !"  என்றாள் பெரிய மனது பண்ணி,  அப்போது தான் தீரனுக்கும் உயிரே வர்ற " அண்ணா !   நீ கிரெட் எஸ்கேப்  " என்றான்.


"இவன வாய் மூடிட்டு இருக்க சொல்லு மா ! இவனுக்கு பொண்ணு பார்க்க லீவ் போட்டால், எனக்கு இவன் டிவோர்ஸ் வாங்கி குடுத்திடுவான் போல  !" என்று புலம்பிய தீராவை அடக்கியவர், "பெத்திருக்கேன் பாரு  புள்ளைங்கனு உங்களை எல்லாம் லீவ் போட சொல்லிருக்க கூடாது டா . பெர்மிஷன் போட்டு மூணு மணிக்கு வாங்க டா சொல்லிருக்கணும். இப்படி வளர்ந்தும் உசிர வாங்குவானுங்கனு தெரியாம போச்சி" என்று தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்து விட்டார். ஆரனும் தன் தமயனை முறைத்து விட்டு அறைக்குள் சென்று மெத்தையில் விழுந்தவன் தன் அலைப்பேசியை கையில் எடுத்தான்.


அண்ணியின் தயவால்  கார்த்திக்கோடு நிற்கும் மேகவர்ஷினியின் புகைப்படத்தைத் தன் போனில் சேமித்து வைத்திருந்தவன்.திரையை பெரிதாக்கி  அவளது கண்கள்  மூக்கு  உதடுகள் என ஒவ்வொரு அங்கமாகப் பார்த்து ரசித்தான். திரையில் அவளது முகத்திற்கு முத்தம் வைத்தவன் "ஆள கொல்ற டி  என் ராட்சஷி !   நீ   மட்டும்  இன்னக்கி ஓகேன்னு சொல்லிட்ட, அடுத்த  நிமிஷமே ! உன்னை  தூக்கிட்டு வந்து  தாலி கட்டி கல்யாணம் முடிச்சி,  என் கைக்குள்ள உன்னை வச்சிக்கணும்  தோணுது டி என் சக்கரையே ! ஆனா என்ன பண்ண,  இந்த பெருசுங்க ஒத்துக்கணுமே சம்பிரதாயம் சாங்கியம் பேசுங்களே ! அரசு அதிகாரியான என்னை ஆள் கடத்தல் அதிகாரியா ஆகிட்ட  டி,  அந்த அளவுக்கு என்னை  லவ் டெரரிட்டீஸ்ட்டா மாத்துற டி சக்கரை நீ !" எனப் புலம்பிக்  கொண்டே  உறங்கியும் போனான்.


நான்கு மணியளவில் தேவகி அவனை எழும்பினார்." காலையிலே இருந்து கால்ல சுடுதண்ணிய ஊத்தினது போல சுத்தின? இப்போ  என்ன இவ்வளவு நேரம் தூங்கற? போய் கிளம்புடா நேரமாச்சி " என்றதும் அடித்து பிடித்து எழுந்தவன்  அவசரமாகக் கிளம்பி வெளியே வந்தான். அனைவரும்  அங்கு தயாராகி இருக்க , குடும்பமாகப் பெண் பார்க்கச்  சென்றனர்.


அரக்கு வண்ண பட்டுப்புடவை,  அவள் நிறத்திற்கு கூடுதல் அழகை சேர்த்து. ஒப்பனையின்றி அழகாக இருத்தாள் அவ்வனிதை.

ஆரனின் வீட்டிலிருந்து அனைவரும் வந்துவிட, அவளுக்கோ உள்ளுக்குள் ஏதோ கரைவது கரைப்பதுமாக  இருந்தது.


அவர்களை வரவேற்று ஆகாரமளித்து உபசரித்தனர். பிறகு பெண்ணை அழைத்து வர சொல்ல, மென்பாதம் வைத்து மெல்லிழையாள் வந்து அனைவருக்கும் வணக்கம் வைத்தாள். மறந்தும் கூட மாப்பிள்ளை பக்கம் திரும்பவில்லை.'தன்னை பார்ப்பாள்' என்ற எண்ணிக் காத்திருந்தவனுக்கு ஏமாற்றமே கிட்ட, வேறு வழியின்றி அனைவரின் முன் "நான் பொண்ணுகிட்ட கொஞ்சம் பேசணும்"என்றான் பட்டென. அவன் அவ்வாறு கேட்டதும்  தந்தையைப் பார்த்தவளை கண்டு மேலும் கடுப்பானான் ஆரன். 


ஆரனின் தந்தை குணசேகரன் தன் மகனை முறைக்காது தன் மனைவியை முறைத்தார். அவரும் தன் புதல்வனைப் பார்க்க, அவனோ 'நான் பார்த்துக் கொள்வதாக' கண்களை மூடி திறந்தான்.


இருவர் மட்டும்  மாடியில் தனித்திருக்க, அப்பொழுதும் கூட அவள், அவனை பாராது தலைகுனிந்து நின்றாள்.

' இது வேலைக்கு ஆகாது ஆரா ! ஏதாவது செய்டா !' என்றவன் "சக்கர " என்றான் பட்டென்று. அவளும் கூட்டுக்குள் இருந்து எட்டிப் பார்க்கும் நத்தையாட்டம் சட்டென நிமிர்ந்து ' என்ன சொன்னான்?' என்பது போல' பே 'வென பார்த்தாள். அவள் விழிப்பதை  கண்டு, கன்ன மேட்டை நாவல் உயர்த்தி, புருவம் ஒன்றை தூக்கி சிரிக்க, மீண்டும் தலைகுனிந்து கொண்டாள். "பச்... பொண்ணுப் பார்க்க வந்ததே உங்க முகத்தை நானும் என் முகத்தை நீங்களும் பார்த்து ஒருத்தருக்கொருத்தர் பேசி தெரிஞ்சிக்க தான். இப்படி தலை குனிஞ்சி நின்னா எப்படி தாங்க உங்க முகத்தை பார்த்து பேசுறது? கொஞ்சம் நிமிர்ந்து என்னை தான் பாருங்களேன் ப்ளீஸ்"என்றான் அழுத்தமாக,


அவளும் கழுதுக்கு வலிக் கொடுக்காமல் தலையை  நிமிர்த்திப் பார்த்தவள், அதிர்ந்துப் போனாள். இதுவரை இருந்த தயக்கத்தை எல்லாம் மென்று முழுங்கியது போல அவனிடம் பேசினாள், "நீங்க கார்த்திக் அப்பா தான? நீங்க தான் மாப்பிள்ளையா?" அதிர்ச்சி மாறாமல் கேட்டாள்."இல்லங்க நான் வந்து..." எனப் பேச வந்தவனை தடுத்தவள், "உங்க ஒயிப், உங்களை டிவோர்ஸ் பண்ணிட்டாங்களா? இல்ல இறந்துட்டாங்களா?" எனக் கேட்டவள் மேலும் அவளே தொடர்ந்து "அப்போ செக்கண்ட்  மேரேஜ் பண்ணிக்க தான் என்னை பார்க்க வந்தீங்களா?"அவனைப் பேச விடாது வாயில் கை வைத்து அதிர்ச்சியானவளின் கண்களில் நீர் அனுமதியின்றி வர, அதைக் கண்டவன் தலையில் அடித்துக்கொண்டான்.

Comments

Post a Comment

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

இதயம் - 2